மாநாடு – காலச் சுழற்சிக்குள் உயிர் காக்கும் விளையாட்டு!

மதம் சம்பந்தப்பட்ட கதைகள் திரைப்படமாகும்போது, வழக்கத்தைவிட பல மடங்கு எச்சரிக்கை உணர்வைச் செலுத்த வேண்டும். அந்த சவாலை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து, எவ்வித சமூக, அரசியல் பிரச்சனைகளும் எழாதவாறு ஜாக்கிரதையாக ‘மாநாடு’ படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

முதல் காட்சி தொடங்கி கிளைமேக்ஸ் வரை அமைக்கப்படும் பில்டப் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், விரல் வித்தைகள், பெண் பாத்திரங்கள் உடனான சீண்டல் மற்றும் கொஞ்சல்கள்,

நடனம் மற்றும் சண்டைக் காட்சிகளில் தென்படும் சிரத்தை போன்றவற்றுடன் ஒரு ‘டெம்ப்ளேட்’ ஹீரோயிசமும் கலந்த சிலம்பரசனின் படங்கள் அவரது ரசிகர் வட்டம் தாண்டி அனைவராலும் ரசிக்கப்பட்டதில்லை.

‘தொட்டி ஜெயா’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ உட்படச் சில படங்களில் மட்டுமே அவரது இருப்பு வித்தியாசமாகத் தெரியும்.

அந்த வகையில், சிம்புவை அப்துல் காலிக் எனும் பாத்திரமாக மட்டும் உணர வைத்திருக்கிறது ‘மாநாடு’.

இதில், அவருக்கு இணையான பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பம்சம். உண்மையில், எதிரும்புதிருமாக இவர்கள் இருவரும் நடித்திருப்பதுதான் இப்படத்தின் யுஎஸ்பி (USP).

டைம் லூப் ‘பூச்சுற்றல்’!

உலக சினிமா வரலாற்றில் ‘டைம் லூப்’ எனப்படும் காலச் சுழல் மிகப்பிரபலம். ஒரே நாள் அல்லது குறிப்பிட்ட சில சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பதை, நாயகன் எவ்வாறு தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கிறான் என்பதுதான் இவற்றின் அடிப்படையாக இருக்கும். ’மாநாடு’ திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

தன் நண்பன் மூர்த்தியின் (பிரேம்ஜி) காதலுக்கு உதவுவதற்காக துபாயில் இருந்து கோயம்புத்தூர் வருகிறார் அப்துல் காலிக் (சிலம்பரசன்). விமானப் பயணத்தில், அவர் அருகே சீதாலட்சுமி (கல்யாணி பிரியதர்ஷன்) வந்தமர்கிறார்.

ஊட்டியில் நடக்கும் ஜெரினாவின் (அஞ்சனா) திருமணத்தை நிறுத்தி, அவரை மூர்த்தியுடன் சேர்த்து வைப்பதுதான் அப்துலின் திட்டம்.

ஆனால், சீதாலட்சுமியோ மாப்பிள்ளையின் தோழியாக அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வந்தவர்.

திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, ஜெரினாவையும் மூர்த்தியையும் அழைத்துக்கொண்டு வருகின்றனர் அப்துலும் நண்பர் சையத்தும் (கருணாகரன்).

செல்லும் வழியில் அவர்கள் கார் மீது ஒரு நபர் (டேனியல் போப்) மோதிவிட, அவரைக் காப்பாற்றாமல் வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் போலீசார்.

அங்கு வரும் டெபுடி கமிஷனர் தனுஷ்கோடி (எஸ்.ஜே.சூர்யா), ஒரு மாநாட்டில் அப்துல் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்துகிறார். இல்லாவிட்டால், அவரது நண்பர்களைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

வேறு வழியில்லாமல் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் அப்துலிடம், மேடையில் பேசிக் கொண்டிருக்கும் முதல்வரைக் கொல்ல வேண்டுமென்று சொல்கிறார் தனுஷ்கோடி. அப்துல் கண்ணை மூடித் திறப்பதற்குள் முதல்வர் சுடப்பட, அவரைச் சுற்றி வளைக்கும் போலீசார் சுட்டுத் தள்ளுகின்றனர்.

அடுத்த நொடியே, மீண்டும் விமானப் பயணத்தில் தொடங்குகிறது அந்த தினம். சுற்றியிருப்பவர்கள் சாதாரணமாக இருக்க, தான் மட்டுமே காலச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டதை அடுத்தடுத்த முறைகளில் உணர்கிறார் அப்துல்.

அப்போது, தான் சாவதால் மட்டுமே அனைத்தும் முதலில் இருந்து தொடங்குகிறது என்பதை உணர்கிறார். நடந்த தவறைத் தடுக்க முயற்சிக்கிறார்.

பல முறை அரங்கேறும் இந்த காலச்சுழற்சிக்குள் அப்துல் போலவே தனுஷ்கோடியும் சிக்கியிருப்பது தெரிய வரும்போது விளையாட்டு சூடு பிடிக்கிறது. இறுதியில் என்னவானது என்பதை ரசிகர்களுக்குத் தனியாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை.

வெங்கட்பிரபுவின் படங்கள் எல்லாமே யதார்த்தத்தை மீறியவை என்பதால், காதில் பூச்சுற்றும் வகையில் ‘டைம் லூப்’ கான்செப்டை இம்முறை கையிலெடுத்திருப்பது உறுத்தலாகத் தெரியவில்லை.

வித்தியாசமான எஸ்டிஆர்!

’லிட்டில் சூப்பர்ஸ்டார்’ லோகோவுடன் நடந்து வந்ததில் இருந்து ’மன்மதன்’ படத்தில் ஒரு சக்சஸ்புல் கமர்ஷியல் ஹீரோவுக்கான திறமைகளைக் கொட்டியதுவரை, சிலம்பரசனை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால், ஒரு கமர்ஷியல் திரைப்படத்தில் ‘பில்டப்’ காட்சிகள் ஏதுமில்லாமல் முழுக்க முழுக்க கதை நாயகனாக அவர் வலம் வந்த முதல் படைப்பு இதுதான்.

இவ்வளவு ஏன், இதில் அவருக்கு நாயகி கல்யாணியுடன் டூயட் கூட இல்லை. அதையும் தாண்டி ‘ஸ்பீட்’, ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களின் நாயகர்களைப் பார்க்கும் உணர்வைத் தருகிறது சிம்புவின் நடிப்பு.

கொஞ்சமாய் நகைச்சுவை, ஆட்டம், அதிர்ச்சி என்று வழக்கமான படங்களில் ஹீரோயின் தோழிக்கு உண்டான ‘ஸ்பேஸ்’தான் இக்கதையில் கல்யாணிக்கு கிடைத்திருக்கிறது. அதனை மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கருணாகரன், பிரேம்ஜி, அஞ்சனா, உதயா உட்பட திருமணக் காட்சிகளில் வருபவர்கள் அனைவருக்கும் திரைக்கதையில் அளவாக இடம் தரப்பட்டிருக்கிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர், சுப்பு பஞ்சு, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், ஸ்டண்ட் சில்வா உட்படச் சிலரது பாத்திரங்கள் திரையில் கொஞ்சமாக வந்தாலும் ரசிகர்கள் மனதில் பதியும்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படியொரு கதையில் ஹீரோவுக்கு வில்லன் ‘டஃப்’ கொடுக்க வேண்டும். ஒருகாலத்தில் ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்றோர் இது போன்ற வாய்ப்புகளை ‘அல்வா’ போலப் பயன்படுத்திக் கொண்டனர். இதில், அப்படியொரு அதிர்ஷ்டம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைத்திருக்கிறது.

‘இருக்கு ஆனா இல்ல’ டைப் எக்ஸ்பிரஷன்கள் அதிகமிருந்தாலும், ஒவ்வொரு பிரேமிலும் கலங்கடிக்கிறார். சில இடங்களில் ‘ஓவர் ஆக்டிங்’காக தெரிந்தாலும், அவர் அப்படித்தான் என்பதுபோல நம்மை ‘ட்யூன்’ செய்து வைத்திருப்பது தனித்துவத்துக்கான சான்று.

’மாஸ்டர்’ படத்தில் விஜய் மிகச்சிறப்பாக நடித்திருந்தும் கூட, விஜய் சேதுபதி ரசிகர்களின் அபிமானத்தைத் தட்டிச் சென்றார். இதில் அப்படியொரு ஏடாகூடம் நடந்துவிடக் கூடாதென்று மெனக்கெட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. அதனால், எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைக்கும் கைத்தட்டல்களை மீறி சிம்புவை ரசிக்கும் அளவுக்கு ‘பேலன்ஸ்’ காட்டியிருக்கிறார்.

சமீபத்தில் ‘ஜாங்கோ’ படமும் டைப் லூப் கதைதான். அதில் நாயகனோடு சேர்ந்து வில்லனும் காலச்சுழலில் மாட்டிக்கொண்டது திரைக்கதையின் இறுதியில் தெரிய வரும்.

மாறாக, ‘மாநாடு’ படத்தில் ஹீரோவும் வில்லனும் ஒரே பிரச்சனையில் மாட்டியிருக்கின்றனர் என்பதை இடைவேளையிலேயே உணர்த்தியிருப்பது நல்ல உத்தி.

பேஸ்மெண்ட் வீக் பில்டிங் ஸ்ட்ராங்!

சாதாரண ரசிகர்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஒரே காட்சியையே பார்க்கிறோம் என்று குழம்புவதற்கான வாய்ப்பிருந்தும், அவர்கள் அதனை எளிதாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள் என்று நம்பியிருப்பதற்கு ஒரு சபாஷ்!

ஆனால், சிம்பு ஏன் ‘டைம் லூப்’பில் மாட்டிக் கொண்டார் என்பதற்கு பிளாஷ்பேக் கூறப்படும் காரணம் போதுமானதாக இல்லை.

அதற்காக மெனக்கெட்டால் திரைக்கதையில் வேகம் மட்டுப்படும் என்பதால், அந்த பக்கமே கவனத்தைத் திருப்பவில்லை இயக்குனர் வெங்கட்பிரபு.

தியேட்டரை விட்டு வெளியே வந்தபிறகு எப்படி வேண்டுமானாலும் கழுவி ஊற்றட்டும் என்ற எண்ணத்தில், ரசிகர்கள் இருக்கையின் நுனியில் அமருமாறு காட்சிகளின் மாற்றத்தில் இருக்கும் சாத்தியங்களைத் திரையில் கொட்டியிருக்கிறார்.

‘டைம் லூப்’ என்ற எண்ணத்தைச் சுற்றிய திரைக்கதை என்பதால், முன் பின் கதைகளுக்கு முக்கியத்துவம் தராததில் வியப்பில்லை.

ஒரு கட்சி மாநாடுதான் களம் என்றானபிறகு அதற்குச் சம்பந்தம் இல்லாமல் நாயகனின் பின்னணியை அமைத்திருப்பது கதைக்குள் உடனடியாகப் புகுந்துவிடாமல் தடுப்பதை மறுக்க முடியாது.

ஒருவேளை நாயகனின் பின்னணியை சீரியசாக விளக்கியிருந்தால், அப்போது விதார்த் நடித்த ‘ஆள்’ படத்தின் கதை நினைவுக்கு வந்திருக்கும். என்ன சொன்னாலும், திருமண நிகழ்வுக்கும் மாநாட்டு விபரீதத்திற்குமான ‘லிங்க்’ இறுக்கமானதாக இல்லை என்பது உண்மை.

’டைம் லூப்’புக்கான காரணம் பெரிதாகச் சொல்லப்படாதபோதும், அது எவ்வாறு நிறைவுற்றது என்பதை விளக்க மெனக்கெடாதபோதும், சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா பாத்திரங்களின் வடிவமைப்பு திரைக்கதையின் வேகத்துக்குத் தோள் கொடுக்கிறது. அதுவே, ‘மாநாடு’ திரைக்கதையின் பலமாகவும் மாறியிருக்கிறது.

ஸ்டண்ட் சில்வாவின் ஆட்கள் இருக்கும் கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்து சண்டையிடும் காட்சி, வெங்கட்பிரபுவின் திரைக்கதை மொத்தத்தையும் ’மினி கேப்ஸ்யூல்’ ஆக்கியது போலிருக்கிறது. ஆனால், அதில் கொட்டப்பட்டிருக்கும் உழைப்புக்கு ஒரு அபார சல்யூட்!

இப்படியொரு திரைக்கதையைக் குழப்பம் ஏதுமில்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சென்றதற்காகவே, படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்லை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். போலவே, ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும் இயக்குனரின் பார்வைக்கு ஒளியூட்டியுள்ளது.

படத்தில் இரண்டு பாடல்கள் என்றபோதும், காட்சிகளில் நிரம்பியிருக்கும் பிரமாண்டத்தைப் பன்மடங்காக பெருக்கியிருக்கிறது யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை.

தனித்துவமாகத் தெரியும் அது, ஒருகட்டத்தில் நம் காதுகளில் உணரப்படாமல் கதாபாத்திரங்களின் நடிப்போடு கலந்திருப்பது அபாரம்.

’அப்போ பிரியாணின்னா தான் எங்க ஞாபகம் வரும்’, ’அல்லாவும் சிவனும் சேர்ந்து உங்க மூலமா ஏதோ நடக்கணும்னு நினைக்குறாங்க.. அப்போ ஜீசஸு’ என்பது போன்ற ஒரு சில வசனங்களே வெங்கட்பிரபு டீமின் நகைச்சுவையை நினைவுபடுத்துகின்றன.

அதை மீறி மத நல்லிணக்கத்தின் மாண்பினை வலியுறுத்தும் வகையில் ‘மாநாடு’ அமைந்திருப்பது சிறப்பு.

வழக்கமான சிலம்பரசன் படமாக மட்டுமல்ல, வழக்கமான வெங்கட்பிரபுவின் படங்களில் இருந்தும் வேறுபட்டிருக்கிறது ‘மாநாடு’. இது மற்றுமொரு தொடக்கமாக அமைந்தால், அனைவருக்குமான கமர்ஷியல் அற்புதங்கள் இருவரிடமும் இருந்து இன்னும் அதிகமாக வரக்கூடும்!

-பா.உதய்

You might also like