– தெளிவுபடுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ‘நோட்டீஸ்’
திருச்சி, அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் கம்ப்யூட்டர் பொறியாளராக உள்ளேன். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், தொழில் பழகுனர் பயிற்சிக்கு 165 தமிழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வட மாநிலத்தினர் 1,600 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. புலம் பெயர்ந்தவர்களைவிட உள்ளூரைச் சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் இயற்றியுள்ளன.
மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க அரசாணை அல்லது சட்டம் இயற்றக் கோரி, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு, வெளி மாநிலத்தினர் எத்தனை பேர் தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என கேள்வி எழுப்பி, மனுதாரர் தெளிவுபடுத்த அறிவுறுத்தினர்.
மேலும், தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலர், பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.