வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண்துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது.

இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் அந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

விவசாயிகள் டெல்லி எல்லைப் பகுதிகளில் முற்றுகையிட்டு கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி போராட்டத்தைத் தொடங்கினர்.

ஓராண்டுக்கு மேலாக அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, கடந்த 19-ம் தேதி தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை திருப்பப் பெறுவதாக அறிவித்தார்.

இதற்கான மசோதா, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தைத் தொடர விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. டிசம்பர் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதையொட்டி, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தும் முடிவை விவசாயிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார். இதனையடுத்து 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேறியது.

You might also like