திருமதி வி.என்.ஜானகி அம்மையாரின் 98-வது பிறந்தநாள்!

திருமதி. ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 98-வது பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச் செயலாளரான திருமதி. வி.கே.சசிகலா விடுத்திருக்கிற அறிக்கை:

பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மனைவியும், தமிழக முன்னாள் முதல்வருமான திருமதி வி.என்.ஜானகி அம்மையார் அவர்களின் 98-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி. ஜானகி அம்மையார் அவர்கள் 1923-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கேரளாவில் உள்ள வைக்கத்தில் திரு.ராஜகோபால அய்யர் திருமதி நாராயணி அம்மாள் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

தன் தந்தை தமிழாசிரியராகப் பணிபுரிந்த கும்பகோணம் சிறுமலர் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்த அம்மையார் ஜானகி அவர்கள் அதன்பிறகு அவரது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்ததும், அவர்களோடு சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மாரிச்செட்டி தெருவில் வசித்து வந்தார்.

திரு. ராஜகோபால ஐய்யர் அவர்களுக்கு, திரைப்படத்தில் இசையமைப்பது, பாடல் எழுதுவது என வாய்ப்புகள் வந்தன.

மேலும், தன் சகோதரர் திரு பாபநாசம் சிவன் அவர்களோடு இணைந்து பல வெள்ளி விழாப் படங்களுக்கும், முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கும் பாடல்கள் எழுதி, இசையமைத்து வந்துள்ளார்.

சிறுபிள்ளையாக இருந்த அம்மையார் ஜானகி அவர்கள் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதே போன்று, பல்வேறு நடனக் கலைகளையும், சண்டைப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு சிறந்து விளங்கினார்.

மேலும், இயக்குநர் திரு. கே.சுப்பிரமணியம் அவர்கள் தோற்றுவித்த ‘நிருத்யோதயா பள்ளியில் முறையாக நாட்டியம் பயின்ற இவர், ‘நடன கலா சேவா’ நாட்டியக் குழுவில் சேர்ந்து பல நாட்டிய நாடகங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர், 1937 ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய அம்மையார் ஜானகி அவர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக புரட்சித் தலைவரோடு ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருந்தார்.

1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கியபோது கட்சியில் உறுப்பினராகவும் தன்னை இணைத்துக் கொண்ட திருமதி. ஜானகி அம்மையார் அவர்கள், புரட்சித் தலைவர் அவர்களின் அரசியல் செயல்பாடுகளுக்கு பக்க பலமாகவும், உறுதுணையாகவும் இருந்தார்.

தனது வருமானத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் வாங்கிய வீட்டை, புரட்சித்தலைவருக்கு கொடுத்ததையும், இந்த இடத்தில்தான், தற்போது, நம் கட்சியின் தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதையும், இந்நேரத்தில் நினைத்து பார்க்கிறேன்.

மேலும், 1987-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானகி அம்மையார் அவர்கள், அதன்பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், கட்சி, சின்னம், தலைமை அலுவலகம் என அனைத்தையும் புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் ஒப்படைத்த பெருமைக்குரியவர் திருமதி. ஜானகி அம்மையார் அவர்கள்.

இந்த காலகட்டங்களில், அவர்களோடு பழகிய அந்த இனிமையான நாட்களை நினைத்துப் பார்க்கும்போது, இன்றும் என் மனதில் பசுமையாகத் தோன்றுகிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தையும், ராமாபுரத்திலுள்ள புரட்சித்தலைவரின் இல்லம் மற்றும் டாக்டர்.எம்ஜிஆர் காது கேளாத மற்றும் வாய்ப் பேச முடியாதோருக்கான இல்லம் மற்றும் பள்ளியை சிறப்பாக நிர்வாகம் செய்து வந்தார்.

புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், புரட்சித்தலைவியின் வழிவந்த அன்புத் தொண்டர்கள் சார்பாகவும், திருமதி வி.என். ஜானகி அம்மையார் அவர்களின் 98-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில், அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டுமென, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

       

You might also like