ஒரு பிடி அரிசியால் நிகழ்ந்த மகத்தான மாற்றம்!

-காமராஜர் படித்த பள்ளி!

ஒரு கைப்பிடி அரிசியை ஒற்றுமையாய் ஊரே கொடுத்தால் என்னென்ன அதிசயமான மாற்றங்கள் நிகழும்?

அதற்குக் கண்கண்ட உதாரணம்- விருதுநகரின் மையத்தில் இருக்கிற ‘சத்ரிய வித்யாசாலைப் பள்ளி’.

அப்போது அந்த ஊரின் பெயர் விருதுபட்டியாக இருந்தபோது தங்களுடைய முன்னேற்றத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது அந்தச் சமூகத்தினருக்கு.

தாங்களே ஒன்று கூடினார்கள். கைக் கோர்த்து முடிவெடுத்தார்கள். எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டார்கள்.

எடுத்த முடிவு இது தான்.

“ஒவ்வொரு குடும்பமும் தினமும் சமையல் செய்யும்போது, கைப்பிடியளவு அரிசியை மகிமைக்கென்று கொடுத்துவிட வேண்டும்”.

வாராவாரம் அந்தக் கைப்பிடியளவு அரிசி வீடு வீடாகச் சேகரிக்கப்பட்டது. அந்த மகிமையினால் கோவில்கள் உருவாக்கப்பட்டன.

தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பள்ளி ஒன்றைக் கட்டத் திட்டமிட்டார்கள்.
அப்படி- 1889-ம் ஆண்டில் விருதுநகரில் மிக எளிமையாக பிடி அரிசி மகிமையில் துவக்கப்பட்டது ‘இந்து பிரைமரி பள்ளி’. அப்போது அதில் சேர்ந்த மாணவர்கள் 32 பேர்.

பிறகு பள்ளியின் பெயர் ‘சத்ரிய வித்யாசாலை’ என்று மாற்றப்பட்டது. சற்றுப் பெரிய கட்டிடம் 1895-ல் கட்டிமுடிக்கப்பட்டது.

இலவசக்கல்வி–தான் இந்தப் பள்ளியின் அடிப்படை அம்சம்.

பிடி அரிசி தான் பள்ளியின் இலச்சினை – அப்போதும், இப்போதும்.

ஊர் கூடித் தேரை மட்டுமல்ல, பொருளாதார ரீதியிலும், கல்வியிலும் தங்களை நகர்த்திக் கொள்ள முடியும் என்பதைக் கண்கூடாக நிரூபித்தது அந்தச் சமூகம்.

இந்தப் பள்ளியில் 1909 ஆம் ஆண்டில் சோ்ந்து ஆறாவது வகுப்பு வரை படித்தவர் தான் காமராஜர்.
தமிழகம் முழுக்க இலவசக் கல்வியை நடைமுறைக்குக் கொண்டுவர காமராஜருக்குத் தூண்டுதலாக இருந்ததும் இந்தப் பள்ளி தான்.

தற்போது இந்தப் பள்ளிக்குக் கிளைகள் பரவி, உயர்கல்வி வரை உயர்ந்து, இதில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்லாயிரம் பேர்.

ஒரு நூற்றாண்டைக் கடந்த இந்தப் பள்ளி ஒரு சமூகத்தின் மகத்தான ஒற்றுமைக்கும், கூட்டுறவு எண்ணத்திற்கும் உதாரணமான அடையாளம்.

பிடி அரிசி தான்.

அதில் என்னென்ன மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன?

You might also like