விவசாயிகளைத் தரம் பிரிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம்!

– உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2016ம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், ‘5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, ‘தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம்’ தலைவர் அய்யாக்கண்னு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘விவசாயிகளை சிறு, குறு என பிரித்துப் பார்க்கக்கூடாது. தமிழக அரசின் இந்த அரசாணையால் 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பாதிப்படைவார்கள். இவர்களும் வறட்சியால் கடுமையாக பாதித்துள்ளனர்.

விவசாயத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த முடியாமல், தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதிர்ச்சியிலும், தற்கொலை செய்தும் இறந்துள்ளனர்.

அதனால், பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி வழங்க உத்தரவிட வேண்டும்,’ என அவர் கோரினார்.

இதை விசாரித்த நீதிமன்றம், “விவசாயிகளை சிறு, குறு என்று பாகுப்படுத்தாமல் அனைத்து விவசாயிகளுக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

அதனால், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது’ என கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், போபண்ணா அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதில், “எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இது, அவர்கள் கொள்கை சார்ந்தது. அதில், நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

அதன் அடிப்படையில் சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்தது சரியே. விவசாயிகளை சிறு, குறு, பெரிய விவசாயி என்று வரையறுக்கவும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு.

எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதியே, இதற்கு முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. தற்போது, அது தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

You might also like