வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான பாபா சாகேப் புரந்தரே (99) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புரந்தரே சிகிச்சை பலனின்றி இன்று காலை மறைந்தார்.
பாபா சாகேப் புரந்தரேவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
புரந்தரேயின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு வரலாற்று உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
புரந்தரே எழுதிய சத்ரபதி சிவாஜியின் வரலாறு பற்றி ஆய்வுகள் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. சத்ரபதி சிவாஜி குறித்த தனது படைப்புகள் மூலமே புரந்தரே புகழ் பெற்றவர்.
வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான புரந்தரேவுக்கு 2019ல் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.