யார் இந்த பென்னி குக்?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மீண்டும் எழுந்துள்ள நிலையில், பலருடைய பேச்சில் அடிபடும் பெயர் ‘பென்னி குக்’.

யார் இவர்? ஒரு பார்வை பார்க்கலாம்…

முல்லைப் பெரியாறு அணையால் பயன்பெற்று வருகின்ற தமிழக மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பென்னி குக் என்ற திருநாமத்தைத் தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.

தமிழனின் நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிவரும் இந்தப் பெயரின் பின்னணி பிரமிக்கத் தக்கது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் வடஆற்காடு மாவட்டத்தில் பென்னி குக் ஜான் என்பவர் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ராயல் இஞ்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., பட்டம் பெற்றார்.

ஆங்கிலேய அரசு பணி நியமனம் காரணமாக அவர் தமிழகத்தில் வேலூரில் பணியாற்றி வந்தார்.

அப்போது கம்பம் பகுதியில் 1861ஆம் ஆண்டு கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியும் பட்டினியுமாய் தினம் தினம் சித்ரவதை அனுபவித்தனர்.

இந்தப் பஞ்சம் 17 ஆண்டுகள் வரை தொடர்ந்து நீடித்து வந்தது. மாநிலமெங்கும் இது குறித்து மக்கள் வேதனையோடு பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

அப்போதுதான் பென்னி குக் ஜான் அந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தினார்.

‘இருட்டை எண்ணி எல்லோரும் வருந்துகிறார்கள். நாம் அதில் ஒளி விளக்கை ஏந்தினால் என்ன’? என்று சிந்திக்கலானார்.

கம்பம் பகுதிக்குச் சென்று பணியில் சேர்ந்து பஞ்சத்தை போக்கும் பணியில் ஈடுபட நெஞ்சத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டார். மேலதிகாரியிடம் வேண்டுகோளை வைத்தார். ஆங்கிலேய கவர்னர் ஜெனரலிடம் மன்றாடி அந்த வாய்ப்பை பெற்றார்.

கம்பம் பகுதியில் பஞ்சத்தைப் போக்கும் உபாயத்தை தேடிய அவர், அந்தப் பகுதியில் அணைகட்டி நீர் தேக்குவதற்குரிய இயற்கை சார்ந்த வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதைக் கண்டுபிடித்தார்.

உடனே அது சார்ந்த திட்ட மதிப்பீட்டை உருவாக்கி ஆங்கிலேய அரசுக்கு அனுப்பி வைத்தார். அரசும் அனுமதித்தது. நிதியும் கிடைத்தது.

அதன்படி இரண்டு அணைகளைக் கட்டி முடித்தார். 1886-இல் பணிகள் நிறைவுற்றன. ஆனால் அந்த இரு அணைகளுமே வெள்ளப் பெருக்கில் தொலைந்துபோயின. இதனால் ஆங்கிலேய அரசு இந்தத் திட்டப்பணிக்கான கோப்புகளை முற்றிலுமாக மூடி வைத்துவிட்டது.

ஆனாலும் பென்னி குக் ஜான் மனம் தளரவில்லை, லண்டனுக்குச் சென்றார். தன் குடும்பத்து சொத்துக்களை விற்றார். சொந்த பந்தங்களிடம் உதவிகளைத் திரட்டினார். நண்பர்களிடமும் நிதி உதவிகள் பெற்றார்.

அனைத்தையும் எடுத்துக்கொண்டு தமிழகம் திரும்பினார். தன் சொந்த செலவிலேயே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்து தென்மாநில மக்களின் அடிப்படை ஜீவாதார தேவைகளுக்கான வசதியை முழுமையாக வழங்கச் செய்தார்.

1895ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மாகாணத்தில் ஆளுநரான லார்டு வென்ட்லா திறந்து வைத்தார்.

முதல் கட்டமாக மதுரை மாவட்டத்துக்கு ஆனந்தத்தையும் அள்ளிக்கொண்டு பாய்ந்து வந்தது தண்ணீர்.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரின் வேகத்தைக் கட்டுப்படுத்த 18 தடுப்பணைகளையும் கட்டி வைத்திருக்கிறார் பென்னி குக்.

மலையைக் குடைந்து அதன் வழியே தண்ணீரை வரவழைத்த பெருமையும் அவரையே சாரும்.

இவரின் தந்தை பெயர் பென்னி குக். இவர் பெயரோ ஜான். எனினும் இவர் தந்தையின் பெயரால்தான் வரலாற்று ஆவணங்களில் அறியப்பட்டு வருகிறார்.

அரசாங்கமே கைவிட்டுவிட்ட ஒரு திட்டத்தை தானே நேரடியாக சிரமேற்கொண்டு சொந்தச் செலவில் நிறைவேற்றிக் காட்டிய பென்னி குக் ஜானை ஆங்கிலேய அரசு அரவணைத்துப் பாராட்டியது.

தமிழகமும் நெஞ்சில் நிறுத்தி நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது. லோயர் கேம்பில் அரசு சார்பில் அவருக்கு நினைவு மண்படமும் எழுயிருக்கிறது.

You might also like