படிப்படியாக ஓவியத்தில் உருவான பெரியார்!

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150 ஆவது ஆண்டை ஓராண்டு முழுக்கத் தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை அடியொற்றி,

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்வழி கலைப் பண்பாட்டுத்துறைக்கு அனுப்பியிருந்த ‘கலைகளின்வழி சுதந்திரப் போராட்ட ஆளுமைகளைக் கொண்டாடல்’ எனும் திட்டம், கலைப் பண்பாட்டுத்துறை ஆணையரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தென்னகப் பண்பாட்டு மைய உதவியுடன், வ.உ.சி.யின் பெருமையை ஊரறிய, நாடறி, உலகறியக் கொண்டு செல்லும் நோக்கில், ‘செயல்பாடுகளினுடே வ.உ.சி.’ எனும் பொருண்மையிலான ஓவியப் போட்டி தியாகசீலர் வ.உ.சி.யின் 85 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி 18.11.2021 அன்று, வ.உ.சி. பிறந்த ஒட்டப்பிடாரத்தில், ‘வ.உ.சி. வரலாற்றுச் சுருக்கம்’ எனும் நூல் வெளியீட்டுடன் சிறப்பாக நிகழ்ந்தது.

அந்த நிகழ்வில், ஓவியப் போட்டியைத் தொடங்கிவைக்க, ஒரு புதிய முறை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சிறப்பு விருந்தினர்களின் சீரிய ஒத்துழைப்பால், அது அனைவரும் இரசிக்கும்படி அழகாக நடந்தேறியது.

‘செயல்பாடுகளினுடே வ.உ.சி.’ எனும் பொருண்மையில் நடைபெற்ற ஓவியப் போட்டியை, மாண்புமிகு தொழில் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு அமைச்சர்,

திரு தங்கம் தென்னரசு அவர்கள், தன் திருக்கரங்களால், தூரிகை பிடித்து, ஈசலுடன் மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கித்தானில் (canvas), குழைத்தெடுத்த ஆரஞ்சு வண்ணத்தில், கேள்விக் குறியைப் போல் ஒரு தலை வரைந்து, அதற்குக் கண்களும் மூக்கும் வரைகிறார்.

ஓவியப் போட்டி,  மேடையிலேயே தொடங்கிவிட்டதாக, மக்கள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

அது யாருடைய உருவமாகப் போகிறது என்கிற மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, அடுத்ததாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் திரு வாகை. சந்திரசேகர், மாண்புமிகு அமைச்சர் வரைந்திருந்த தலைக்கு, நீல வண்ணத்தில் இரு காதுகளையும், ஒரு வாயையும் வரைகிறார்.

உருவம் உருவாகி வருவது கண்டு, மக்கள் ஆனந்தக் கெக்கலிப்பு செய்கின்றனர்.

அடுத்து, மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள், தூரிகையில் பச்சை வண்ணத்தைக் குழைத்தெடுத்து, அந்த உருவத்திற்குக் கண்ணாடி மாட்டி, அதற்குத் தாடியும் வரைந்து அழகு சேர்க்கிறார்.

கூட்டத்திலிருந்து, ’பெரியார்…பெரியார்’ என்கிற குசுகுசுப்பு ஒலி காற்றின் அலைவரிசையில், மெதுவாகக் கேட்கிறது. கூட்டம் கும்மாளமிட்டுச் சிரிக்க ஆரம்பிக்கிறது.

அடுத்துவந்த, கலைப் பண்பாட்டுத் துறை ஆணையர் திரு கோ. பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள் ஆர்வம் உந்தித் தள்ள, தூரிகையைக் கறுப்பில் குழைத்து, வரைந்திருக்கிற உருவத்தின் தலையில், சூரியக் கதிர்களை வரைய ஆரம்பிக்கிறார். மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மரு. கி.செந்தில்ராஜ். இ.ஆ.ப., அவர்கள், கறுப்பு வண்ணத்தைக் கொண்டு கைத்தடி ஒன்றை வரைகிறார்.

அரங்கு, குதூகலத்தில் துள்ளிக் குதித்த ஆரவாரம் அடங்க, சிறிது நேரம் பிடிக்கிறது. இதுவரையும் ஓவிய உருவாக்கத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த அரங்கு, அதிரத் தொடங்குகிறது.

எல்லார் முகங்களிலும் சிரிப்பு ரேகைகள் படர ஆரம்பிக்கின்றன. எல்லோருக்குள்ளும் இருந்த குழந்தைமை அங்குக் குதியாட்டம் போடத் தொடங்குகிறது.

பார்வையாளராய் அமர்ந்து, அத்தனையையும் இரசித்துக் கொண்டிருந்த, போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த ஓவியர் ஒருவர், என்னிடம் வந்து சொல்கிறார்:

“ரொம்ப சிறப்பு சார்”.

இது, வழக்கமான பாராட்டுரைதானே என்று, நானும் அடக்கமாகச் சிரித்தபடி நகர்கிறபோது,

“கேள்விக்குறியா அமைச்சர் போட்ட கோடு, கண்ணும் காதும் வச்சி அப்படியே பெரியாராவும், அதன் தலையிலெ போடப்பட்ட சூரியக் கதிர்கள், சமூகநீதியைக் காக்கத் துடிக்கிற, பெரியார் வழிவந்த ஆட்சி இது, என்பதைச் சூசகமாச் சொல்லுது” என்று சொன்னபோது, கோடுகளைக் கொண்டு கூட்டிப் பொருள் சொன்ன அவரின் அறிவாற்றல் என்னை வியக்க வைத்தது.

விழாப் பேருரை வழங்கிய மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு கனிமொழி கருணாநிதி அவர்கள், வ.உ.சி. காலமானபோது, பெரியார் குடியரசு இதழில் எழுதியிருந்த இரண்டு தலையங்கங்களை எடுத்துச்சொல்லி, வ.உ.சி.க்கும் பெரியாருக்கும் இருந்த நட்பைச் சிலாகித்தார்.

அதன் தொடர்ச்சியாகவே, அவரின் ஓவியக் கோடு, பெரியாரைச் சட்டென்று நினைவிற்குக் கொண்டுவரக் கூடியதாய் அமைந்திருந்தது.

வெறும் வண்ணக் கோடுகளில்லை இவை என்பதை, எந்தத் திட்டமிடலுமின்றி, அவர்கள் தானாகவே உருவாக்கியிருந்த அந்தத் தொடக்க நிகழ்வின் உருவமே, அவர்கள் உள்ளத்தின் உருவத்தைக் கதையாகச் சொல்லத் தொடங்கி விட்டது.

வ.உ.சி. நூற்றாண்டு கண்ட மேனாள் மாண்புமிகு முதல்வர் கலைஞர் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் இந்நாள் மாண்புமிகு முதல்வர் அவர்கள்,

வ.உ.சி.யின் நூற்றைம்பதாவது ஆண்டையும், பெரியார் வழியில் கொண்டாடிக் கொண்டிருப்பதாய், அதற்கு அர்த்தம் சுட்டிய அவரின் கற்பனை அழகு, நினைத்து நினைத்து இன்புறுதற்குரியதாய் இருந்தது.

-கூத்தாடிக் கொம்பன்

You might also like