– இந்தியாவிற்குப் பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வானிலை மாறுதல்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கு டெல்லியில் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் வரை நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ள பருவநிலை ஆய்வு வல்லுநர் ஸ்வப்னா பனிக்கல், பருவநிலை மாறுதலால் உருவாகவுள்ள இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த உரையில், “கடல் மட்டம் உயர்வால் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக இந்திய கடலோர மாவட்டங்களில் எச்சரிக்கை அவசியம். 1870ம் ஆண்டில் தொடங்கி 2000ம் ஆண்டு வரை சர்வதேச அளவில் கடல் மட்டம் 1.8 மிமீ உயர்ந்துள்ளது.
ஆனால் 1993ல் தொடங்கி 2017ம் ஆண்டு வரை இந்த அளவு 2 மடங்காக 3.3 மிமீ அளவிற்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. 2050ம் ஆண்டில் மேலும் 15 -20 செமீ அளவுக்கு கடல் மட்டம் உயர்வு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை 91% கடல் உட்கிரிகிப்பதே உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதனால் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பே மாறும் அபாயம் இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் கடல் மட்டம் உயர்வால் அதிக புயல்கள் ஏற்படும் காலங்களில் கடலில் எழும்பும் அதிக உயர அலைகளும் கடல் மட்டத்தை மேலும் உயர்த்தும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் மழை காலங்களில் அதி கனமழை கொட்டுவது போன்றே பருவமழை காலங்களில் மழை பொய்த்து கடும் வறட்சி நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பது அவர்களின் கணிப்பாக உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களே அதிகம் பாதிக்கக் கூடும் என்று எச்சரித்துள்ள ஆய்வாளர்கள், கடும் சவால்களை எதிர்கொள்ள இம்மாநிலங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்” எனக் கூறினார்.