தமிழக செவிலியருக்கு லண்டனின் ‘நைட்டிங்கேல்’ விருது!

மதுரை சிலைமானைச் சேர்ந்த ஆண் செவிலியர் டேனியல் விஜயராஜூக்கு லண்டனின் உயரிய விருதான ‘நைட்டிங்கேல்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்றது குறித்து நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார் டேனியல் விஜயராஜ்.

“1990-ல் அமெரிக்கன் கல்லுாரியில் பி.ஏ. பொருளாதாரம், 1993-ல் பசுமலை சி.எஸ்.ஐ. கல்லுாரியில் நர்சிங் முடித்தேன்.

2001 மே மாதம் லண்டனில் உள்ள ஜேம்ஸ்குக் பல்கலைகழக மருத்துவமனையில் செவிலியராக சேர்ந்தேன்.

அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிகிறேன். கொரோனா காலகட்டத்தில் மிக வேதனையான நாட்களைக் கடந்து வந்தோம்.

நீரிழிவு, மாரடைப்பு நோயாளிகளுக்கு ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ சிகிச்சை அளிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளேன்.

வார்டுக்கு வரும் செவிலிய மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன். கொரோனா பாதிக்கப்பட்ட இரண்டு நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தேன். இதனால் நானும், மனைவி, பிள்ளையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டோம்.

குணமடைந்த இரு நோயாளிகளும் எனது சேவையைப் பாராட்டி மருத்துவமனை மூலம் அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஓராண்டில் நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் கடிதங்களின் அடிப்படையில் விருதுக்கு செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஒவ்வொரு ஆண்டும் செவிலியர்களின் சேவையைப் பாராட்டி லண்டனின் உயரிய விருதான ‘நைட்டிங்கேல்’ விருது வழங்கப்படும்.

2020-ல் எனது சேவைக்கான விருது, இரு நாட்களுக்கு முன் லண்டனில் வழங்கப்பட்டது.

ஏழு பிரிவுகளின் கீழ் உள்ள இதில் எனக்கு நோயாளிகளைப் பாதுகாக்கும் சிறந்த பிரிவின் கீழ் விருது கிடைத்தது பெருமையாக உள்ளது.

மதுரை சிலைமான் அருகே கீழடியில் பிறந்து தமிழில் படித்து வளர்ந்தேன்.

அம்மா சரோஜினி ஆசிரியர், அப்பா விஜயராஜ் காவல்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.

தற்போது லண்டன் குடிமகனாக இருந்தாலும் மதுரைக்காரன் என்று சொல்வதில் பெருமையாக உள்ளது.

நோயாளிகளை கவனிப்பதில் தான் மனதிருப்தி கிடைக்கிறது. எனக்கு கிடைத்த பெரிய பதவிகளை விட்டு கொடுத்தேன்.

அதனால் ஓய்வு பெறும் வரை செவிலியராக எனது பணியை தொடர்வேன். எனது பெற்றோருக்கும் ஒரு செவிலியராக சேவை செய்தது திருப்தியாக உள்ளது.” எனக் கூறுகிறார் அந்தச் செவிலியர். வாழ்த்துகள் டேனியல் விஜயராஜ்.

You might also like