தன்னை அறிவதே உண்மையான இன்பம்!

“எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு. ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு, மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன்” என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அந்த இருவரும் இணைந்து… அதாவது, கவியரசரின் தயாரிப்பில் சந்திரபாபு நடிக்க உருவான படம்தான் ‘கவலை இல்லாத மனிதன்’.

இந்தப் படத்தை ஆரம்பித்தபிறகுதான் கவிஞர் கவலையுள்ள மனிதன் ஆனார் என்றும் சொல்வார் எம்.எஸ்.வி.

சந்திரபாபு பாடிய பாடல்கள், மேற்கத்திய பாணியில், துள்ளல் இசையில் வரும் என்று முத்திரை விழுந்திருந்த காலக்கட்டம் அது.

அந்த முத்திரைகள் ஏதுமின்றி தத்துவமாக ஒரு பாட்டைப் போடுங்கள் என்று எம்.எஸ்.வி.யிடம் கேட்டுக்கொண்டார் சந்திரபாபு.

அந்தச் சமயம் கவியரசரின் நெருங்கிய நண்பரான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இளம் வயதிலேயே மரணமடைய மனம் உடைந்துபோனார் கண்ணதாசன்.

அவருக்கு ஆறுதல் சொல்லும்விதமாக,

“பெரிய மேதையான பட்டுக்கோட்டை நல்ல புகழோடு இருக்கும்போதே மறைந்து போனார். அவரைப்போல நாமும் போகவேண்டிய நாள் வரும். நம்முடைய மறைவுக்குப் பின்னும் எல்லாரும் வருந்தி அழவேண்டும்…”

-என்று சந்திரபாபு கூற, அப்போது பிறந்த அற்புதமான தத்துவப் பாடல்தான் “பிறக்கும்போதும் அழுகின்றாய்” என்ற இந்தப்பாடல்.

புதிய உலகத்தில் கண் திறந்து பிறக்கும்போதும் அழுகின்றோம்.

மரணம் நெருங்கும் வேளையிலும், மரணத்தை எண்ணியோ, உறவுகளை பாதியில் விட்டுப் பிரியும் எண்ணத்திலோ அழுகிறோம்.

ஒரு நாளாவது கவலை இல்லாமல் சிரித்தபடி இந்த வாழ்வைக் கொண்டாடினோமா? என்று கேட்கிறார் கண்ணதாசன்.

“இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்,
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்”
என்ற இரண்டு வரிகள் ஆயிரம் அர்த்தம் பொதிந்தவை.

அன்னையின் கைகளில் ஆடுவதும், கன்னியின் கைகளில் சாய்வதும் இன்பம்தான். ஆனால் உண்மையான இன்பம் என்பது தன்னை அறிவது. பேரின்பம் என்பது சுயநலம் தொலைப்பது என்று பாடலை நிறைவு செய்கிறார்.

பிறக்கும்போதும் அழுகின்றாய்,
இறக்கும்போதும் அழுகின்றாய்,
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே.

(பிறக்கும்போதும்)

இரவின் கண்ணீர் பனித்துளி என்பார்,
முகிலின் கண்ணீர் மழை எனச் சொல்வார்,
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்,
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

(பிறக்கும்போதும்)

அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்

(பிறக்கும்போதும்)

  • நன்றி: முகநூல் பதிவு
You might also like