சர்வதேச திருநங்கையர் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஸ்ருதி சித்தாரா!

சர்வதேச அளவில் நடந்த மிஸ் திருநங்கையர் யுனிவர்ஸ் பட்டத்திற்கான போட்டியில் கலந்து கொண்டார் கேரளத்தைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா. தனக்கு முதல் 5 இடங்களில் ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவருக்கு மிஸ் குளோபல் யுனிவர்ஸ் பட்டமே கிடைத்து விட்டது ஆச்சரியம்.

டிசம்பர் 1 ஆம் தேதியன்று மதியம் 1 மணிக்கு ஆன்லைன் வழியாக நடந்த நிகழ்வுக்கான விருது அறிவிக்கப்பட்டது.

“எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான் இந்த உயரத்தை எதிர்பார்க்கவில்லை. பல மாதங்கள் கடுமையாக முயற்சி செய்து அழகிப் போட்டியில் கலந்துகொண்டேன். அதற்கு எல்லாம் இப்போது பலன் கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ஸ்ருதி.

உலகம் முழுவதும் உள்ள மக்களும், நண்பர்கள் மற்றும் உறவினர்களும் அவரது வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

“வெற்றிச் செய்தி வந்தபோது நான் என் சொந்த ஊரான வைக்கத்தில் இருந்தேன். என்னைச் சுற்றியிருந்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்” என்கிறார்.

“அழகிப் போட்டி பல நாட்கள் தொடர்ந்து நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் சமூக வலைத்தளங்களின் மூலம் தொடர்பில் இருந்தோம்.  நாங்கள் யாரும் நேரடியாகப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. இணையம் வழியாகக் கலந்துகொண்டோம்.

போட்டி நேரில் நடந்திருந்தால், அது லண்டனில் நடந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆன்லைன் போட்டியும் கடுமையாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் ஸ்ருதி.

மிகவும் உரையாடக்கூடிய அழகியாக ஸ்ருதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் கனடா நாட்டு அழகிகள் பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே ஸ்ருதி, சமூக நீதித்துறையில் உள்ள திருநங்கையர் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். அதன் சார்பில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களிடையே பேசியிருக்கிறார்.

“நாங்கள் எல்லோரையும் போலச் சாதாரணமானவர்கள் மற்றும் சமூகத்தில் இணையாக உள்ளவர்கள் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.

பலரும் தங்களது பிரச்சினைகளைப் பற்றி என்னிடம் பேசத் தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்தப் பட்டத்தின் மூலம் என்னைப் போன்ற பலருக்கும் நான் நம்பிக்கையையும் துணிச்சலையும் வழங்கமுடியும் என்று நினைக்கிறேன்” என்கிறார் ஸ்ருதி.

அழகி ஸ்ருதி சித்தாராவுக்கு வாழ்த்துகள்!

பா. மகிழ்மதி

07.12.2021  11 : 50 A.M

You might also like