நூல் வாசிப்பு:
சர்வதேச அளவில் பேசப்படும் ஓவியம், சிற்பம், சினிமா பற்றி எழுத்தாளர் எஸ்.ரா. எழுதிய நூல்தான் மோனேயின் மலர்கள். நூலின் தலைப்பில் அமைந்த முதல் கட்டுரை முதல் வரையப்படாத கைகள் வரையில் 20 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கலைவெளியில் சாதித்த கலை மேதைகள் பற்றி திரைப்படங்கள் பற்றியும் அவர் சுவையாக எழுதியுள்ளார்.
பிரெஞ்சு ஓவியர் க்ளாட் மோனே இயற்கையைத் துல்லியமாக வரைவதில் முதன்மையானவர். இவரது ஓவியங்களை நியூயார்க் மார்டன் மியூசியத்தில் கண்ட அனுபவத்தை எஸ்.ரா. குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கிக் காட்டும் மோனேயின் ஓவியத்தில் வெளிப்படும் களங்கமின்மையும் தனிமையும் நம்மைக் கவர்ந்திழுக்கக் கூடியவை என்கிறார்.
தாய் இணையதள வாசகர்களுக்காக நூலிலிருந்து ஒரு சுவாரசியமான கட்டுரையின் சுருக்கம் இங்கே…
ஓவிய உலகில் வின்சென்ட் வில்லியம் வான்கோ என்பது ஒரு பெயரில்லை. அது ஒரு தனித்துவமிக்க அடையாளம். நவீன ஓவியர்களுக்கு அவர் நிகரற்ற கலைஞன். பேராசான். அவரது வண்ணங்களைப் போல கோடுகளைப் போல வரைந்துவிடமுடியாதா என்ற ஏக்கம் இளம் ஓவியர்களுக்கு உண்டு.
உன்மத்த நிலையில் வான்கோ வரைந்த ஓவியங்கள் உலகமே பற்றி எரிவது போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
கெளதம புத்தர் தன் முதற் சொற்பொழிவை சாரநாத்திலுள்ள மான் பூங்காவில் ஆற்றினார். அந்த உரையில் உலகம் முழுவதும் நெருப்பு இடையூறில்லாமல் எரிந்து கொண்டேயிருக்கிறது. அதை எவராலும் அணைக்கமுடியாது.
அந்த நெருப்பின் பெயர் காலம். அதை நீங்கள் காணமுடிகிறதா? என்று கேட்கிறார்.
காலத்தின் சுடர் தீண்டாத பொருளேயில்லை. ஒவ்வொரு நிமிஷமும் உலகிற்கு வயதாகிறது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் கால நெருப்பில் எரிந்துகொண்டிருக்கிறது.
அந்த அனுபவத்தை முழுமையாக உணர்ந்த மனிதரைப் போலவே இருக்கிறார் வான்கோ. அவரது ஓவியத்தில் கோடுகள் நெருப்புப் பற்றிக் கொள்வது போலவே மேல்நோக்கி எழுகின்றன. அடர்ந்து பரவுகின்றன.
தீவிரம்தான் அவரது ஓவியங்களின் தனித்துவம். அந்தத் தீவிரம் வாழ்நாள் முழுவதும் வான்கோவை வதைத்தது. நுண்ணுணர்வுகள் கொண்ட கலைஞர்களுக்கு வாழ்க்கை எப்போதும் துயரமே.
அதிலும் மனம் நிறையப் படைப்பாற்றல் பொங்கி வழியும் சூழலில் கையில் காசில்லாமல், இருக்க இடமில்லாமல் அவதிப்படும் வாழ்க்கை இருக்கிறதே அது பெருந்துயரம். அப்படியொரு வாழ்க்கையைத்தான் வான்கோ ஏற்றுக்கொண்டிருந்தார்.
குளிர்காலத்திற்குத் தேவையான உடைகள் அவரிடமில்லை. கணப்பு அடுப்புகொண்ட அறையில்லை. தகுதியான காலணிகள் கூடக் கிடையாது. வண்ணமும் தூரிகையும் வாங்குவதற்குக்கூட அவரிடம் பணமில்லை.
ஆனால் மனதில் நெருப்பு பீறிட்டுக் கொண்டேயிருக்கிறது. அரைகுறை குளிராடைகளுடன் அவர் ஓவியம் வரைவதற்காக நிலக்காட்சிகளைத் தேடிச் சென்றார். குளிர்காற்றில் கைகள் விரைத்துப் போக ஓவியம் வரைந்தார்.
வான்கோ இயற்கையை நகல் எடுக்கவில்லை. மாறாக புரிந்துகொள்ள முயன்றார். எது இயற்கையாக உருவெடுத்துள்ளது என்பதை அறிந்துகொண்டிருந்தார்.
சூரிய ஒளியை அவரைப் போல நேசித்தவரில்லை. அவரே ஒரு சூரியகாந்தி செடியைப் போலத்தான் இருந்தார்.
சூரியன் செல்லும் திசைதோறும் உடன் சென்றார். மரங்களை, நிலவெளியை எப்படிச் சூரிய வெளிச்சம் நிரப்புகிறது.
இலைகள் சூரிய வெளிச்சத்தில் எவ்வாறு மின்னுகின்றன. கடினமான பாறைகள்கூடச் சூரியனின் மஞ்சள் வெளிச்சத்தில் எப்படி உருகிப்போடுகின்றன என்பதை வான்கோ அவதானித்தார்.
மோனேயின் மலர்கள்: எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம், டி– 1, கங்கை அடுக்ககம், 110, 80 அடி சாலை, சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை – 600 093 / விலை ரூ. 130
பா. மகிழ்மதி