பேச்சுலர் – தமிழ் சினிமாவின் நிகழ்கால அற்புதம்!

மேலோட்டமாகக் கதை சொல்வது போலத் தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நுணுக்கமாகச் சில விஷயங்களைப் பொதித்து வைத்திருக்கும் திரைக்கதைகள் மிகத் தாமதமாகச் சிலாகிக்கப்படும் அல்லது ஒரு சிலரால் மட்டும் கொண்டாடப்பட்டு மறக்கப்படும்.

அந்த வரிசையில் சேரும் ‘பேச்சுலர்’ திரைப்படம் எத்தகைய வரவேற்பை எதிர்காலத்தில் பெறும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி!

ஜி.வி.பிரகாஷ்குமார், திவ்யபாரதி, பகவதி பெருமாள், தனம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘பேச்சுலர்’ படத்தை இயக்கியிருக்கிறார் புதுமுகம் சதீஷ் செல்வகுமார்.

‘பதின்பருவத்தினருக்கான திரைப்படம்’ என்ற முத்திரையுடன், இளையோரின் பாலியல் விருப்பங்களை, ஏக்கங்களைக் காட்டும் திரைப்படம் என்ற எண்ணம் ட்ரெய்லர், டீசர் பார்த்தவுடன் தோன்றியது.

படம் பார்த்துவிட்டு வெளியே வருகையில், அந்த எண்ணத்திற்கும் திரைக்கதையின் நோக்கத்திற்கும் இடையிலான தூரம் இயக்குனரின் வெற்றியாக மாறியிருக்கிறது.

நிச்சயமாக இது தமிழ் சினிமாவின் அற்புதமா என்று கேட்டால், என்னிடம் பதில் இல்லை. ஆனால், கண்டிப்பாக இப்படைப்பில் இடம்பெற்ற அனைவரும் ஏதோ ஒருவகையில் தங்கள் திறமைகளை திரையுலகில் நிரூபிப்பார்கள் என்றதொரு நம்பிக்கை தென்படுகிறது.

‘லிவிங் டுகெதர்’னா என்ன?

கோவை வட்டாரத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த டார்லிங் (ஜி.வி.பிரகாஷ்குமார்), பெங்களூருவுக்கு வருகிறார்.

சகோதரி, கணவரோடு அவரது தாய் வசிக்க, சகோதரர் திருமணமாகி மனைவி குழந்தையுடன் இருக்க, தனது பேச்சுலர் வாழ்க்கையை ‘அனுபவிக்க’ (இந்த வார்த்த அடிக்கோடிட வேண்டியது) வேண்டுமென்று விரும்புகிறார். தன் நண்பர்கள் இருக்கும் அறையில் தங்குகிறார்.

ஊரைச் சேர்ந்தவர்களோடு தங்கியிருந்தாலும், நிம்மி எனும் நண்பன் மட்டும் தனது காதலியோடு தனி பிளாட்டில் தங்கியிருப்பதை அறிகிறார் டார்லிங். அவர்களோடு வசிக்கும் சுப்புவை (திவ்யபாரதி) பார்த்தவுடன், டார்லிங் மனதில் ‘காமத்தீ’ பற்றுகிறது.

எல்லோருமே ஒரே அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள். இந்த இணைப்பு, நாயகனையும் நாயகியையும் அடிக்கடி சந்திக்க வைக்கிறது.

‘தானும் அந்த பிளாட்டில் தங்க வேண்டும்’ என்று நிம்மியிடம் டார்லிங் கெஞ்சிக் கூத்தாட, தனக்கோ தன்னைப் பார்க்க வரும் தோழிகளுக்கோ எவ்விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவரைத் தங்க அனுமதிக்கிறார் சுப்பு.

அப்போது முதல் ஒவ்வொரு கணமும் சுப்புவைப் பார்க்கும்போதெல்லாம் காமத்தில் உருகுகிறார் டார்லிங்.

ஒரு நன்னாளில் நிம்மியும் அவரது காதலியும் பணி நிமித்தம் வெளிநாட்டுக்கு பறக்க, சுப்புவும் டார்லிங்கும் மட்டும் தனிமையில் இருக்கும் சூழல். ஆனால், டார்லிங்கின் கற்பனை ஈடேறவில்லை.

ஒருநாள் சுப்புவுக்கு உடல்நலம் சரியில்லாமல்போக, அவரைக் கவனித்துக் கொள்கிறார் டார்லிங். அந்த நொடியில் இருவருக்குமிடையே உண்டாகும் நெருக்கம், ஒருநாள் காமத்தைப் பகிர வைக்கிறது. அதன்பின், அதுவே தொடர்கதையாகிறது.

ஒருகட்டத்தில், சுப்பு தனது தோழிகளை அழைத்துவந்தால் கோபப்படுகிறார் டார்லிங். தனது நிபந்தனைகளை எல்லாம் மறந்து, அவரைச் சமாதானம் செய்கிறார் சுப்பு.

இந்த நிலையில், டார்லிங்கின் சகோதரி மகளுக்கு கோவையில் ’காது குத்து’ வைபவம் நடக்கிறது. அதே நேரத்தில், தான் கர்ப்பமாக இருப்பதாகக் கூறுகிறார் சுப்பு.

உடனடியாக பெங்களூரு வரும் டார்லிங், கர்ப்பத்தை கலைப்பதிலேயே குறியாக இருக்கிறார். குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று சுப்பு சொல்வதை, கேட்கத் தயாராகவே இல்லை.

விஷயம் வெளியே தெரிந்தால், தனது குடும்ப மானம் போய்விடும் என்று டார்லிங் மறுப்பு தெரிவிக்க, சுப்பு தனது நிலையில் பிடிவாதமாக இருக்க, பிரச்சனை நீதிமன்றம் வரை செல்கிறது.

இதனால் டார்லிங்கின் தாய், சகோதரி, சகோதரர் ஆகியோர் சிறையில் இருக்கும் சூழல் உருவாகிறது. அந்த வழக்கில் இருந்து தப்பிக்க, டார்லிங்கின் நண்பர்களும் குடும்பத்தினரும் என்னவெல்லாம் செய்யத் தயாராகின்றனர் என்பதைச் சொல்கிறது ‘பேச்சுலர்’.

லிவிங் டுகெதர் என்பது மனதுக்குப் பிடித்த பெண்ணோடு செக்ஸ் வைத்துக்கொள்வதற்கான வழிமுறை என்று ஒருவன் நினைப்பதும், அதையும் மீறி கர்ப்பமுறுவது கேவலம் என்று அவனது நண்பர்கள், உறவினர்கள் கருதுவதும், சம்பந்தப்பட்ட பெண்ணின் மனதில் இருப்பது என்னவென்று அறிய அவர்கள் விருப்பப்படாததும் தான் இக்கதையின் மையப்புள்ளி.

ஐ லவ் யூ-வில் தொடங்கி கட்டிலில் முடியும் காதல் என்று இதுவரை வரையறுக்கப்பட்ட காதலைத் தற்போதைய தலைமுறை தலைகீழாக மாற்றியிருப்பதைச் சொல்லும் இயக்குனர்,

எந்த இடத்திலும் ‘லிவிங் டுகெதர்’ சிறந்தது என்றோ அல்லது சீரழிவு என்றோ குறிப்பிடாமல் பார்வையாளர்களிடமே அதற்கான முடிவை விட்டிருப்பது அருமை.

அதே நேரத்தில், காதலுக்கும் கல்யாணத்திற்கும் இடைப்பட்ட சிறு வெளியே ‘லிவிங் டுகெதர்’ என்பதையும் சுட்டியிருக்கிறார்.

இன்னொரு தனுஷ்!

‘துள்ளுவதோ இளமை’, ‘ட்ரீம்ஸ்’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ தொடங்கி ‘மயக்கம் என்ன’ வரை தனுஷிடம் எப்படியொரு நடிப்பாற்றலைப் பார்த்தோமோ, கிட்டத்தட்ட அதனைப் பிரதியெடுக்க முயன்று வென்றிருக்கிறார் ஜி.வி.பி.

அவருடைய கேரியரில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’க்கு அடுத்தபடியாக இது ஒரு முக்கியமான படம்.

பதின்பருவத்தினரைக் குறிவைத்து கிளுகிளுப்பூட்டும் காட்சிகள், வசனங்கள் கொண்ட படங்களை மட்டுமே ஜி.வி.பி. தேர்ந்தெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு, மோகன் நடித்த ‘விதி’யின் ரீபூட் வெர்ஷன் ‘பேச்சுலர்’ என்பதே சரியான பதில். இப்படத்தில் முழுக்க முழுக்க அவர் ஒரு ஆன்ட்டி-ஹீரோ.

இப்படத்தின் இன்னொரு ஆச்சர்யம், நாயகி திவ்யபாரதி. மேக்கப் இல்லாமல் வரும் காட்சிகளில் அவருடைய நடிப்பு நம்மை ஈர்க்கிறது. தமிழ் சினிமாவுக்கு ஒரு அற்புதமான வரவு.

பகவதி பெருமாள் முதல் ஜி.வி.பி.யின் நண்பர்களாக வரும் அனைவரது நடிப்பும் ‘சென்னை – 600028’ படத்தை மீண்டும் பார்த்த அனுபவத்தைத் தருகிறது. கும்பலில் யாரோ ஒருவர் வசனம் பேச மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பது போன்ற அபத்தம் இல்லை.

‘குடும்பம் குட்டிய விட்டுட்டு பெங்களூர்ல வந்து கஷ்டப்படுறோம்’ என்று பக்ஸ் பேசும் ஒரு வசனம், அவரது கதாபாத்திரம் குறித்த பல அடுக்குகளை நம்முள் விரிக்கிறது. ஜி.வி.பி.யின் நண்பராக வரும் நிம்மியின் பாத்திரமும் அப்படியே!

தாயாக வரும் தனம் முதல் ஜி.வி.பியின் குடும்பத்தினர்கள், உறவினராக வரும் முனீஸ்காந்த், வழக்கறிஞராக வருபவர், நாயகியின் சகோதரி கணவராக வரும் ஆர்.கே.விஜய்முருகன் உட்பட அனைவரும் கதாபாத்திரங்களாக மிளிர்கின்றனர்.

இயக்குனர் மிஷ்கின் வரும் காட்சிகள் திணிப்பாகத் தோன்றினாலும், அவை திரைக்கதையின் முக்கியத் திருப்பத்திற்கு காரணமாக இருக்கின்றன.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு முதலில் அழகுணர்ச்சியோடு அமைந்து, பின்பாதியில் பாத்திரங்களின் பாவனைகளுக்கும் காட்சியின் நோக்குக்கும் ஏற்ப விரிந்திருக்கிறது.

ஷான் லோகேஷின் படத்தொகுப்பு காட்சிகள் பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்திற்கான மவுனங்களையும் தாங்கி நிற்கிறது.

பாடல்கள் காட்சியாக்கத்தோடு இணைந்து ரம்மியான உணர்வை ஏற்படுத்த, பின்னணி இசையினால் திரைக்கதைக்குப் பலம் கூட்டியிருக்கிறார் சித்து குமார்.

அற்புதமான அறிமுகம்!

இந்த ஆண்டின் அற்புதமான புதுமுக இயக்குனர்களின் ஒருவர் எனும் பெருமையை அடைந்திருக்கிறார் ‘பேச்சுலர்’ இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.

‘லிவிங் டுகெதர்’ வாழ்க்கைமுறையை காமத்திற்கான வடிகால் எனும் ரீதியில் முதல் பாதி வடிவமைக்கப்பட்டிருப்பதும்,

அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க நாயகன் தரப்பு முயல்வதை இரண்டாம் பாதியில் சொல்லியிருப்பதும்,

அதன் வழியே அப்பெண்ணின் காதலை நாயகன் புரிந்துகொள்ளாமல் போவதற்கு அவன் சார்ந்த சமூகத்தின் ஆதிக்க மனநிலையே காரணம் என்பதை உணர்த்தியிருப்பதும் அருமை.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கோவை வட்டார வழக்கு அதிகம் கையாளப்படாத நிலையில், ‘பேச்சுலர்’ வசனம் முழுக்க கோவை வாசம்.

‘கோயம்புத்தூர்ல இருந்து பெங்களூரு வந்துட்டா நீங்க மாடர்ன் ஆயிடுவீங்களா’ என்ற வசனம், அப்பகுதி மக்களிடையே கலப்புத் திருமணம் குறித்த சிந்தனை எவ்வாறிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.

பேச்சுலர் ரூம் வாசலில் கோழிகள் வளர்க்கப்படுவதும், சம்பந்தேமேயில்லாமல் தேன்கூட்டைக் கலைத்துக் காயப்படும் நாயகனின் நண்பர்கள் அப்படியே கிளைமேக்ஸ் வரை நடமாடுவதும், திரைக்கதையின் நோக்கத்திற்கு ஆங்காங்கே தோள் கொடுக்கிறது.

மாம்பழம், இளநீர், இறைச்சி, வீட்டில் செய்த திண்பண்டங்களை நாயகன் சாப்பிடுவதை நகைச்சுவையாகக் காட்டிவிட்டு, பின்பாதியில் அதுவே ஆண்மைக்குறைவு குறித்த ஒரு கேள்விக்குப் பதிலாகச் சொல்லப்படுவது இயற்கை உணவுகளுக்கு இலவசமாக கொடி பிடிக்கிறது (திரைக்கதையின் நோக்கத்தையும் இதையும் முடிச்சிடக் கூடாது).

நாயகன் சுயநலமாகச் சிந்திப்பவர் என்பதை முன்பாதியில் முழுமையாகக் காட்டிவிட்டதால், பின்பாதியில் அவரது நடவடிக்கைகள் எவ்விதக் கேள்விகளுக்கும் இடம்கொடுக்கவில்லை.

அறிமுகக் காட்சியில் நாயகியின் பின்புறம் காட்டப்படும்போது தியேட்டரில் எழும் கைத்தட்டல்கள், விசில்கள், கிளைமேக்ஸில் மீண்டும் அக்காட்சி இடம்பெறும்போது அமைதியை மட்டுமே பெறுவது திரைக்கதைக்குக் கிடைத்த வெற்றி.

இரண்டாம் பாதியில் நாயகி தரப்பு படும் கஷ்டங்களையோ, அவரது இருப்பையோ திரைக்கதை பதிவு செய்யவில்லை.

ஏனென்றால், கதை முழுக்கவே ஆதிக்க மனோபாவம் கொண்ட நாயகனின், அவர் சார்ந்தவர்களின் எண்ணவோட்டத்தையே காட்டுகிறது.

‘அந்தப் பெண்ணையே கல்யாணம் செஞ்சுக்கட்டும்’ என்று எந்த பாத்திரமும் வசனம் பேசவில்லை. ‘வனத்துல மேய்ஞ்சாலும் இனத்துல அடையணும்’ என்ற சாதீயத்திற்குச் சாதகமான பழமொழி அதன் அடிநாதமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீண்டாலும், எந்தக் காட்சியும் திரைக்கதையில் இருந்து தொடர்பற்றதாக இல்லை. மீறிக் குறை சொல்பவர்கள், இப்படம் பேசும் கருத்தில் ஒவ்வாமை கொண்டிருப்பதாகவே அர்த்தம்.

அந்த வகையில், ’லிவிங் டுகெதர்’ வாழ்க்கைமுறையை ‘ரொமாண்டிசைஸ்’ பண்ணாமல், இன்றைய சூழலில் காதலுடன் கலந்த காமத்தை ஒரு சமூகம் எவ்வாறு நோக்குகிறது என்பதைக் காட்டிய விதத்தில் முக்கியமானதாகிறது ‘பேச்சுலர்’!

-உதய் பாடகலிங்கம்

06.12.2021   4 : 30 P.M

You might also like