இந்திய அளவில் இந்திராகாந்தி; தமிழக அளவில் எம்ஜிஆர்!

டிசம்பர் 5 – சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிசைக்குப் பிறகு மறைந்த தினம்.

ஆண்டு 2016.

*

1998 ல் ஜூனியர் விகடன் இதழில் வெளியான ‘மக்கள் பேட்டி’யில் ஜெயலலிதா அளித்த சில பதில்கள்:

கே : உங்கள் கண்ணோட்டத்தில் அரசியல்வாதி என்பவர் யார்? உங்களைக் கவர்ந்த அரசியல்வாதி யார்?

ஜெ பதில் : மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு புரிந்து கொண்டு மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு அயராது பாடுபடுபவரே உண்மையான அரசியல்வாதி.

என்னைக் கவர்ந்த அரசியவாதி – சர்வதேச அளவில் திருமதி. மார்க்ரெட் தாட்சர் அவர்கள். இந்திய அளவில் அன்னை இந்திரா காந்தி அவர்கள். தமிழக அளவில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்.

கே: திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்பது சரியா?

ஜெ பதில் : ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத் தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்வதே திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.

கே : ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் எது?

ஜெ பதில் : விடா முயற்சி

கே: புரட்சித் தலைவர் அவர்களுடன் சினிமாவில் இணைந்து நடித்தது, அரசியலில் இணைந்து பணியாற்றியது – எதைப் பெருமையாகக் கருதுகிறீர்கள்?

ஜெ பதில் : இரண்டுமே பெருமைக்குரியது தான். கலைத்துறையில் இணைந்ததன் தொடர்ச்சி தான் பொதுவாழ்வின் வளர்ச்சி.

கே : துணிச்சலாகப் பதில் சொல்லுங்கள் பார்ப்போம். காந்திஜி, நேருஜி, ஈ.வெ.ரா, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்-இவர்களில் ஒருவருக்கு உங்களால் உயிர் கொடுக்க முடியும் என்றால் யாருக்குக் கொடுப்பீர்கள்?

ஜெ பதில் : நிச்சயமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்குத் தான்.

காரணம், அவர் இருந்தால் இந்தத் தலைமைப்பொறுப்பு, பணிச்சுமை, மன உளைச்சல் இவற்றில் இருந்து நான் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?”

05.12.2021  11 : 25 A.M

You might also like