‘வனம்’ – பாதி வழியில் தடம் மாறிய பயணம்!

தனித்தனியாகப் பார்க்கும்போது நன்றாக இருக்கும் காட்சிகளை ஒரு முழு நீளத் திரைப்படமாகப் பார்க்கையில் திருப்தி வராவிட்டால், அந்த திரைக்கதையை இன்னும் கூடச் செப்பனிட்டிருக்கலாம் என்று தோன்றும்.

ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ’வனம்’ திரைப்படமும் அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறது.

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ மூலமாகக் கவனம் ஈர்த்த வெற்றி, இத்திரைப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். மலையாள நடிகை அனு சித்தாராவின் புகைப்படங்களை டெஸ்க்டாப், மொபைல் ஸ்கிரீனில் வைக்குமளவிற்கு, இளையோர் மத்தியில் அவருக்கு தனித்த இடமுண்டு. இப்படத்தில் அவர் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

திகிலும் பேண்டஸியும் கலந்து உருவாக்கப்பட்ட ‘வனம்’, கானகப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை டைட்டில் காட்சியிலேயே உணர்த்திவிடுகிறது.

விடுதி அறையும் தற்கொலை எண்ணமும்!

காட்டுக்கு நடுவே அமைந்த ஒரு நுண்கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக இருக்கிறார் மகிழ் (வெற்றி). டாக்குமெண்டரி படங்களை இயக்கும் ஜாஸ்மின் (ஸ்மிருதி வெங்கட்), மகிழ் இடம்பெற்ற ஒரு யூடியூப் வீடியோவைப் பார்த்துவிட்டு அவர் படிக்கும் கல்லூரிக்குச் செல்கிறார்.

சிறு வயதில் இருவருக்கும் இடையே நட்பு இருந்தது அப்போது தெரிய வருகிறது. வழக்கம்போல, நாயகனும் நாயகியும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், மகிழின் விடுதி அறை தோழர்கள் ஒவ்வொருவராக தற்கொலை செய்து கொள்கின்றனர். அவரது அறை எண் 1013.

அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்து நிறைய விசித்திரங்கள் நடப்பதாக மகிழ் சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை. அப்போதுதான், அந்த விடுதி கட்டப்பட்டபோது ஒரு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட தகவலைப் பகிர்கிறார் ஜாஸ்மின்.

அது குறித்து அறிவதற்காக ஒரு நூலகத்திற்குச் சென்றால், கல்லூரிக்கான இடத்தை வழங்கிய ஜமீன்தாரின் (வேல ராமமூர்த்தி) சுயசரிதை கிடைக்கிறது. அதில் இருக்கும் தகவல்களின்படி, கல்லூரி இருக்குமிடத்தில் ஒருகாலத்தில் பழங்குடியினர் வசிப்பிடம் இருந்தது தெரிய வருகிறது.

அவர்களைக் காக்கும் அரணாக மல்லி (அனு சித்தாரா) என்ற பெண்மணி இருந்திருக்கிறார். ஆனால், மல்லி உட்பட அந்தப் பழங்குடி கிராமத்தினர் என்னவானார்கள் என்ற தகவல் அதில் இல்லை.

இதனால், அந்தப் புத்தகத்தை எழுதியவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மகிழ், ஜாஸ்மின் இருவரும் இறங்குகின்றனர்.

அவர்களது முயற்சி வெற்றி பெற்றதா, அந்தப் பழங்குடி மக்கள் எங்கு சென்றார்கள், ஜமீன்தாருக்கும் அம்மக்களுக்கும் இடையே நடந்தது என்ன, இந்த முன்கதைக்கும் நாயகனின் தோழர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கும் என்ன சம்பந்தம் என்பதைச் சொல்கிறது மீதமுள்ள ‘வனம்’.

இயக்குனர் ஸ்ரீகண்டன் எடுத்துக்கொண்ட களம் பார்வையாளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டக் கூடியது. ஆனால், இப்படியொரு கதையுடன் முன்ஜென்மத் தொடர்பையும் கலந்ததில் சறுக்கியிருக்கிறது திரைக்கதை.

தவறான ‘மிக்ஸிங்’!

நிகழ்காலத்தில் ஒரு விடுதி அறையில் தங்கியிருப்பவர்கள் வரிசையாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற புள்ளியில் இருந்து உயரே பறக்கும் திரைக்கதை, கடந்த காலத்தில் மக்களை வாட்டி வதைத்த ஒரு ஜமீன்தார் நுண்கலைகளின் மீது ஆர்வம் காட்டியதைச் சுட்டும்போது கீழிறங்குகிறது.

காட்டை அழிக்க முயலும் ஜமீன்தாரை ஒரு பழங்குடியினப் பெண் எதிர்க்கிறாள் என்பதைக் காட்ட இவ்வளவு நேரம் செலவழித்திருக்க வேண்டாம்.

ஒரு வாய்ஸ் ஓவரிலோ அல்லது மாண்டேஜ் ஆகவோ முடிந்திருக்க வேண்டிய பிளாஷ்பேக் துணுக்கை முழுநீளக் காட்சிகளாக மாற்றியபோது அந்த வேகம் சட்டென்று சரிந்துவிடுகிறது.

கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி என்று எண்ணும் அளவுக்கு இந்த ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், கதையின் முக்கியத் திருப்பத்திற்கான காரணமாக ‘முன்ஜென்ம நினைவு’ சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், அது குறித்த போதுமான விளக்கங்களோ, காட்சிகளோ முன்பகுதியில் இல்லை. போலவே, நாயகனின் நண்பர்கள் கொல்லப்படுவதற்கான காரணமும் ஒற்றை வரி வசனத்தோடு முடிந்துபோவது பெருங்குறை.

வெற்றி, ஸ்மிருதி வெங்கட் சம்பந்தப்பட்ட காட்சிகளில் இருக்கும் நேர்த்தி அழகம்பெருமாள் தோன்றும் காட்சிகளில் இல்லை. கால்ஷீட் குழப்பங்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், அவரும் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக வருகிறார் என்பதை உணரச் செய்திருந்தால் நன்றாக இருக்கும்.

கடுகடுப்பைக் காட்டிய வண்ணம் இருக்கும் ஜமீனாகத் தோன்றியிருக்கிறார் வேல ராமமூர்த்தி. எழுத்தாளர் உற்சவனாக வரும் பிரதீப் எழுத்து தமிழில் பேசுவது நாடகத்தனமாக தெரிகிறது. மற்ற நடிகர், நடிகைகள் முகங்கள் நம் மனதில் பதியாமல் போகின்றன.

காடு தொடர்பான காட்சிகளில் ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகனின் மெனக்கெடல் ‘ஓகே’வாக இருக்கிறது. படத்தொகுப்பாளர், கலை இயக்குனர் ஆகியோர் இயக்குனரின் குரலுக்கு செவி சாய்த்திருக்கின்றனர்.

ரான் ஈதன் யோஹனின் ‘காற்றிலே முதல் இசை’ பாடல் காதுகளை வருடினால், பின்னணி இசை நெஞ்சில் அதிர்வூட்டுகிறது. ‘வனம்’ படத்தின் மிகப்பெரிய பலமே பின்னணி இசைதான்.

’ஜீவி’ திரைக்கதையின் தாக்கம் இதில் நன்றாகத் தென்படுகிறது. என்னதான் தாறுமாறாக கதாபாத்திரங்களும் காட்சிகளும் செல்வது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ‘உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்ற நியதி ஒட்டுமொத்த திரைக்கதையின் அடிநாதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், எடுத்துக்கொண்ட அடிப்படைக் கதையை விட்டு விலகி வெகுதூரம் நிற்கிறது ‘வனம்’ திரைக்கதை.

என்னதான் பட்ஜெட் குறைவென்றாலும், திரைக்கதையில் இருக்கும் பலவீனமாக பிளாஷ்பேக் பகுதிகளை ‘நறுக்’கி விட்டு நிகழ்காலக் கதைக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.

ஸ்ரீகண்டன், மாதவா, ஐசக் பசில் கூட்டணி அதனைச் செய்யாத காரணத்தால், முதல் அரைமணி நேரத்தில் நம்மைத் தொற்றும் பரபரப்பு அடுத்தடுத்த நிமிடங்களில் கரைந்து காணாமல் போய்விடுகிறது.

ஒரு நல்ல முயற்சி என்ற வகையில் மட்டுமே ‘வனம்’ படத்தை நினைவுகூர வேண்டியிருப்பது வருத்தமான விஷயம்.

  • பா.உதய்
You might also like