பிரேம்சாகர் மிஸ்திரி: கழுகுகளைக் காக்கும் மனிதர்!

மகாராஷ்டிர மாநிலம் ராஜ்காட் மாவட்டத்தில் மஹாட் என்ற ஊரைச் சேர்ந்தவர் பிரேம்சாகர் மிஸ்திரி. இயற்கையான சூழலில் பிறந்து வளர்ந்தவர். பால்ய காலத்திலேயே அவரிடம் பறவைகள் மீது தனிப் பிரியம் உருவானது.

நண்பர்களுடன் டிரக்கிங் செல்வது, பறவைகளை அடையாளம் காண்பது என இயற்கையே அவரது பொழுதுபோக்காக மாறியது. பிறகு அவர் தொடங்கிய, ‘அழிந்துவரும் உயிரினங்களின் பாதுகாப்பு’க்கான தொண்டு நிறுவனம், மகாராஷ்டிர மாநிலத்தில் அருகிவரும் கழுகு இனத்தைக் காப்பாற்றி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் பகுதியில் கழுகுகளில் வாழ்விடத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இறைச்சிக்காகப் பட்டினி கிடப்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவேண்டியதில்லை.  இன்றைய நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில்லை.

பிரேம்சாகர் மிஸ்திரியின் சளைக்காத முயற்சியால் அழிந்துவரும் கழுகு இனம் காப்பாற்றப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அதன் எண்ணிக்கையை 22 லிருந்து 347ஆக உயர்த்தியிருக்கிறார்.

கொங்கன் பகுதியில் உள்ள கிராமவாசிகளே கழுகுகளின் பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள  9 வகை கழுகு இனங்கள் – ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், இமயமலை, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் காணப்படுகின்றன.

அவை அழிவின் விளிம்பில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இறந்த விலங்குகளின் உடல்களில் காணப்படும் டிக்ளோஃபெனாக் மருந்தைச் சாப்பிடுவதால் உயிரிழப்பைச் சந்திக்கின்றன. உணவின்றி பட்டினியாலும் பறவைகள் சாகின்றன.

உத்தரகாண்ட், உத்ராஞ்சல், மத்தியப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் நாட்டின் கடைக்கோடி பகுதிகளுக்கும் சென்று பறவைகள் பற்றி ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தலில் ஈடுபட்டதாகக் என்று கூறும் 51 வயதான பிரேம்சாகர்.

1998 ஆம் ஆண்டு வேலையிலிருந்து விலகினார். பிறகு சொந்த ஊருக்குச் சென்றார். ஊரிலிருந்த நாட்களில் பறவை ஆராய்ச்சி நிபுணர்களுடன் தொடர்பில் இருந்தார். பறவைகள் பாதுகாப்பு பற்றி அறிய வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டார்.

வேலையை விட்ட பிறகு கொங்கன் பகுதிக்கு வரும் பயணிகளுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தினார்.

மகாராஷ்டிராவில் வாழும் கழுகு இனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கும் செய்தியைப் படித்தார். அதுதான் பிரேம்சாகர் மிஸ்திரியின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது. இந்தப் பறவைகள் அழிவதற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட மிஸ்திரி முடிவெடுத்தார்.

சுற்றுச்சூழலைச் சுத்தம் செய்யும் பணியாளர்களாகக் கழுகுகள் இருக்கின்றன. அவை உயிரிழந்த விலங்குகளின் உடல்களைச் சாப்பிடுகின்றன.

தூய்மையான கிராமம் என்ற அரசு திட்டத்தால், விலங்குகளின் உடல்கள் உடனடியாக மண்ணில் புதைக்கப்படுகின்றன. அல்லது உடனடியாக அப்புறப்படுத்தப்படுகின்றன.

பிரேம்சாகர் மிஸ்திரி பறவைகள் பாதுகாப்புக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை 1999 ஆம் ஆண்டு தொடங்கினார்.

கிராமங்களில் பறவைகளின் வாழிடங்கள் பற்றிய கணக்கெடுப்பைத் தொடங்கினார். 22 கழுகுகள் கூடுகளில் வசிப்பதைக் கண்டறிந்தார். ஆரம்பக் காலத்தில் இன்னும் அதிகமான கழுகுகள் வாழ்ந்ததாகக் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டுகளிலேயே கிராமவாசிகளுடன் இணைந்து அவர் 50 ஆயிரம் மரங்களை நட்டார். கிராம மக்களுடன் நெருங்கிப் பழகி, கழுகு இனங்களின் முக்கியத்துவத்தைப் புரிய வைத்தார்.

பா. மகிழ்மதி

You might also like