தமிழ் சினிமாவில் கிரியேஷன்ஸை கொண்டுவந்த நடிகர்!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் ஹாலிவுட் படங்களின் சாயலில் பல படங்கள் உருவாக்கப்பட்டன. சில படங்கள் அப்பட்டமான காப்பியாக கூட உருவாகி இருக்கின்றன.

இன்ஸ்பிரேஷனில் எடுக்கப்பட்ட படம் என்பார்கள். அப்படி தயாரான படங்களில் ஒன்று ‘அவனா இவன்?’. வீணை எஸ்.பாலசந்தர் இயக்கி, நடித்து தயாரித்த த்ரில்லர் படம்.

வசந்தி, குட்டி பத்மினி, மாஸ்டர் ஸ்ரீதர், வி.எஸ்.ராகவன், சி.ஆர்.சரஸ்வதி உட்பட பலர் நடித்த படம் இது.

அமெரிக்காவில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து, தியோடர் டிரெய்சர் என்பவர் எழுதிய நாவல் ‘அன் அமெரிக்கன் டிராஜடி’. இதை மையமாக வைத்து ஹாலிவுட்டில் உருவான படம் ‘எ பிளேஸ் இன் த சன்’.

1951 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், மோன்ட்கோமெரி கிளிஃப்ட் (Montgomery Clift), எலிசபெத் டெய்லர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஹாலிவுட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அந்த காலகட்டத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் இது.

அதை அப்படியே தமிழுக்காக சில மாற்றங்களை செய்து  1962 – ல் ‘அவனா இவன்?’ என்ற டைட்டிலில் உருவாக்கினார் எஸ்.பாலசந்தர்.

அவரே ஆன்டி ஹீரோவாக நடித்தார். பணக்காரப் பெண்ணை மணப்பதற்காக தனது மனைவியை கொன்று உடலை ஏரியில் வீசுகிறார் பாலசந்தர். அதை எக்ஸ்கர்சன் செல்லும் குழந்தைகளில் இருவர் பார்த்து விடுகின்றனர்.

சாட்சி அவர்கள்தான். குழந்தைகள் யாரிடம் சொன்னாலும் அதை நம்ப மறுக்கின்றனர். போலீஸ் கூட ‘அப்படியா?’ என்று அதை நகைச்சுவையாக நினைக்கிறது.

அந்தக் கொலைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல் பாலசந்தர் நடந்துகொண்டாலும் கிளைமாக்ஸில் அவர் மாட்டத்தானே வேண்டும். மாட்டிக் கொள்கிறார்.

அதற்கு காரணம் அந்தக் குழந்தைகள்தான் (குட்டி பத்மினி, மாஸ்டர் ஸ்ரீதர்). அவர்களுக்கு டாடா காட்டிவிட்டு பாலசந்தர் சிறைக்குச் சொல்வதோடு முடியும் படம்.

இந்தப் படத்துக்கு அவரே இசை அமைத்தார். அவர் இசையில், வித்வான் வே. லட்சுமணன் அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.

‘கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு’ அப்போது சூப்பர் ஹிட். படம் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது சோகம்.

அந்த காலகட்டத்தில், தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் பிக்சர்ஸ், தியேட்டர்ஸ், பிலிம்ஸ், புரொடக்‌ஷன்ஸ் என்றே பெயர்களை வைத்திருந்தன.

அதாவது தேவர் பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ், பத்மினி பிச்சர்ஸ், சாந்தி பிலிம்ஸ் என்பது போல.

ஆனால், இந்தப் படத்தைத் தயாரித்த எஸ்.பாலசந்தர், தனது நிறுவனத்துக்கு எஸ்.பி. கிரியேஷன்ஸ் (S.B. Creations) என்று வைத்தார்.

தென்னிந்தியாவில் கிரியேஷன்ஸ் என்ற பெயரை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான்.

அதற்குப் பிறகுதான் பல நிறுவனங்கள் கிரியேஷன்ஸ் என்ற பெயரை பயன்படுத்தின.

-அலாவுதீன்

You might also like