– யுனெஸ்கோ அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பாலின சமத்துவத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கொரோனா பரவலைத் தடுக்க உலகின் பல நாடுகளில் பள்ளிகள் பல மாதங்களாக தொடர்ந்து மூடப்பட்டன.
இதனால் 19 கோடி மாணவ – மாணவியர் பாதிக்கப்பட்டனர். கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் பலருக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில் ‘ஆன்லைன்’ வழியாக கல்வி கற்கும் வசதி, பல நாடுகளில் ஏழை மாணவ, மாணவியருக்கு இல்லை. பல நாடுகளில் கல்வியைப் பாதியில் நிறுத்தியோர் அதிகரித்துள்ளனர்.
குறிப்பாக பாலின சமத்துவம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூட்பட்டதால் பல நாடுகளில் மாணவியர் பலர் படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்ட பின் பள்ளிக்கு வரும் மாணவியர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பல ஏழை நாடுகளில் மாணவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனர். படிப்பதற்காக மட்டுமே பள்ளிகள் என கருதக் கூடாது. பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் உடல் நலம், மன நலம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.