ஊழல் என்பது சமூகத்தைப் பீடித்திருக்கும் கொடிய நோய். இதனைச் சொன்னவர் எவரென்று தேட வேண்டியதில்லை. ஏனென்றால், வளர்ச்சியை எதிர்நோக்கியிருக்கும் எந்தவொரு இடத்திலும் இப்படிப்பட்ட சொற்களுக்குக் கண்டிப்பாக ஓரிடமுண்டு.
இதிலிருந்தே, ஊழல் என்பது ஒட்டுமொத்த உலகிலும் தன் கிளையைப் பரப்பியிருக்கிறது என்று அறியலாம்.
’ஊழலை ஒழிப்போம்’ என்பது உதட்டளவில் நின்றுவிடாமல், உள்ளத்திலும் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், எந்தவொரு பணியிலும் அதன் முழுமையான நோக்கைச் செயல்படுத்த முடியும்.
ஆனால், உலகம் முழுக்க விரவிக் கிடக்கும் ஊழல்களால் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஒரு நாடு உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதைத் தீர்மானிக்கும் காரணியாகவும் அதுவே விளங்குகிறது.
ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் எனும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி, 2020ஆம் ஆண்டுக்கான ஊழல் இல்லா நாடுகள் பட்டியலில் இந்தியா 86-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, டென்மார்க், பின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகியன முதல் நான்கு இடங்களை வகிக்கின்றன.
தெற்கு சூடான், சோமாலியா, சிரியா, ஏமன், வெனிசூலா ஆகியன 180 முதல் 176ஆவது இடங்களைப் பெற்றிருக்கின்றன.
இப்பட்டியலில் இடம்பெற்ற 180 நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் சுமார் 50-க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றன.
பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல வளர்ந்த நாடுகள் கூட 10 முதல் 25-வது இடங்களுக்குள் வருவது, வளரும் நாடுகளில் மட்டுமே ஊழல் மலிந்திருக்கிறது எனும் எண்ணத்தை சுக்குநூறாக உடைக்கிறது.
ஊழல் கொடியது!
உலகம் முழுவதும் சுமார் 2.6 ட்ரில்லியன் டாலர்கள் ஊழல் தொகையாகக் கைமாற்றப்படுகிறது என்கிறது உலக பொருளாதாரக் கூட்டமைப்பு. இது, உலகத்தின் ஜிடிபியில் 5%க்கும் அதிகம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வருவாய் ஈட்டும் நாடுகளில் ஊழல் குறைவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது சர்வதேச பண நிதியம்.
அதே நேரத்தில், பட்டியலில் முதன்மையான இடங்களைப் பிடித்த நாடுகளுக்கு இணையாகப் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ள சில நாடுகள் ஊழலால் அவ்வருவாயை இழந்து வருவதாகவும் குறிப்பிட்டது.
ஊழல் ஒரு சிக்கலான சமூக, பொருளாதார, அரசியல் சார்ந்த பிரச்சனையாகும்.
அது வறுமையின் எல்லையை விரிவாக்கும் திறன் படைத்ததாகவும் இருப்பது மற்றுமொரு கொடுமை. அரசு நிர்வாகத்தின் நிலையற்ற தன்மைக்கும் பொருளாதாரச் சீர்குலைவுக்கும் கூட அதுவே காரணம்.
ஒரு தனிநபர் தான் சார்ந்த பணியின் பொருட்டு கையூட்டு பெறுவது முதல் சர்வதேச அளவில் அமைப்புகள், நிறுவனங்கள், சில அரசுகள் இந்நடவடிக்கையில் ஈடுபடுவது வரை அனைத்துமே ஊழல் எனும் ஒரு குடையின் கீழ் அடங்கும்.
ஆனால், அரசுத் துறைகளில் பணியாற்றுபவர்கள் தங்கள் பணியைச் செய்வதற்காகப் பணம் பெற்றுக்கொள்வதும், ஒப்பந்தப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பணத்திற்காகத் தங்களது பணியின் தரத்தைக் குறைத்துக்கொள்வதும் மட்டுமே ஊழலாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கையும் கூட கணிசமாக உயர்ந்து வருகிறது.
அந்நிய நாடுகளில் முதலீடு மேற்கொள்வதிலும் கூட ஊழல் நிகழ்கிறது என்பது ஐநாவின் கருத்து. இதனால், ஊழல் என்பது எப்போதும் குற்ற உலகத்தின் நிழலிலேயே உள்ளது. அதன் பின்னிருப்பவர்கள் பெறும் வளர்ச்சி, நியாயமாகப் பெருமளவிலான மக்கள் பெற வேண்டிய வளர்ச்சியைச் சிதைப்பதால் கிடைப்பதுதான்.
ஒரு நாட்டில் நடத்தப்படும் தேர்தல் முதல் அதன் எதிர்கால வளர்ச்சி செயல்பாடுகளுக்கான திட்டமிடல் வரை எல்லாவற்றிலும் ஊழல் தன் தடத்தைப் பதிப்பதால் இழப்புகள் ஏராளம். அது, எதிர்காலத் தலைமுறையின் காலத்திற்குப் பின்னும் தொடர்வதாக அமைவது பெருங்கொடுமை.
கொரோனாவும் ஊழலும்!
ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனலின் பட்டியலில் முதன்மையாக உள்ள பல நாடுகள் பெருமளவிலான தொகையை சுகாதாரத்திற்கும் கல்விக்கும் ஒதுக்குகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, அத்துறைகளில் பெருகிவரும் தனியார் ஆதிக்கம் பெருமளவில் ஊழலை வளர்த்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனாவில் கூட ஊழல் தன் கரங்களைப் பதிக்கத் தவறவில்லை.
‘கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என்று சொல்லாமல் இருக்கப் பணம் கொடுக்க வேண்டியிருந்தது’ என்று கோவிட்-19 சோதனைக்காகச் சில மருத்துவமனைகளுக்குச் சென்ற நோயாளிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.
வெண்டிலேட்டர், மருந்துகள் பெறுவதற்குக் கூட லஞ்சம் கொடுத்ததாகச் சொன்னார்கள் சிலர்.
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பது முதல் தனிமைப்படுத்துதல் மையங்களுக்குச் செல்வது வரையில் அனைத்திலும் பணமே பிரதான இடம் வகித்தது என்று சொன்னவர்களும் உண்டு.
மலேரியா தடுப்பு மருந்துகள் கொரோனாவைக் குணப்படுத்தும் என்று சொல்லி அதனைப் பதுக்கி வைத்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் கூட உண்டு.
கோவிட்-19 தடுப்புக்காகப் பெருந்தொகையை உலகமே செலவழித்து வரும் நிலையில், அதையே லாபமாக நினைத்து ஊழலில் ஈடுபடும் கும்பல்களும் நிறைந்திருப்பதைச் சொல்கின்றன இச்சம்பவங்கள்.
தங்களுக்குக் கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளை வளர்ந்த நாடுகள் பெற்றுக்கொண்டதாகச் சில ஆப்பிரிக்க நாடுகள் புகார் தெரிவித்ததும் கூட இதில் சேரும்.
மொத்தத்தில், எல்லா மட்டங்களிலும் இருக்கும் ஊழலால் உலகின் சமநிலை பாதிக்கப்படுவதென்பது மறுக்க முடியாத உண்மை.
எல்லாவற்றிலும் பாதிப்பு!
லஞ்சப் பணம் பெறுவதற்காக ஒரு பணியாளர் தன் பணியைக் கிடப்பில் போடப்படுவதால் யாரோ ஒருவரின் நேரம் விரயமாகும். ஊழல் பணத்தினால் ஒருவர் பெறும் பொருளாதார வளம், அவரைச் சுற்றியுள்ளவர்களின் மனவளத்தையும் பாதிக்கும்.
இதனால், நேர்மை என்பதற்கான இடம் சமூகத்தில் அற்றுப்போகும். ஊழலின் காரணமாக வளர்ச்சிப் பணிகள் முழுமை பெறாது; அதன் தரம் சீர்குலையும். அரசின் சொத்துகள் சிதைக்கப்படும்.
இந்தியாவில் தனிநபரின் கல்வி, சுகாதாரம் முதல் பொருளாதார வளர்ச்சி வரை எல்லாருக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. இதற்கும் ஊழலே ஆதியாக விளங்குகிறது.
இதையும் மீறி நம் நாடு வளர்ச்சி பெறுவதைப் பெருமையாகக் கருதாமல், ஊழலை ஒழித்தால் அபரிமிதமான விளைவைப் பெற முடியுமென்பதைச் சிந்திக்க வேண்டும்.
ஊழல் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதே இன்றைய சமூகத்தின் மனநிலை. அதனை இல்லாமல் ஆக்குவது ஒரு நாளில் நிகழாது.
தனிநபரின் முன்னேற்றத்தை மட்டுமே ஊட்டி வளர்த்த காரணத்தால், கடந்த 50 ஆண்டுகளில் ஊழல் பெற்றுள்ள விஸ்வரூபத்தை வரையறுக்க முடியாது.
அதன் வளர்ச்சியைக் கீழே சாய்க்க, எதிர்காலத் தலைமுறைக்கு நல்லன கற்றுத் தர வேண்டும். ஊழலை எதிர்ப்பதால் ஒட்டுமொத்த சமூகமே மேலெழும் எனும் உண்மையைப் புரிய வைக்க வேண்டும்.
2005ஆம் ஆண்டு முதல் டிசம்பர்9ஆம் தேதியை சர்வதேச ஊழல் ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறது ஐநா. ‘ஊழலை ஒழிப்போம் என்பது நமது உரிமை, நமது நிலைப்பாடு’ எனும் நோக்குடன் இந்நாளுக்கான நோக்கத்தைப் பூர்த்தி செய்வோம்!
- பா.உதய்