தமிழ்த் திரையுலகில் சம காலத்தில் நடிகை ஜெயசுதா, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி ஆகியோர் கதாநாயகிகளாக கொடிகட்டிப் பறந்தனர்.
அந்த நினைவுகள் குறித்து நடிகை ஜெயசுதா நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
“சினிமாவில் நடிகையர் திலகம் பட்டத்தை சாவித்திரிக்கு மட்டுமே உபயோகிக்கிறார்கள். அவருக்குப் பிறகு எவ்வளவோ சிறந்த நடிகைகள் சினிமாவில் சாதித்துள்ளனர்.
ஆனால், அவர்கள் எல்லோரும் சாவித்திரி மாதிரி பேசப்படவில்லை என்பது என் வருத்தம். சாவித்திரிக்குப் பிறகு மிகச்சிறந்த படங்களில் வாணிஸ்ரீ நடித்தார்.
ஊர்வசி விருது பெற்ற சாரதா வித்தியாசமான பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும் சாவித்திரிக்குப் பிறகு யாருமே பேசப்படவில்லை. சிறப்பாக நடித்த மற்ற நடிகைகளும் சாவித்திரி அளவுக்கு பாராட்டப்பட வேண்டும் இல்லையா?
வாணிஸ்ரீ, சாரதாவிற்கு பிறகு சீரியஸ் ரோலில் நடிக்க நான் வந்தேன்.
பெரிய ஹீரோக்களுடன் நடித்து கொண்டு சிறிய ஹீரோக்களுடன் ஏன் நடிக்கிறாய் என என்னை கேட்டவர்களும் உண்டு. கதாபாத்திரம் பிடித்திருந்ததால் நடித்தேன்.
ஸ்ரீதேவி சிறுவயது முதலே சினிமாவில் இருந்தாலும் எனக்குப் பின்னால் தான் கதாநாயகி ஆனார். அதன்பிறகு ஓராண்டு கழித்து ஜெயப்பிரதா வந்தார். ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி போன்ற அழகிகளுடன் ஜெயசுதா எப்படிப் போட்டி போட முடியும் என்றனர்.
எனவேதான் நடிப்புதிறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தேன். அதனால்தான் இன்னும் சினிமாவில் நடிக்கிறேன்.
இப்போதும் கூட எத்தனையோ நடிகைகள் இருந்தபோதிலும் சில கதாபாத்திரங்களை ஜெயசுதா தான் செய்ய முடியும் என நம்பி என்னை நாடி வருகிறார்கள்” என்று நெகிழ்ந்துள்ளார்.