ஒமைக்ரான் பரவலைத் தடுக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்!

– தொற்றுநோய் நிபுணர் வலியுறுத்தல்

கொரோனாவின் இரண்டாவது அலைத் தாக்கத்திலிருந்து உலக நாடுகள் மீண்டு வரும் நிலையில், தென் ஆப்ரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல நாடுகளுக்கும் பரவத் துவங்கியுள்ளது. இதற்கு ‘ஒமைக்ரான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரஸ், இப்போது வரை 14 நாடுகளுக்குப் பரவ ஆரம்பித்துள்ளது. இதையடுத்து பல நாடுகள், தென் ஆப்ரிக்கா செல்ல தங்கள் நாட்டினருக்கு தடை விதித்துள்ளன. தென் ஆப்ரிக்காவிலிருந்து பயணியர் வரவும் அவை தடை விதித்துள்ளன.

இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள தென் ஆப்ரிக்காவின் தொற்று நோய் நிபுணர் சலிம் அப்துகரிமன்,

“தென் ஆப்ரிக்காவை தனிமைப்படுத்துவதால் மட்டும் ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுத்துவிட முடியாது. வரும் நாட்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவலின் வேகம், பல நாடுகளில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது தான் ஒரே வழி.

மக்களிடம் பீதி ஏற்படுத்துவதை, ஊடகங்கள் நிறுத்த வேண்டும். சமூக வலைதளங்களிலும், யாரும் வதந்தி பரப்பக் கூடாது.

இதற்கு முன், நாம் இரண்டு கொரோனா பரவல்களைச் சந்தித்துள்ளோம். எந்த வைரசும், தொற்று நோயும், ஒரு நாட்டிலிருந்து மற்ற நாட்டுக்கு பரவத்தான் செய்யும்.

எனவே, நாம் வைரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து நின்று சவாலை எதிர்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

You might also like