கேரளாவில் தான் கொரோனாக் காலத்தில் இப்படியொரு ஆச்சர்யம்.
அங்குள்ள கண்ணூரில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள அஷ்ரப் என்பவரின் வீட்டில் திருட்டு. பணம், நகைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. காவல்துறையில் புகார் கொடுத்தார் அஷ்ரப்.
சில நாட்கள் கழித்து அதிகாலை நேரத்தில் கதவைத் திறந்தபோது அவருக்கு முன்னால் ஒரு துணி மூட்டை. உள்ளே நகைகளும், பணமும்.
ஏன் இந்த மூட்டை? அதற்கும் வசதியாக மூட்டையுடன் ஒரு கடிதம்.
எழுதியிருந்தவர் ‘சாட்சாத்’ திருடர் தான்.
“கொரோனா காலத்தில் பல வீடுகளில் நான் திருடி விட்டேன். நான் செய்த தவறுக்காக வருந்துகிறேன். எந்தெந்த வீடுகளில் எவ்வளவு திருடினேன் என்பதைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். திருடிய நகைகளையும், பணத்தையும் இத்துடன் வைத்திருக்கிறேன். அவர்களிடம் நகைகளையும், பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்”
ஏதோ ஒரு வேகத்தில் கொரோனா உருவாக்கிய மன வெறுமையில் சில வீடுகளில் திருடத் தெரிந்த மனிதருக்கு அதை உடனே உணர்ந்து மனம் தாளாமல் ஒப்படைக்கவும் தெரிந்திருக்கிறது.
அவருடைய மனசாட்சி அவரை உறுத்தியிருக்கிறது. அவரும் அதற்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார்.
திருடியவர் திருடிய கணத்திலிருந்து மீண்டு மனிதர் ஆகியிருக்கிறார்.
நம்மைச் சுற்றி அதிகாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் யாருக்காவது “இந்த மக்கள் பணத்தைத் தானே நாம் முறைகேடு செய்து எடுத்துக் குற்றமும் சாட்டப்பட்டிருக்கிறோம்.
அதே மக்கள் கொரோனா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு இந்தப் பணம் உதவட்டும்” என்று உதவுவதற்கு மனம் வருமா?