மழைக்காலப் பள்ளங்களும், அசமந்த மாடுகளும்!

ஊர் சுற்றிக்குறிப்புகள்: 

*

மழைக்காலம் சில தருணங்களில் மறக்க முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது.

தற்போதும் அப்படித்தான்.

வானிலை அகராதிப்படி மிக அதி கன மழை தமிழகத்தின் பல பகுதிகளைக் கலங்கடித்திருக்கிறது. நீர் சூழப் பல குடியிருப்புகள் மாறிப் போயின. மக்களின் இயல்பு வாழ்க்கை குலைந்து போனது.

இந்தச் சமயத்தில் முதலில் சொல்ல வேண்டியது சாலைகளின் கதி. பெரு நகரங்கள் துவங்கிச் சாலைகள் படு மோசமாகி ஒப்பந்ததாரர்களின் தொழில் திறனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்திய கன மழை போதும் – நமது நகரத்திய சாலைகளின் தரத்தை நிரூபிக்க.

சாலைகளின் மேற்பரப்பு சரளை மயமாகி இருப்பதோடு, பல பகுதிகளில் பள்ளங்கள். சில இடங்களில் ஆபத்தான பள்ளங்கள்.

இது ஏதோ நகரப்பகுதிகளில் மட்டுமல்ல, தேசிய நெடுஞ்சாலைகளின் கதியும் இப்படித்தான் இருக்கிறது. சுங்கவரியைக் கூடுதலாகக் கட்டியும் இந்த நிலை தான் என்றால் யாரைத் தனித்துக் குற்றம் சாட்ட முடியும்?

டோல்கேட்களில் கட்டணத்தைக் கட்டாயமாக வசூலிப்பதில் இருக்கிற  அக்கறை சாலைகளைப் பராமரிப்பதில் ஏன் இல்லை? உடனுக்குடன் சாலைகளைச் சரி பண்ணாமல் இருப்பதால், நிகழும் விபத்துகளுக்கு யார் பொறுப்பு?

அதிலும் இரு சக்கர வாகனங்களில் சாலைகளில் பயணித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாலைகளில் இருக்கும் பள்ளங்களால் சந்திக்கும் ஆபத்துகள் பற்றி நன்றாகவே அனுபவபூர்வமாகத் தெரியும்.

சாலைகளில் பல விபத்துகள் இதனால் நிகழ்கின்றன. அப்படிச் சாலைகளில் மிக மோசமாகப் போடப்பட்டதால், ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்?

அந்தச் சாலையை அரைகுறையாகப் போட்ட ஒப்பந்த தாரர் பொறுப்பேற்பாரா? அல்லது அவர்களிடம் கமிஷன் வாங்கி எப்படியிருந்தாலும், அதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிளும், அரசியல்வாதிகளும்  பொறுப்பேற்பார்களா?

தமிழகம் முழுவதும் பெய்திருக்கும் பெரு மழையால் குலைந்து போயிருக்கும் சாலைகளை மறுபடியும் பழையபடி தான் போடப்படுமா?

இதோடு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் – மழைக்காலத்தில் தெருக்கள், சாலைகள் என்று எங்கும் நசநசவென்று நகர்ந்து திரியும் மாடுகள்.

பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில் கறந்துவிட்டு மற்ற நேரங்களில் தெருக்களிலோ, சாலைகளிலோ காற்றாட விட்டுவிடுகிறார்கள் அந்த மாடுகளை.

நெடுஞ்சாலைகளின் நடுவே கூட சாவகாசமாய் அவை படுத்திருக்கின்றன. நெரிசலான சாலைகளுக்கு மத்தியில் மிகவும் மெதுவான படி நடமாடுகின்றன.

மாடுகளால் அப்படி என்ன பிரச்சினை வந்துவிடப்போகிறது என்று கேட்பவர்களுக்காக, அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்த காட்சிகளை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.

சாலை திரும்புகிற இடத்தில் ஒரு மாடு படுத்திருக்கிறது. வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்து திரும்புகிற இளைஞர் ஒருவர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், குறுக்கே படுத்திருக்கும் மாட்டைக் கண்டதும் தடுமாறுகிறார். பைக் துள்ளிச் சரிகிறது.

குப்புறக் கீழே விழுந்து தலையில் அடிபட்டுச் சாய்கிறார். சிறிது நேரத்தில் சாலையிலேயே பிரிகிறது அந்த இளைஞரின் உயிர்.  வாகனத்தால் மோதப்பட்ட மாடு சாவகாசமாக எழுந்து நகர்கிறது.

இதே மாதிரி சென்னைக்கு அருகில் இன்னொரு சம்பவம். மாடு சாலையின் நடுவே படுத்திருந்ததைக் கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மாட்டின் மீது மோதிச் சரிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இது மாதிரிப் பல சம்பவங்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் மாடுகள் தெருவிலோ, சாலையிலோ நடமாடினால், தனிக் கொட்டடியில் அடைக்கப்படும் என்று அறிவித்து, அதைச் செயல்படுத்தவும் செய்தார்கள்.

அதனால் சற்றே நகர்ப்புறங்களில் குறைந்திருந்த மாடுகளின் நடமாட்டம் திரும்பவும் அதிகரித்திருக்கிறது.

எழுத்தாளரான பிரபஞ்சன் திருவல்லிக்கேணியில் மெதுவாக அசை போட்டபடி நகரும் மாடுகளின் முகபாவத்தை அழகாக வர்ணித்திருப்பார்.

அதிலும் வாயை அசைபோட்டபடி படுத்திருக்கும் மாடுகளின் முகங்களை உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால், அப்போது தான் தியானம் பண்ணிவிட்டு வருகிறவரைப் போல என்னவொரு மனநிறைவான முக பாவம்!

நெரிசல் நிறைந்த பெரு நகர வெளியில் மாடுகளுக்கான இடம் எங்கே இருக்கிறது? யாராவது மாடுகளுக்காகப் பரிந்து பேசுகிறவர்கள் தான் சொல்ல வேண்டும்.

இதில் மாடுகளால் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்குமே பிரச்சினைகள். மாடுகள் வாகனத்தால் மோதப்படும் போது, அவற்றால் கத்தக்கூட முடிவதில்லை.

அதோடு சாலைகளில் அவை நிஜமாகவே நந்தி மாதிரி படுத்திருக்கும் போது, அவற்றின் வால் மீது வாகனங்களை ஏற்றிவிட்டுச் செல்கிற காருண்யவான்களும் இருக்கிறார்கள்.

ஆளுகிறவர்கள் தான் மாடுகள் மீதும், மனிதர்கள் மீதும் கருணை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை ஓய்ந்த சில நிமிடங்களில் அந்தச் சாலையில் நல்ல நெரிசல்.

வாகனங்களில் வந்தவர்கள் பொறுமையிழந்து ஹாரன்களில் கத்திக் கொண்டிருந்தார்கள்.

அதற்கிடையில் ஒரு கடையோரம் நெருங்கிய வளமான ஒரு மாட்டைக் கடைக்காரர் அடித்து ஒரு விரட்டு விரட்டியதும், நெரிசலுக்குள் புகுந்த மாட்டால் இன்னும் அதிகமானது நெரிசல்.

“அட… மாடே.. அட மாடே” – ஒருவர் பொறுமையிழந்து கத்தியபோது, மாட்டை விரட்டிய அந்தக் கடைக்காரர் மறித்துக்கேட்டார்.

“ஏம்ப்பா.. மாட்டைத் திட்டுறே.. மாட்டுக்குத் தெரியவா போகுது?”

அதற்கு எரிச்சலோடு வாகனத்தைப் பிடித்த படி சொன்னார் ஏற்கனவே திட்டியவர்.

“நான் ‘மாடு’ன்னு விரட்டப்பட்ட மாட்டைச் சொல்லலை”

மாட்டை விரட்டியவரின் முகக் கோணலுக்குக் கேட்பானேன்!

*

You might also like