கேரள பள்ளியில் ஒரு சீருடைப் புரட்சி!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வளயன்சிரங்காரா என்ற ஊரில் இருக்கும் ஆரம்பப் பள்ளி ஒரே நாளில் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் இருவருக்கும் பொதுவான ஒரேபோன்ற சீருடையை அப்பள்ளி அறிமுகப்படுத்தி இருப்பதுதான் இதற்கு காரணம்.

இந்த சீருடைப் புரட்சியின் மூலம் பாலின வேறுபாட்டை அகற்றிய அப்பள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த சீருடைப் புரட்சி ஒன்றும் ஒரே நாளில் ஏற்பட்ட விஷயமல்ல. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2018-ம் ஆண்டில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராய் இருந்த சி.ராஜி, இப்படி ஒரு யோசனையை முன்வைத்தார்.

ஆடை வடிவமைப்பாளர் உதவியுடன் இருபாலாருக்கும் ஏற்ற உடையையும் வடிவமைத்தார்.

ஆனால் அப்போது எழுந்த சில சலசலப்புகளால், இத்திட்டம் நிறைவேற 3 ஆண்டுகள் ஆகியுள்ளன.

இறுதியில் ஆசிரியர் மற்றோர் அமைப்பின் ஆதரவுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கூறும் ராஜி, “பள்ளி மாணவர்களிடையே பாலின வேறுபாட்டை களைய வேண்டும் என்பது என் முதல் நோக்கமாக இருந்தது.

இந்த விஷயத்தில் உடை ஒரு தடையாக இருந்தது. குட்டைப் பாவாடை அணிந்து வரும் மாணவிகளுக்கு, அதில் பல்வேறு சிரமங்கள் இருப்பது தெரியவந்தது.

முதலில் இரு பாலாருக்கும் ஏற்ற ஒரேமாதிரியான சீருடையை அமல்படுத்த முயன்றேன். 90 சதவீத பெற்றோர் என் முயற்சியை ஆதரித்த நிலையில், 10 சதவீதம் பேர் அதை எதிர்த்தனர்.

காலப்போக்கில் அவர்களை சமாதானம் செய்து பள்ளியில் இத்திட்டம் அமலாகி உள்ளது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இப்பள்ளியின் மாணவர்களும் மாணவிகளும் தற்போது பொதுவாக அரைக்கைச் சட்டை மற்றும் முக்கால் பேண்ட்களை அணிந்து பள்ளிக்கு வருகிறார்கள்.

இப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியையான சுமா இதுபற்றி கூறும்போது, “இந்த சீருடை மாணவிகளுக்கு சவுகரியமான உடையாக இருக்கிறது.

குட்டைப் பாவாடையில் இருக்கும் பல சங்கடங்கள் இதில் இல்லை. மாணவிகளும், பெற்றோரும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்” என்கிறார்.

105 வருட பாரம்பரியம் கொண்ட இப்பள்ளியில் சீருடை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்த மற்றொருவர் வித்யா முந்தன்.

தொலைக்காட்சித் தொடர்களுக்கும், விளம்பரங்களுக்கும் ஆடைகளை வடிவமைத்துத் தரும் இவர்தான், இப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான ஒரே சீருடையை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.

தற்போது ஒரு திரைப்படத்தை இயக்கும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

You might also like