தொடர் மழைப் பாதிப்பால் தமிழகம் திணறிப் போயிருக்கிறது.
தமிழகத்தின் பல பகுதிகள் கூடுதலாக 20 செ.மீ.க்கும் அதிகமாகப் பெய்த பெரு மழையால் திணறிப் போயிருக்கும் போது, மக்கள் தொகை அடர்த்தி கொண்ட தலைநகரான சென்னை அதிகமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் பாதிப்பு இன்னும் விலகவில்லை.
சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மட்டுமல்ல, சென்னை நகர மையப்பகுதியிலேயே மழை நீர் தொடர்ந்து தேங்கி பலரைத் தவிக்க வைத்திருக்கிறது.
பல பகுதிகளில் மழை நீர் வடிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், சாக்கடை நீர் கொப்பளித்து வெளியேறி பல பகுதிகளை நாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு பெய்த பெரு வெள்ளத்தை சென்னை வாசிகள் மறந்திருக்க மாட்டார்கள்.
அரசு இயந்திரம் உரிய நேரத்தில் தகுந்த முடிவெடுக்கத் தவறினால், ஏற்படும் ஆபத்தான விளைவுகளை சென்னை வாசிகள் அனுபவித்தார்கள். வீடுகள் பலருக்குச் சிறைக்கூடங்கள் ஆயின.
இதெல்லாம் குறைந்தபட்ச நினைவுத்திறன் உள்ளவர்களுக்குக் கூடத் தெரியும்.
அத்தகைய அதிகபட்ச வெள்ளப் பாதிப்பை சென்னை சந்தித்த பிறகும் சென்னை மாநராட்சி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறதா என்கிற கேள்வியை தற்போது எழுப்பியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக அரசு தரப்பில் வெள்ளப் பாதுகாப்புச் செயல்பாடுகளில் மெத்தனம் இல்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நேரடியாகச் செல்கிறார். ஆய்வு செய்கிறார். அதிகாரிகளும் உடன் செல்வதால் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப் படுகின்றன.
இவ்வளவு வேலைகள் நடந்தும், இன்னும் முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே பல பகுதிகள் சாக்கடை நீர் சூழ்ந்து நாற்றமயமாகக் காட்சியளிக்கின்றன.
குறிப்பாக ஜெயராம் நகரில் எங்கும் சாக்கடை நீர் மயம். இதே மாதிரிப் பல பகுதிகளைச் சொல்ல முடியும்.
பத்தாண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகள் பெருகி, மழை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கால்வாய்களில் சரிவரத் தூர்வாரப்படாமல் இருப்பதை சென்னை வாசிகள் நன்றாகவே அறிவார்கள். தூர் வாருவது பாவனையாகவும், பேச்சளவிலுமே இருந்தன.
இதன் விளைவு தான் தற்போது சென்னை மாநகரம் அனுபவிக்கும் சிக்கல்கள்.
இந்த நிலையை உருவாக்கியதற்குத் தன்னலத்தையும், லஞ்சத்தையுமே மையமாகக் கொண்டு செயல்பட்ட பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும், சுய நலமான பல அதிகாரிகளும் தான்.
தங்களுக்குக் கிடைக்கிற உடனடியான வருமானத்தையோ, வாக்குகளையோ தான் அவர்கள் கவனத்தில் கொண்டு இயங்கினார்களே தவிர, குறைந்தபட்ச எதிர்காலச் சிக்கல்களை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
இப்போது அதே அரசியல்வாதிகளை நேற்றைய தவறுகளை, ஊழல்களை முற்றிலும் மறந்த மாதிரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகிறார்கள். நிவாரண உதவி வழங்குவதாகத் தோற்றம் காட்டுகிறார்கள்.
இதில் தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும், சாதிய அமைப்புகளுக்கும் இடையில் எந்தப் பேதமும் இல்லை.
இன்றைக்கு இவர்கள் கரிசனம் காட்டுவதாகச் சொல்கிற மக்கள் மீது உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருக்குமானால், மழை விட்ட பிறகு சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்று பாரபட்சமற்று நடத்தப்பட்டு, சென்னைக்கான எதிர்கால நலன் குறித்து உருப்படியாக மக்கள் நலனை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டும்.
பெரு நகரம் கனமழைக் காலத்தில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அலசப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகள் அரசியல் ஆதாய நோக்கங்கள் இல்லாமல் அகற்றப்பட ஒத்துழைக்க வேண்டும்.
சென்னை நகரப் பெரு வீக்கத்தைத் தடுப்பது குறித்து உரிய மாற்று முடிவு எடுக்க வேண்டும்.
இதை எல்லாம் செய்வதை விட்டு விட்டு, வெள்ளக்காலத்தில் அரசைக் குற்றம் சாட்டும் உள்ளூர் மலின அரசியலை மக்கள் வெள்ளப் பாதிப்பால் அவதிப்படும் நேரத்தில் தூண்டில் போடக்கூடாது.
சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் வேண்டுமானால் நேற்று தாங்கள் நடந்து கொண்டதை இன்றைக்குத் தங்கள் வசதி கருதி மறந்துவிடலாம்.
ஆனால் மக்கள் உங்களுடைய நேற்றைய பேச்சையும், செயல்பாட்டையும், உங்களுடைய இன்றைய மாற்றத்தையும் ஒரு சேரப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுடைய தூண்டிலுக்கு அவர்கள் இரையாகி விட மாட்டார்கள்.
– யூகி