இந்திய சுதந்திரத்தை முதலில் அறிவித்தவர்!

பூர்ணம் விஸ்வநாதன் – 100 /  எம்.ஜி.ஆர். முதல் கார்த்திக் வரை நடித்த எதார்த்த கலைஞன்
* * *

ஓரிரு காட்சிகளில் தோன்றி இருந்தாலும் நமது மனதுக்குள் நுழைந்து, ஆணி அடித்த மாதிரி பதிந்து விடும் நடிகர்களில் ஒருவர் பூர்ணம் விசுவநாதன்.

‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ரஜினியை சிகரெட்டை தூக்கிப் போட வைத்து ‘’ஜெயிச்சா டொயோட்டா கார்… தோத்தா சுண்டு விரல்’’ என குறும்புப் பார்வையுடன் டயலாக் பேசும் காட்சியை – எப்போது நினைத்தாலும் இனிக்கும்.

18 வயதில் நாடகம் மூலம் நடிகராக மேடையில் அறியப்பட்டவர்.

பூர்ணம் தியேட்டர்ஸ் எனும் நாடகக் குழுவைத் தொடங்கி நாடகம் போட்டார். சுஜாதாவின் 10 நாவல்களை மேடையில் அரங்கேற்றியவர்.

1945 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள ஆல் இந்தியா ரேடியோவில் தமிழ் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை உலகுக்கு சொல்லப்போவது தான் தான் என அவருக்கு அப்போது தெரியாது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி காலை செய்தி வாசிக்கும் பணி பூர்ணம் விசுவநாதனுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

காலை 5.30 மணி தமிழ் புல்லட்டினில் “இந்தியா விடுதலை பெற்று விட்டது’’ என்ற செய்தியை உலக தமிழர்களுக்கு அறிவித்தார் பூரணம்.

வானொலியில் தொடர்ந்து செய்தி வாசித்து வந்தபோது ஒருநாள் அவருக்கு விநோத அனுபவம்.

செய்திக் குறிப்பை முன்வைத்து ‘செய்திகள் வாசிப்பது…’ என்று செய்தி வாசிக்கத் தொடங்கியவருக்கு அவருடைய பெயர் மறந்து விட்டது.

அப்படியே அவர் ஸ்தம்பித்து நிற்க, ஒளிப்பதிவுக் கூடத்தில் இருந்தவர்கள், அவருடைய பெயரை நினைவுபடுத்திய பிறகு, வாசிப்பது ‘பூர்ணம் விஸ்வநாதன்’ என்று கூறியிருக்கிறார்.

இப்படி தன் பெயரை தானே மறந்துபோன அனுபவத்தை பின்னாளில் வேடிக்கையாக விளக்கியிருக்கிறார் பூர்ணம்.

தன்னலம் மறந்த எப்பேர்பட்ட மறதி!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் டெல்லியிலேயே வாசம். அதன் பின் சென்னைக்கு மாற்றப்பட்டார்.
மத்திய அரசு அலுவலரான அவர் சென்னையில் ‘திட்டம்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றினார்.

மத்திய அரசின் ‘பத்திரிகை தகவல் மையம்’ எனும் பி.ஐ.பி.யில் கொஞ்ச காலம் வேலை பார்த்தார்.

மீண்டும் நாடகக் குழுவை உயிர்ப்பித்தார். எழுத்தாளர் மெரினா எழுதிய தனிக்குடித்தனம், ஊர் வம்பு, கால்கட்டு போன்ற நாடகங்களில் நடித்தார்.

அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகியது. அவரே நிறைய நாடகங்களை எழுதியுள்ளார்.

அப்போது தான் சினிமாக் கலைஞர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது.

அவர் நடித்த முதல் படம் ‘உயர்ந்த மனிதன்’. சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் இதயவீணை, நினைத்தை முடிப்பவன் படங்களில் நடித்தார்.

உயர்ந்த மனிதனுக்கு பிறகு சிவாஜியுடன், கவுரவம், ராஜபார்ட் ரங்கதுரை, பட்டாக்கத்தி பைரவன், தங்கப்பதக்கம் படங்களில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து பூர்ணம் விசுவநாதன் அனைத்து கதாநாயகர்களுடன் நடித்தார்.

ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் தவிர, ராணுவ வீரன் படிக்காதவன், தில்லு முல்லு, கமலஹாசனுடன் சொல்லத்தான் நினைக்கிறேன், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மகாநதி போன்ற படங்களில் நடித்தார்.

கார்த்திக் நடித்த ‘வருஷம் -16’ படத்தில் அவரது வேடம் மறக்க முடியாதது.

இந்தியில் ‘ஏக் துஜே கேலியே’ படத்தில் கமலின் அப்பாவாக நடித்தார்.

மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‘சித்ரம்’ படத்தில் நடித்துள்ளார்.

15.11.1921 ஆம் ஆண்டு பிறந்த பூர்ணம் விசுவநாதன் 01.10.2008 ஆம் ஆண்டு மறைந்தார்.

பூர்ணத்துக்கு வரும் 15 ஆம் தேதி 100 வயது.

‘முள்ளும் மலரும்’ நாவலை எழுதிய உமா சந்திரன், பூர்ணத்தின் அண்ணன் என்பது கூடுதல் தகவல்.

-பி.எம்.எம்.

You might also like