கொரோனா பரவுகிறது: தேவை கூடுதல் கவனம்!

இந்திய அளவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது.

நேற்று மட்டும் கொரோனா 13 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைப் பாதித்திருக்கிறது. 340 பேர் இறந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 820 ஆகியிருக்கிறது.

அண்மைக் காலத்திய கன மழையால் பல்வேறு தொற்று நோய்களின் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதில் கொரோனாவும் அடக்கம்.

இங்கு மட்டுமல்ல, உலக அளவில் பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பது கவலை தருகிறது.

தற்போது தான் பல நாடுகள் விசா போன்றவற்றைத் தளர்த்தி பயணிகள் வருவதற்கான சூழலை உருவாக்கியிருக்கின்றன.

இந்த நிலையில் மீண்டும் பயமுறுத்தும் விதமாக ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கூடிக் கொண்டிருக்கிறது.

அதிலும் ஐரோப்பிய நாடுகளில் தாக்கம் அதிகரித்திருக்கிறது.

ஜெர்மனியில் மட்டும் ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவியிருப்பது ஓர் உதாரணம்.

ரஷ்யாவில் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பது பரவிக் கொண்டிருக்கிற டெல்டா வைரஸின் ஆபத்தை வெளிப்படுத்துகிறது.

இந்தச் சமயத்தில் இந்தியாவோ, தமிழ்நாடோ என்ன செய்ய முடியும்?

முடிந்த வரைக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை மட்டுமே இப்போதைக்கு உறுதிப்படுத்தினாலே அது தடுப்புக்கான முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா சொல்வதைத்தான் நாமும் வழிமொழிய வேண்டியிருக்கிறது.

“ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள். அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்துங்கள்”

You might also like