– நடிகை பானுமதி
நான் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய புதிது. ‘கிருஷ்ண பிரேமா’ என்ற படத்தில் ஒரு சாதாரண வேஷத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்கு ராமகிருஷ்ணா என்பவர் அசோஸியேட் டைரக்டராக இருந்தார்.
“ராமகிருஷ்ணா இஸ் எ நைஸ் மேன்!” என்று எல்லாரும் சொல்வார்கள். அதைக் கேட்டுக் கேட்டு அவர் மீது எனக்கு ஓர் அன்பு ஏற்பட்டது. ஒரு நாள் என் தந்தையிடம், “அப்பா! நான் அவரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன்” என்று சொன்னேன்.
என் தந்தை திடுக்கிட்டுப் போனார். ஆனால், சமாளித்துக் கொண்டு, “அவருக்கும். அந்த விருப்பமிருக்கிறதா?” என்று கேட்டார். “எனக்குத் தெரியாது. நீங்களே கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றேன்.
என் தாயார் எதிர்த்தார். இருந்தாலும், என் தந்தையின் ஏற்பாட்டில் அவர் என்னைப் பெண் கேட்க வந்தார். வந்தவர் மிகவும் கண்டிப்பாகப் பேசினார். “என்னிடம் பணம் இல்லை. படிப்பும், திறமையும் இருக்கிறது.
இஷ்டமிருந்தால் உங்கள் பெண்ணைக் கொடுங்கள். என் வருமானத்துக்கேற்ப அவளை வசதியாக வைத்திருப்பேன். என்னோடு ஓர் ஓலைச் குடிசையில் வாழ்வதற்கும் அவள் தயாராக இருக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
என் தந்தை பயந்து, “இப்போதே இவ்வளவு கண்டிப்பாகப் பேசுபவர், பின்னாளில் உன்னைக் கொடுமைப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவரை மறந்து விடு” என்று கூறினார்,
“சரி, மறந்து விடுகிறேன். ஆனால், இன்னொருவரைக் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன். எப்போது நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தேனோ, அப்போதே நான் அவருக்கு மனைவியாகி விட்டேன்!” என்றேன்.
அப்போதும் என் பெற்றோர் சம்மதிக்கவில்லை. விளைவு? பெற்றோருக்குத் தெரியாமல் எங்கள் திருமணம் நடந்தது.
மணமக்கள் கோலத்தோடு ஆசி பெற வந்தோம். என் தாயார் எங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை.
தந்தையோ அழுதபடியே, “அப்பா… அப்பா என்று சுற்றிச் சுற்றி வருவாயே… இப்போது அந்த அப்பாவிடம் கூடச் சொல்லாமல் திருமணம் செய்துகொள்ள உனக்கு எப்படியம்மா மனம் வந்தது?” என்று கேட்டார்.
நானும் அழுதேன். அழுதபடியே “அதுதான் விதி!” என்று சொன்னேன்.
13.02.1972 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த பேட்டி
நன்றி: ஆனந்த விகடன்