வெள்ளச் சேத ஆய்வை மேற்கொள்ளும் மத்தியக் குழு!

இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலுார், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. சாலை உள்ளிட்ட பல்வேறு உள் கட்டமைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவற்றின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், நிவாரணம் வழங்கவும், மத்திய அரசிடம் தமிழக அரசு 2,629 கோடி ரூபாய் கேட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் வெள்ளச் சேதங்களை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் ராஜீவ் ஷர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், மத்திய நிதி அமைச்சக ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண் அமைச்சக இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மத்திய மின்துறை அமைச்சக உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே,

மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சக செயலர் வரபிரசாத், மத்திய நீர்வள அமைச்சக இயக்குனர் தங்கமணி, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக மண்டல அலுவலர் ரணஞ்சய் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினர் நேற்று பகலில் டில்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தனர். மத்திய குழுவினருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடந்தது.

இதில், தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் குமார் ஜெயந்த், இயக்குனர் சுப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பின், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், வெள்ளச் சேத புகைப்பட கண்காட்சியை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். சென்னையில் மண்டல வாரியாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புகைப்படங்களைக் காட்டி, மத்திய குழுவினருக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விளக்கினார்.

மத்திய குழுவினர் இரண்டு பிரிவாக பிரிந்து, இன்றும், நாளையும் வெள்ள பாதிப்பு மற்றும் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

முதல் குழுவினர் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு செல்கின்றனர். பிற்பகலில் புதுச்சேரி செல்லும் அவர்கள், வெள்ள சேதங்களை ஆய்வு செய்ததும், இரவில் அங்கு தங்க உள்ளனர்.

நாளை, கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வு செய்து விட்டு, திருச்சியில் இருந்து விமானத்தில் சென்னை திரும்ப உள்ளனர்.

இரண்டாவது குழுவினர், இன்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் துாத்துக்குடி செல்கின்றனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

இரவு துாத்துகுடியில் தங்கிவிட்டு, நாளை காலை விமானத்தில் சென்னை திரும்ப உள்ளனர். உடன் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

அங்கிருந்து அன்றிரவே சென்னை திரும்புவர். இதைத் தொடர்ந்து, 24ம் தேதி தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மத்திய குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆய்வை முடித்து அன்று மாலை 4:15 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்ல உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சென்னை குடிநீர் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. ஆரணியாறு, கொசஸ்தலையாறு, புழல் ஏரி உபரி நீர் கால்வாயில் வெளியேறும் நீரால் குடியிருப்புகள், சாலைகள் மூழ்கியுள்ளன.

ஆனால், மத்திய குழுவினரின் ஆய்வு பட்டியலில், திருவள்ளூர் மாவட்டம் இடம்பெறவில்லை என்பதால் அந்த மாவட்ட மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like