சம்பா கிராமவாசிகளின் பங்கேற்புடன் அழியும் நிலையிலிருந்த நீரூற்றுகள் மற்றும் ஹேவல் நதியின் நீரோடைகளைப் புதுப்பிக்க நினைத்த வன அதிகாரியின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் பலனாக 865.86 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் உயர்ந்தது. அத்துடன் 23 நீரூற்றுகளில் நீர் வெளியேறும் அளவும் அதிகரித்தது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் நரேந்திர நகர் வனச் சரக அதிகாரி தரம் சிங் மீனா. ஹெவல் நதியைப் புனரமைத்த சேவைக்காக அவரை மக்கள் பாகீரதி ஜி என அழைக்கிறார்கள்.
சீரமைப்புப் பணிகளால் சம்பா நகரம் மற்றும் 23 கிராமங்களைச் சேர்ந்த 5 லட்சம் மக்கள் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான நீர் வசதியைப் பெற்றுள்ளார்கள்.
சுரங்கம் தோண்டுதல், தொழிற்சாலைக் கழிவுகள், தாது உருகுதல், புதை படிவ எரிபொருளை எரித்தல், குறிப்பாக நிலக்கரி போன்ற காரணங்களால் நதி வறண்டது.
இதனால் பருவமழையின் போது ஓடும் நீரின் அளவு திடீரென அதிகரிப்பதால், அப்பகுதி விவசாயிகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தியது.
“நதியைப் புனரமைக்கும் திட்டத்தை 2018 ஆம் ஆண்டு தொடங்கினோம். மெல்ல அழிந்து கொண்டிருந்த நீரூற்றுகள், நீரோடைகள் மற்றும் ஆற்றின் கரைகளைச் சீரமைத்தோம்” என்று கூறும் இந்திய வனத்துறை பணி அதிகாரியான மீனா,
“எங்களுடைய முக்கிய நோக்கம் ஆற்றுக்கு நீராதாரமாக விளங்கும் நீரூற்றுகளின் நிலையை மாற்றுவதாக இருந்தது” என்கிறார்.
இந்த வனச்சரகத்தில் பொறுப்பேற்ற 5 நாட்களுக்குப் பிறகு ஹேவல் நதியைப் புனரமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹைட்ராலஜி, ரூர்கே ஐஐடி மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பயிற்சி, சர்வே மற்றும் சேவை தொடர்புடையதாக இத்திட்டம் வடிமைக்கப்பட்டது.
நதி வறண்டதால் ஹோல்ம் பகுதியின் விவசாயம் பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதி காய்கறிகள் மற்றும் நறுமணப் பொருட்களுக்குப் புகழ்பெற்றதாக விளங்குகிறது.
ஹேவல் நதி வனப்பகுதிக்குள் ஓடி 25466.33 ஹெக்டேர் நிலங்களுக்கு நீராதாரமாக இருக்கிறது. அதனால் மற்ற துறைகள் நதி விஷயத்தில் தலையிடமுடியாது.
ஹேவல் நதி புனரமைப்புத் திட்டத்தின் மூலம் 66 நீரூற்றுகள் மற்றும் 17 நீரோடைகள் சீரமைக்கப்பட்டன.
கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 697 ஹெக்டேர் பரப்பில் 9,88,400 மரங்களும் மூலிகைகளும் நடப்பட்டன. இதன் காரணமாக 34 பஞ்சாயத்துகளில் வேலைவாய்ப்பு ஏற்பட்டது.
– பா. மகிழ்மதி