நூல் வாசிப்பு :
தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டுத் தருணத்தில், கி.பார்த்திபராஜா எழுதிய ‘சாமீ’ என்ற இந்த நூல் பரிதி பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
366 பக்கங்களில் விரிந்திருக்கிற இந்த நூல், சங்கரதாஸ் சுவாமிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வை மிக எளிய மொழியில் சொல்லிச் செல்கிறது.
“இங்கிதச் செந்தமிழை விழைந்தேன் – நாளும் நெஞ்சு குழைந்தேன்” என்று தனக்கும் மொழிக்குமான உறவைப் பற்றிச் சொல்லியிருக்கும் சுவாமிகளின் நாடக வாழ்வைச் சொல்லிச் செல்லும் இந்நூலில்,
“காட்டு நாயக்கன் பட்டியிலிருந்து கருவடிக் குப்பம் வரை” என்கிற தலைப்பில அணிந்துரை எழுதியிருக்கிறார் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றச் செயலாளரான முனைவர் மு.ராமசுவாமி.
மு.ராமசுவாமியின் அணிந்துரை:
நூலுக்கு ‘அணிந்துரைகள்’ எழுதுவதில் எனக்குப் பெரிய விருப்பங்களெதுவும் இல்லாதபோதும், சிலரின் விருப்பங்களைத் தட்டிக் கழித்துவிட மனசால் முடிவதில்லை.
அந்த வகைப்பாட்டில் எனக்குள் வந்து காரியார்த்தமாய்ச் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவர்களில் ஒருவர், திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திப ராஜா அவர்கள்.
அவரின் ‘சாமீ…நாடகத் தந்தை தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக வரலாறு’ நூலுக்கு அணிந்துரை எழுதித் தரவேண்டுமென்று அவர் என்னைக் கேட்டபோது, நான் இப்பொழுது தரித்துக்கொண்டிருக்கிற பணி இறுக்கத்துள் ‘சாமிகளொட பேரப் பிள்ளை’யை ஏமாற்றத்தோடு அனுப்ப மனசின்றியும்,
’உள்ளது போகாது; இல்லது வாராது’ என்கிற ’சத்காரிய’மாகவும் அவருக்கான நேரத்தை ஒது க்கித் தந்தே ஆகவேண்டிய கட்டாயச் சூழலுக்கு நான் ஆட்படவேண்டி வந்தது, சுவாமிகள் அடங்கியிருக்கிற, கருவடிக் குப்பத்து இடுகாட்டைக் காத்து நிற்கிற வெட்டியானாக!
இதைச் ’சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக வரலாறு’ என்று பொத்தாம்பொதுவில் சொல்லிக் கடந்து போக என்னால் இயலவில்லை.
வரலாறும் இருக்கிறது என்பதாகத்தான் கூற முடிகிறது. இங்குள்ள தகவல்கள் அனைத்தும், பலராலும், பல்விதமான புதிய சூழல்களில், பற்பலக் காலங்களில், பேசப்பட்டிருப்பவை; எழுதப்பெற்றிருப்பவை; எடுத்தாளப்பட்டிருப்பவைதாம்!
இங்கு, மொழி புதிதாயிருக்கிறது-அதுதரும் சுவையும் புதியதாய் இருக்கிறது. வகுப்பில், ’நாளும் சங்கரதாஸரின் ஒரு கதை’ எனும் கணக்கில், ஏறக்குறைய, தொடர்ந்து இரு திங்கள் கதை சொன்ன / கதை கேட்ட அனு பவமாய்ப் படிக்கையில் கிடைக்கிறது.
சங்கரதாஸரின் அனுபவவெளியைக் கரைத்துக் குடித்திருக் கிற நூற்புலமை, செவிப்புலமை, கதை கோர்க்கும் புலமை, ’சாமிக’ளின் புலமைமீது கொண்டிருக் கிற இவரின் களவு-அதீதப் பற்று-அத்தனையும், இதை வாசிக்கின்ற ஒருவருக்கு நிச்சயமாய்க் கைமாறும் என்று உறுதியாய்ச் சொல்லலாம்.
தினமும் சொல்லுகிற கதை என்பதனாலே, ’கூறியது கூறலாய், கூற வருவது கூறலாய்’ச் சில இடங்கள் தெரிந்தாலும், கதை கேட்கிற, வரலாற்றைச் சுவைக்கச் சொல்கிற சுவாரஸ்யத்தில், அவை பெரிதாகவும் துருத்தித் தெரியவில்லை.
ஆக, இந்த நூல்- ‘சங்கரதாஸரின் நாடகப் பயணக் களஞ்சியம்’ என்பதாய், மனங்கொள்ளக் கூடியதாயிருக்கிறது!
இதிலிருக்கிற தொடக்கக் கட்டுரைகளை வாசிக்கையில், அதில் சங்கரதாஸரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் கோர்வையாக-கதையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நாமும், அதை இன்னமும் சுருக்கிப் பார்க்கலாம்:-
‘தூத்துக்குடிக்கு அருகிலுள்ள காட்டுநாயக்கன்பட்டியில் வசித்துவந்த, இராமநாதபுரத்துச் செம்பியன் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த, இராமாயணப் புலவர் என்று அறியப்பட்ட தாமோதரக் கணக்கனார்-பேச்சியம்மாள் தம்பதியின் திருமகனாய், ’சங்கரன்’ என்கிற சங்கரதாஸர் 07-09-1867 இல் பிறந்தார்.
’விதையொன்று போட சுரையொன்றா முளைக்கும்’ எனும் சொலவடைக்கொப்ப, சிறுவயதிலேயே பாடல்களை இயற்றும் திறன் கொண்டிருந்தார் சங்கரதாஸர்!
பிற்காலத்தில், இவரும் இவர் நண்பர் உடுமலை முத்துசாமிக் கவிராயரும், ’வண்ணச் சரபம்’ பழனி தண்டபாணி சுவாமிகளிடம், தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் கற்றனர்.
அதனாலேயே, தான் எழுதிய ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடலின் ஈற்றடியில், ‘சந்ததங் குடிகொண்ட சங்கரன் கும்பிடும் தண்டபாணித் தெய்வமே’ என்பதில், ‘அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா’ கதை போக, ’சங்கரன் கும்பிடும் தண்டபாணி’ என்பதில், தான் தன் ஆசிரியரையும் வணங்குகிற முத்திரை அடியாகவும் அதைப் புத்திசாலித்தனமாகப் படைத்திருப்பது சிறப்பானதாகும்.
ஆங்கிலேயப் பாதிரியார் ’எட்வர்ட் பால்’ என்பாரின் தொடர்பால், ஆங்கில வர்ண மெட்டுகளை உள்வாங்கி, தன் நாடகங்களில், ஆங்கில வர்ண மெட்டுகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறார் சுவாமிகள்!
அதைப்போலவே, உடுமலை முத்துசாமிக் கவிராயரின் சீடர் சந்தான கிருஷ்ண நாயுடுவின் வழியாக, இந்துஸ்தானி இசைக் கலைஞர் ‘குலாம் முகம்மது அப்பாஸ்’ தொடர்பினால்,
இந்துஸ்தானி இராகங்களையும், வர்ண மெட்டுக்களையும், அதன் நுணுக்கங்களையும் தெரிந்து, உள்வாங்கி, அவற்றைச் சிறப்பாகவும் பொருத்தமாகவும் தன் நாடகங்களில் சுவாமிகள் கையாண்டிருக்கிறார்.
நாடக ஆசிரியராக, நாடக ஆசானாக இருந்தது மட்டுமின்றி, நாடகத்தில் இரண்ய கசிபு, இராவணன், எமதருமன், சனீஸ்வரன், கடோத்கஜன், துச்சாசனன் என்பதாய் அசுர வேடங்களில் மிளிர்ந்தவர் சுவாமிகள்!
ஆனால், இரண்ய கசிபுவாக அவர் வெளிப்படுகையில், ’ஐயோ பாவி! கொழந்தையைக் கொன்னுபோட்டானே’ என்று அலறி, ஒரு பெண் மூர்ச்சித்து விட்டாராம்; எமனாக அவர் வெளிப்படுகையில்,
குரலும் ஆட்டமும் தந்த அதிர்ச்சியில், நாடகம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் கரு கலைந்துவிட்டதாம்; சனீஸ்வரன் ஒப்பனையைக் கலைக்கச் செல்லுகிற-விடிந்தும் விடியாத மசண்டை நேரத்தில்-எதிரில் வந்த இவரைக் கண்ட ஒரு பெண், அதே இடத்தில் இரத்தம் கக்கிச் செத்துப் போனாராம்.
பெண் மரித்ததும், பாவப் பிராயச்சித்தமாக நடிப்புத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, காசி, கயா, கதிர்காமம் என்று பயணப்பட்டு, கயாவில் தமக்குத் தாமே கருமமும் செய்துகொண்டு, காஷாயம் உடுத்தி, தன் இருபத்தைந்து வயதில் அவர் ’தவத்திரு சுவாமிக’ளாக ஆகியிருக்கிறார்.
அதன்பின், கொஞ்சகாலம் புதுக்கோட்டை மகா வித்துவான் கஞ்சிரா மான்பூண்டியா பிள்ளை, சுவாமிகளைத் தன் தத்துப் புத்திரனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் தமிழகத்தின் தலைசிறந்த மிருதங்க வித்துவான் களான புதுக்கோட்டை தட்சிணாமுர்த்திப் பிள்ளை அவர்களும், பழனி முத்தையா பிள்ளையவர்க ளும், மகாவித்துவான் மான்பூண்டியா பிள்ளையவர்களிடம் மாணவர்களாக இருந்துள்ளார்கள்.
1891 முதல் 1922 வரை-சற்றேறக்குறைய 31 ஆண்டுகள்-முகத்தில் அரிதாரம் பூசாமல் வாழ்ந்து, 1922 நவம்பர் 13 இல், தன் 55 ஆவது வயதில், புதுச்சேரியில் இயற்கை எய்தியிருக்கிறார் சுவாமிகள்!
இந்நூலின் வாசிப்பில் இவையாவற்றையும்தான்- இவற்றுக்குள் நிகழும் ருசிகரச் சம்பவங்க ளைத்தான்-நம்மைக் கடந்து செல்லும் படக் காட்சிகளாய் இரசித்துக் கடந்துபோக வேண்டியிருக்கும்.
ஒரு பக்கக் கதை அளவிலிருந்து பல பக்கக் கதை அளவுகளென சிறியதும் பெரியதுமான ஏறக்குறைய 66 கட்டுரைகள் இந்த நூலில் அமைந்திருக்கின்றன.
இதிலுள்ள 12-21 வரையும், ‘தறுதலைப் பயலா’கத் திரிந்ததிலிருந்து, ’ஒரு சகாப்தத்தின் மறைவு’ வரைக்கும்-இன்னும், ’இரங்கற் பாக்களில் சுவாமிகள்’ வரைக்கும்-அவரைப் பற்றிய நறுக்கூண்டு வரலாறுதான் விரிந்த கதையா கப் பேசப்படுகிறது.
இவை நீங்கிய மற்றைய கட்டுரைகள், சுவாமிகளின் மாணவப் பரம்பரை என் பதாய், சங்கரதாஸ் சுவாமிகள் பணி புரிந்த நாடகக் கம்பெனிகள், அவர் நிகழ்த்திய நாடகங்கள், நாடக நிகழ்த்தல்களில் பட்டுத் தெறித்த அனுபவப் பொறிகள் என்பதாய்,
இதன் ஊடும் பாவுமாய் இணைந்திருக்கிற, பல்வேறு இரசனை சுழித்தோடும் நாடகச் சம்பவங்களில் ஊடாடும் பேரனுபவத் தொகுப்பாகவே இந்நூல் அமைந்திருக்கிறது!
நானும், என் ’தமிழ் நாடகம்-நேற்று இன்று நாளை’ நூலின் (1998), நேற்றுப் பகுதியில், தவத்திரு தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகள் பற்றியும் விவாதித்திருக்கிறேன். பல இடங்களில் அவரைப் பற்றிப் பேசியுமிருக்கிறேன்.
அப்பொழுதெல்லாம், நான் எழுப்பியிருந்த ஐயங்களுக்கு, மனநிறைவு கொள்ளும்படியான நிறைவான பதில், இதுவரையும் எந்தத் திக்கிலிருந்தும் எனக்குக் கிட்டாத நிலையில், ஐயங்களாகவே அவை எனக்குள் தங்கிக் கிடக்கின்றன.
கூடுதல் ஆய்விற்குள் நானும் நுழைய முடியாதே போய்விட்டது.
இந்த நூலிலும், அதுமாதிரியான ஐயங்களுக்கு விடை தருவதாய் நம்மை அழைத்துப் போகிற சில தலைப்புகளைக் கடந்தும் போயிருக்கிறேன்.
சுவாமிகளின் வரலாற்றைப் பற்றிச் சிந்திக்கும் பலருக்கும் எழும் கேள்வியாக, சங்கரதாஸ் சுவாமிகள் தன்னுடைய சமகாலத் தில் தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த இந்திய விடுதலைப் போரில், ஏன் பெரிதும் அக்கறை செலுத்தவில்லை என்கிற கேள்வியைச் சுமந்து நிற்கிற கட்டுரையாக, ’விடுதலைப் போரும் சுவாமிகளும்’ என்கிற கட்டுரையொன்றும் இதிலுண்டு.
அதன்மேலான என்னின் விமரிசனமாக வரும் இந் தப் பகுதி, அந்த ஐயங்களைப் பற்றிக் கூடுதலாகச் சிந்திக்க நமக்கு வழிவகுத்தால் நல்லது.
திரு கு.சா. கிருஷ்ணமூர்த்தி (1979) குறிப்பிடும்… தமிழ் நாடக மரபைத் தொய்யவிடாமல், கால மாற்றத்துடன் காத்து வந்த பெரும் பேராசான்களில் ஒருவராய்த் திகழ்பவர், தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என்று போற்றப்படும் திரு தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922) ஆவார்.
1885 ஆம் ஆண்டு தொடங்கி 1922 ஆம் ஆண்டு இறுதிமூச்சு இருக்கும்வரை, நாடகக் கலை உலகின் ஒளிச்சுடராய்த் திகழ்ந்த பெருமைக்குரியவர் அவர்.
நடிப்புத் திறன், பயிற்சியளிக்கும் ஆற்றல், நாட கங்களை அமைக்கும் தகுதி, நாடகங்கள் இயற்றும் சக்தி, சங்கீத ஞானம், பல்வேறு தாளவின்யாசங்களில் தேர்ச்சி, தானே இசையமைத்துக்கொண்டு பாடல்களைப் பாடும் மேதாவிலாசம், வண்ணம், சந்தம், சிந்து, கலித்துறை, கலிப்பா, விருத்தம், வெண்பா ஆகிய அனைத்துத் துறைகளிலும் இணையற்ற புலமை, இலக்கண இலக்கியத் தெளிவு,
சிறியோர் முதல் பெரும் புகழ்பெற்ற கலைஞர் வரை அனைவரையும் அடக்கியாளும் ஆளுமை, நிறுவனங்களை நடத்திச் செல்லும் நிர்வாகத்தில் சாதனை-இத்தனையும் சேர்ந்த மொத்த வடிவம்தான் சுவாமிகள்’ (1998; பக்.20) என்கிற கருத்தில், எனக்கு என்றுமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.
ஆயின், சங்கரதாஸரைவிட மூன்று வயது மூத்த பரிதிமாற்கலைஞரும் (1870-1903), அவரை விடவும் மூன்று வயது மூத்த பம்மல் சம்பந்தனாரும் (1873-1964), சங்கரதாஸரை விடவும் ஏழு வயது மூத்த மனோன்மணியம் சுந்தரனாருமேகூட (1855-1897),
அன்றையக் காலகட்டத்தின் பிரதான எழுச்சியாயிருந்த சுதந்திரப் போராட்ட வீர்யத்தின் எந்தப் பாதிப்புமின்றியே நாடகங்கள் எழுதியிருப்பது, ஆச்சரியந்தரத்தக்கதாகும்.
சங்கரதாஸரைத் தவிர்த்து, மற்றைய மூவரும், ஏதோவொரு வகையில், அரசினுடைய பணிப் பட்டியலுக்குள் அடங்கக்கூடியவர்களாய் இருக்கக்கூடும்.
சங்கர தாஸருக்கு அந்த மாதிரி எந்தக் கூண்டுகளும் இல்லை. தவத்திருவானவர்-அவருக்கு மாணவர்கள் தவிர, வேறு குடும்பமும் இல்லை.
சுதந்திரமாகவே இயங்கக் கூடியவர்; நரஸ்துதி யாரையும் செய்ய, தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளாதவர்! அவர், தகித்துக் கொண்டிருக்கிற புறச்சூழலைப் புறந் தள்ளி, நாடகங்கள் செய்யக் காரணங்கள் என்னென்ன என்பது இயல்பான ஒரு கேள்விதான்!
இதற்கான பேரா.பார்த்திப ராஜாவின் பதிலுமே, அவரின் கொள்ளுத் தாத்தாமீதுகொண்ட பக்தியால் அறையலுற்றதாய்-மனச் சமாதானத்திற்கானதாய்-இருக்கிறதேயொழிய, உள்ளாழம் சென்று துளா வுகிற முயற்சியாய் அது தெரியவில்லை.
அது, கதை சொல்கிறவரின் வேலையும் இல்லை என்பதும் புரிகிறது. ஆனால், எதையும் நுணுகிப் பகுத்தாயும் ஆராய்ச்சியாளர் பார்த்திப ராஜா பற்றிய என் எண்ண ஓட்டமும், என் ஆராய்ச்சி மனசும், அதற்கிடையில் குறுக்குச்சால் ஓட்டிக் கொண்டேயிருக்கையில் நான் என்னதான் செய்வது?
’சுவாமிகள் எழுதிய நாடகங்கள் என்று பொதுவாக ஐம்பதுக்கும்மேல் என்றுதான் சுவாமிகளின் சீடர்கள் சொல்லி வந்தார்கள். ஒரு சிலரே அந்நாடகங்களின் பெயர்களையும் அறியத் தந்தார்கள்.
மொத்தம் 68 நாடகங்களின் பெயர்கள் மட்டும் இன்றைக்கு நாம் அறியக் கூடியதாக இருக்கிறது. அவற்றில் 16 நாடகங்கள் மட்டுமே-மொத்தத்தில் கால்வாசி நாடகங்கள் மட்டுமே-முழுவதுமாகக் கண்டெடுக்கப்பட்டு, அவை அச்சில் கொண்டு வரப்பட்டன.
வெளிக்கொண்டு வரப்பெற்ற சுவாமி களின் நாடக நூற்பட்டியலில் ‘கட்டபொம்மன் நாடகம்’ இல்லை. ஆனால், வழக்கில் கட்டபொம் மன் நாடகம் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது-இப்பொழுதும்!
ஆயின் அது சுவாமிகளினுடைய நாடகப் பாடம் அல்ல என்பதாகவே கள ஆய்வில் அறியமுடிகிறது.
மதுரை-இராமநாதபுர மாவ ட்டப் பகுதிகளில், ’கட்டபொம்மன் நாடகம்’ எனும் பெயரில் ’பாதர் வெள்ளை’யின் கதைதான் நடந்து வந்திருக்கிறது.
அதில் நாயகன் ’பாதர் வெள்ளை’ என்கிற வெள்ளையத் தேவன்தான்!
அதுவும் சுவாமிகளினுடைய பாடமா என்பது தெரியவில்லை. நானே மதுரைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்த பொழுதில்,-1974-75 வாக்கில்-கட்டபொம்மன் சிலைக்குப் பின் புறம் மதுரை இரயில்வே அஞ்சல் நிலையம் (RMS) செல்லும் பாதையில், ‘கட்டமொம்மன் நாடகம்’ பார்த்திருக்கிறேன்.
அதுவும், பாதர் வெள்ளைக் கதையையே பிரதானப்படுத்திப் பேசியதாகவே நினைவில் பதிந்திருக்கிறது.
‘வெள்ளையத் தேவன் பரம்பரையில் வந்த ஒரு பெரியவர் கொண்டு வந்து கொடுத்த சுவடிகளைக் கொண்டு சுவாமிகள், வீரபாண்டியக் கட்டபொம்மன் நாடகத்தை எழுதினார் என அறிகிறோம்’ என்பதற்கு, வலுவான ஆதாரங்கள் வேறெதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை.
1799 இல் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன் பற்றிய ‘கட்டமொம்முக் கதை ப்பாடல்’, ‘கட்டபொம்முக் கூத்து’ ஆகியவற்றைப் பேரா. நா. வானமாமலை அவர்கள் எழுபதுகளில் மதுரைப் பல்கலைக்கழகம் மூலம் வெளியிட்டிருக்கிறார்கள்.
அதில் எங்கும், மக்கள் வழக்கிலிருந்து, அல்லது அவர் பதிப்பித்திருக்கிற சுவடிகளிலிருந்து சுவாமிகள் அதை நாடகமாக்கியிருக்கிறார் அல்லது முயன்றிருக்கிறார் என்பது பற்றி எதுவும் குறிப் பிட்டிருப்பதாகவும் நினைவிலில்லை.
ஆயினும், சுதந்திரப் போராட்ட ஆகுதியில் தங்களைக் கரைத்துக் கொண்ட எண்ணற்ற நாடகக் கலைஞர்கள்-விஸ்வநாத தாஸ் (1886-1940), மதுர பாஸ்கரதாஸ் (1892-1952), கமலவேணி, காதர் பாட்ஷா, ஜானகியம்மாள் என்கிற ’பெரும் நாடகப் பட்டாளமே மேடைகளைப் போராட்டக் களங்களாக ஆக்கிய வரலாறு, முற்றிலும் சுவாமிகளுக்குப் பிந்தைய வரலாறு’ என்பதில் உண்மை இருந்தாலும்,
‘சுதந்திரம் என்பது எவர்க்குச் சாஸ்வதமோ அவர்களே சிறந்தவர்கள்’ என்று ‘சதி அநுசுயா’ நாடகத்தில் சொல்லப்படுகின்ற, ஒற்றை வரியிலுள்ள ‘எவர்க்குச் சாஸ்வதமோ’ என்கிற இடத்தில் வருகின்ற ‘விதி விட்ட வழி’ என்கிற அங்கலாய்ப்புத் தொனியும்,
‘அரசு கைக் கொண்டனை; சிறையிடு நாடு கொடு அல்லது உயிர் கொல்வேனே’ என்கிற சுவாமிகளின் சீமந்தனி நாடக வரியும், போதுமான நேரிடை ஆதாரங்களாய், அழுத்தமாக இல்லை என்பதை நாம் மனங்கோணாமல் ஏற் றுக் கொள்வதில் தவறில்லை.
சுவாமிகள், விடுதலைப் போர் பற்றி, நாடகமாக இல்லை, பாடல்களாகவும் பாடியிருக்கவில்லை; பேசியிருப்பதாகவும் பதிவில்லை. 1876 இல் பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட ‘நாடக நிகழ்த்தல்கள் சட்டம்’ அப்பொழுதே வழக்கத்தில் இருந்திருக்கிறது.
1905 இல் வங்காளப் பிரிவினை நிகழ்ந்திருக்கிறது. 1907 இல், சங்கரதாஸ் சுவாமிகள் ஊருக்கு நெருக்கமான ஊர்க்காரரும் (காட்டுநாயக்கன்பட்டி, இப்பொழுது, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில்தான் வருகிறது.) தூத்துக்குடியில் பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிராகச் சுதேசி நாவாய்க் கம்பெனி உருவாக்கியவரும்,
1908 இல் இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூத்துக்குடி கோரல் மில் (பின்னாளில் ஆர்வி மில், அதற்குப்பின் மதுரா கோட்ஸ்) தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி முன்னெடுத்த வ.உ.சி.யின் செயல்பாடுகளும், அதைத் தொடர்ந்து அவர் பெற்ற இரட்டை ஆயுள் தண்டனை,
1917இல் இரஷ்யப் புரட்சி,1919 இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை–இவை யெதுவும் சுவாமிகள் போன்ற ஒரு கலைஞரை எப்படிப் பாதிக்காமல் போயிருக்கும் என்பதற்கு எந்தவொரு தெளிவான விளக்கமும் பதிவாகியிருக்கவில்லை.
அதற்கான ஆதாரங்களை, ஆய்வு மனப்பான்மையுடன், இந்த 75ஆவது சுதந்திர தின ஆண்டின் உரத்த நாடகச் சிந்தனையாய், சுவாமிகளின், இந்த தொன்னூற்றி ஒன்பதாவது நினைவு ஆண்டின் தொடக்கத்திலிருந்தாவது நாம் தேடத் தொடங்குவோம்!
இதில், ’அபிமன்யு சுந்தரி’ நாடகத்தைக் கண்ட மகாகவி பாரதியார், ”சபாஷ் அபிமன்யு… உன் உரிமையை விட்டுத் தராதே” என்று அரங்கின் நடுவில் எழுந்து நின்று உரக்கக் கத்தினார் என்று’ மகாகவி பாரதியையும், சம்பந்தமின்றி வம்பிற்கிழுத்திருப்பதாகவும் தெரிகிறது.
புரட்சிக் கவிஞர் அவர்கள், அன்றைய ’நாடக விமரிசன’மாக எழுதியிருக்கின்ற சில வரிகள் இப்படி நினைக்க வைத்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.
சங்கரதாஸ் சுவாமிகள் நடத்திக் கொண்டிருந்த நாடகத்தில் இப்படி நடந்ததா அல்லது வேறு யாரோ போட்டுக் கொண்டிருந்த நாடகத்தில் இப்படி நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை. பாடல் இப்படிப் போகிறது:-
‘ஒருநாள் பாரதியார் நண்பரோடும் / உட்கார்ந்து நாடகம் பார்த்திருந்தார்-அங்கே / ஒரு மன்னர் விஷமருந்தி மயக்கத்தாலே / உயிர்வாதை அடைகின்ற சமயம், அன்னோன் / இருந்த இடத்திலிருந்தே எழுந்து லாவி / ”என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே/ வருகுதையோ” எனும் பாட்டைப் பாடலானான்/ வாய் பதைத்துப் பாரதியார் கூறுகின்றார் / மயக்கம் வந்தால் படுத்துக் கொள்வதுதானே/ வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா? என்றார் / தயங்கிப் பின் சிரித்தார்கள் இருந்தோரெல்லாம்’ – சரி தானே பாரதியார் சொன்ன வார்த்தை?’– (தமிழ் நாடகம் -நேற்று இன்று நாளை, 1998; பக்:26) என் கிற கருத்து, இப்படி உருமாறியிருக்கலாமோ என்று கருதுவதற்கும் இடமுண்டு.
பாரதியார், புதுச்சேரிக்கு வந்து தங்கியிருந்த காலம் 1912. அப்பொழுதுதான், குயில் பாட்டு, கண் ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் எனும் முப்பெரும் காவியங்களைப் படைத்தார் என்று சொல்லப் படுவதுண்டு.
அவர், புதுச்சேரியை விட்டுக் கிளம்பியது-புதுச்சேரி எல்லையைக் கடக்கையில் – வில்லியனூர் அருகே கைதானது, 1918 நவம்பர் 20 ஆகும். அங்கிருந்து விடுதலையாகி, கடையத்திற்கு அவர் சென்றது 1918 டிசம்பர் 14! பாரதியார், செப்.11, 1921 இல் சென்னையில் காலமாகிறார்.
சுவாமிகள் 1921 வாக்கில் பக்கவாத நோய்க்கு ஆட்படுகிறார். ’நாடகக் கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவராகிய பழனியா பிள்ளை, தூத்துக்குடிக்குச் சென்று சுவாமிகளை அழைத் துச் சென்னைக்கு வந்தார்.
மருத்துவ சிகிட்சையைச் சுவாமிகளுக்குச் சென்னையில் வழங்கலாம் என்ற எண்ணம் அவருக்கு!’ என்பதாய் அவருடைய தலைமைச் சீடர் ஔவை டி.கே. சண்முகம் அவர்கள் நெகிழ்ச்சியுடன் எடுத்துக் காட்டுவதாய், ’உடல் நலம் குன்றினார் சுவாமிகள்’ எனும் கட்டுரை சுட்டுகிறது.
’பக்கவாதத்திலிருந்து மீளுவது கடினம் என்று தெரிந்ததும், சுவாமிகளும் அந்நிலையை ஏற்றுக் கொண்டார். பிறகு நாடகக் குழு பயணப்படும் இடங்களுக்கெல்லாம் சுவாமிக ளும் பயணப்பட்டார். நாடகக் குழு புதுச்சேரியில் இருந்தது.
சுவாமிகளும் புதுச்சேரியில் தங்கியிரு ந்தார். 1922 நவம்பர் இரண்டாவது வாரம் சுவாமிகளின் நிலை மிகவும் மோசமாகியது. சுவாமிகள் நவ.13, 1922 இல் புதுச்சேரியில் காலமானார். 1918 நவம்பர் 20 க்குப் பிறகு பாரதியார் புதுச்சேரி யில் இல்லை என்பது குறித்துக் கொள்ளப்பட வேண்டியது!
’இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகங்கள்’ எனும் தலைப்பில், நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது,1984 இல், ஒரு கருத்தரங்கு நடத்தினேன். அதில் திருவாளர்கள் சகஸ்ரநாமம், டி. என். சிவதாணு, கு.சா. கிருஷ்ணமூர்த்தி, டி.வி. நாராயணசாமி போன்ற பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மூன்று நாட்கள் நடந்த கருத்தரங்கு அது! பின்னாளில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக முது முனைவர் இராமர் இளங்கோ அவர்கள் இருந்தபோது, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அது நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
அக்கருத்தரங்கில் நடந்த ஒரு விவாதத்தின்போது, இதே கருத்தும் அங்குப் பேசப்பட்டது.
அது தவறான கருத்து என்று, திருவாளர்கள் சக ஸ்ரநாமம், டி.என். சிவதாணு, கு.சா.கிருஷ்ணமூர்த்தி, டி.வி. நாராயணசாமி ஆகியோர் ஆதாரங்களுடன் அதை மறுதளித்தது எனக்கு நன்கு நினைவிலிருக்கிறது.
இதன் அடிப்படையில்தான், இதுபோன்ற முதுபெரும் கலைஞர்களைப் பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து, அவர்கள் காலத்துப் புனைவுகளின்மேல் கேள்விகள் எழுப்பி, அவர்களைப் பேசவிட்டு, அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தவேண்டும் என்று முனைவர் வ. அய். சுப்பிரமணியம் அவர்கள் அங்குத் துணைவேந்தராய் இருந்தபோது ஒரு திட்டம் கொடுத்திருந்தேன்.
அப்பொழுது, ஒலி, ஒளிக் காட்சி மையம் சுயமாகச் செயல்படும் துறையாகப் பல்கலைக்கழகத்தில் பெரிதாக உருவாகாதிருந்தது. ஆயின், அத்திட்டம், கடிதக் கட்டுமானங்களுக்குள்ளாகவே நின்று போனது.
இந்த இடத்தில், ஆய்விற்குரியதாய்ப் பேசப்படவேண்டிய இன்னும் இரண்டு செய்திகளும் உள் ளன. அதிலொன்று, தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகள் என்பதன் முதலெழுத்தான ‘தூ’ என்பது, தூத்துக்குடியைக் குறிக்கும் என்பதற்குப் பின்னாலிருக்கும் காரணம் இன்னுமே ஆராயப்பட வேண்டியது.
’காட்டுநாயக்கன் பட்டி’ சுவாமிகளின் பிறந்த ஊர் என்றால், சுமார் 35 கி.மீ. தூரமுள்ள தூத்துக்குடியை முதலெழுத்தாக அவர் கொள்ள வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது? அப்பொழுது அது, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தது!
மாவட்டத் தலைநகர் திருநெல்வேலி! வேறு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். அவருடைய நினைவு நூற்றாண்டு விழா தொடங்குமுன்னாவது, நாம் இதில் தெளிவடைவோமாக! இன்னொன்று, இன்று (03-11-2021) நான் காட்டுநாயக் கன்பட்டி போயிருந்தேன்.
அங்கிருப்போருக்கு, சங்கரதாஸ் சுவாமிகள் என்றால் யாரென்று தெரி யவில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த வீட்டின் தடம் எதுவும் அங்கில்லை. சில வயோதிகர்களால், வீடு இருந்ததாகக் காட்டப்படும் ஒரு பொட்டல் இடத்தின் அருகில், 1924 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘இந்து நாடார் துவக்கப்பள்ளி’ இன்னமும் கட்டுக் குலையாமல் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.
இங்குதான் பெருந்தலைவர் காமராசர் மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் தொடங்கி வைத்தாராம்.
இந்தப் பெருமையை நினைவில் வைத்திருக்கும் அங்குள்ள ஆசிரியைகளுக்குமேகூட, சங்கரதாஸ் சுவாமிகள் பற்றிச் சிறு துரும்பும் தெரியவில்லை என்பதே உண்மை! ஒரு சிறு சிலையோ, நினைவில்லமோகூட அங்கில்லை. வ.உ.சி.க்கு இருக்கிறது;
திருவள்ளுவர் ஜீவ காருண்ய சங்கமும் அந்த ஊரில் இருக்கிறது. என்ன காரணம்? எப்படி அந்த மண், அவரைக் கை விட்டது? காட்டுநாயக்கன்பட்டியில் மட்டுமல்ல, அவர் முன்னெழுத்தாய்க் கொண்டிருக்கிற தூத்துக்குடியிலும்கூட சிலையோ நினைவில்லமோ, மன்றமோ எதுவும் இல்லை.
ஏன்? வாரிசு இல்லாத தனாலா? நாடக வாரிசுகள் அந்தப் பகுதியில் இல்லாததனாலா? பெயர் நிலைப்பதற்கு வாரிசு அவசியமாயிருக்கிறது. சங்கரதாஸ் சுவாமிகள், அவருக்கு அமைந்ததெல்லாம் மாணவ வாரிசுகள்-பரம்பரை மட்டும்தான்!
ஔவை டி.கே. சண்முகம் சகோதரர்கள் போன்ற மாணவ வாரிசுதாரர் மட்டும் இல்லையென்றால், சங்கரதாஸ் சுவாமிகள், எத்தனையோ நாடக ஆசிரியர்களைப்போல, நடிகர்களின் நாவில் மட்டுமே வாழ்ந்து போயிருக்க வேண்டும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், திருநெல்வேலி மண்டலக் கலை பண்பாட்டுத் துறையின்மூலம் வரும் 13-11-2021அன்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில், காட்டுநாயக்கன் பட்டியில், அவரெழுதிய ’வள்ளி திருமணம்’ நாடகத்தை நிகழ்த்த இருக்கின்றனர்.
அதன்காரணமாகவே நானும் காட்டுநாயக்கன்பட்டியில் கால் மேவ முடி ந்தது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றப் பொறுப்பிலிருக்கும் எனக்கும், இனி, இது, மிக முக்கியமான சவாலாயிருக்கும்!
முனைவர் பார்த்திப ராஜா நூலுக்கு அணிந்துரை எழுதப்போய், அது, என் அகக் கண்ணைத் திறந்திருக்கிற அதிசயத்தையும் இங்கு நிகழ்த்தியிருக்கிறது. சாமீ…யின் நாடகக் கொள்ளுப் பேரப் பிள்ளைகளின் முன் நிற்கும் முக்கியச் சவாலும்கூட இது!
வரும் நவம்பர் 13, 2021 தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு தூ.தா. சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் நினைவு தொன்னூற்றி ஒன்பதாவது ஆண்டுத் தொடக்கமாகும். அடுத்த ஆண்டு, நூறாவது நினைவு ஆண்டாகும்.
அதைக் கட்டியங் கூறுவதாக, அதைத் தொடங்கி வைக்க வந்திருக்கிற, ஒரு எளிய-கையடக்கக் களஞ்சியத் தொகுப்பு நூலாக இருக்கிறது இது!
தவத்திரு து.தா. சங்கரதாஸ் சுவாமிகள் துயில்கொண்டிருக்கிற கருவடிக் குப்பம் இடுகாட்டில், இதன் வெளியீட்டு விழா-அவரின் நினைவு நூற்றாண்டுக்கான அச்சார விழா-அவர்மேல் அன்பு கொண்டிருக்கிற அன்பர்களால் நிகழ இருக்கிறது என்பதை நினைக்கும்போதே, அந்தக் காட்சி மனதிற்கு இனிமை தருகின்றது.
நாடகமாகவே வாழ்ந்து சமாதிக்குள் அடங்கிக் கிடக்கிற அவரின் இடத்திலிருந்து- ’எந்த இட த்தில் ஒடுங்குமோ அந்த இடத்திலிருந்தே’-நாடகக் கலைஞர்களின் புதிய சங்கற்பங்கள் தொடங்கட்டும்! நாடகம் தமிழ்த் திசையெங்கும் புத்துயிர் கொள்ளட்டும்!! வாழ்த்துகள் பார்த்திபராஜா!!!
மு. இராமசுவாமி,
உறுப்பினர் செயலாளர்,
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்.
வெளியீடு : பரிதி பதிப்பகம்.
விலை : ரூ. 400
விற்பனை உரிமை : மெரினா புக்ஸ் – 88834 88866