ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் துவக்கத்தில் பல பத்திரிகைகளுக்கு ஃபரீலேன்ஸ் போட்டோகிராபராகப் பணியாற்றியவர்.
இந்தியா டுடே, வீக்லி, கல்கி, அஸைட் உள்ளிட்ட பல இதழ்களுக்காக வித்தியாசமான பல புகைப்படங்களை எடுத்த ஆனந்த் பின்னாளில் பி.சி.ஶ்ரீராமிடம் துணை ஒளிப்பதிவாளராக இணைந்து, தனித்து முதன்முறையாக மலையாளத்தில் ஒளிப்பதிவு செய்த “தேன்மாவின் கொம்பத்து” படத்திற்கே தேசிய விருது வாங்கியவர்.
பிறகு தமிழில் நேருக்கு நேர், முதல்வன் என்று பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து, அயன், கோ, மாற்றான் என்று பல படங்களை இயங்கினாலும், அவருடைய இயக்கத்தில் வெளிவந்த அவருடைய ஃபேவரைட் பிலிம் ‘கோ’.
அதைப் பற்றி ஒரு பேட்டியில் வெளிப்படையாகச் சொல்லியருந்தார் கே.வி.ஆனந்த்.
“எனக்கு ஆரம்பத்தில் ஒரு பிரஸ் போட்டோகிராபராக ஆகணும்னு ஆசை. ஒரு பெரிய பத்திரிகையின் நேர்காணலில் கடைசி வரை போய், நான் தேர்வாகலை.
அதுக்கப்புறம் ‘வீக்லி’,’ ‘இந்தியா டுடே’ ன்னு படம் எடுத்துக் கொடுத்திருக்கேன். ஆனாலும் பிரஸ் போட்டோகிராபர் வேலை என் நிறைவேறாத பெரும் கனவு.
இப்போது நான் கொஞ்சம் காசு, பணம் பார்த்திருக்கலாம். ஆனா, அப்படி ஒரு கனவு நிறைவேறலையேன்னு நெனைப்பு மனசுக்குள் இருக்கு” என்று சற்று ஏக்கத்துடன் சொன்ன ஆனந்த் தன் கனவை நிறைவேற்றிக் கொண்டார்.
எப்படி?
‘கோ’ படத்தின் கதாநாயகனான ஜீவாவை துடிப்பாக இயங்கும் பிரஸ் போட்டோகிராபர் ஆக்கியிருந்தார்.
எப்படி எல்லாம் கனவுகள் வடிவம் பெறுகின்றன?
– யூகி