– உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி விவாகரத்து பெற தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு தொகை வழங்கிய மேஜர், பின் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டார். இதையடுத்து மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “குடும்ப நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் தீர்ப்பு சரியானதே. மகனுக்கு 18 வயது ஆகும் வரை பராமரிக்கும் பொறுப்பு தந்தைக்கு உள்ளது.
அதனால், 2019 டிசம்பர் முதல், நடப்பாண்டு நவம்பர் 30 வரை நிறுத்தப்பட்ட பராமரிப்புத் தொகையை எட்டு வாரங்களுக்குள் தந்தை வழங்க வேண்டும். தாயின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு வழங்காத பட்சத்தில், நிலுவையுடன், பராமரிப்புத் தொகையை சேர்த்து கணக்கிட்டு, மாதத் தவணையாக தந்தையின் ஊதியத்தில் ராணுவ நிர்வாகம் பிடித்தம் செய்து, தாயின் வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டது.