மழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

ஆட்சியர்களுக்கு சுகாதாரச் செயலர் கடிதம்.

வடகிழக்கு பருவமழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், “பருவமழை தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. எனவே, வழக்கமான மருத்துவ சேவைகளைத் தவிர, அனைத்து அரசு மருத்துவமனைகளும் உள்ளாட்சி அமைப்புகளோடு சேர்த்து நிவாரண முகாம்களை தாழ்வான பகுதிகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடத்த வேண்டும்

இடைவிடாது மழை பெய்து வரும் மாவட்டங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, தேவையான மருத்துவ வசதிகளை செய்ய வேண்டும்.

மருத்துவ சேவை அளிப்பதற்கு, சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை இருக்கக் கூடாது. சுகாதாரத் துறையினர், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற துறைகளோடு இணைந்து செயல்பட்டு, நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில், 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 770 வாகனங்களில் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுக்கள், நோய் தடுப்பு முகாம் சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்தச் சேவைகளை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தலாம். மழைக்காலம், மழை பெய்யும் நாட்கள், மழைக்குப் பிந்தைய நாட்கள், அதன் தொடர்ச்சியாக மீட்பு என மூன்று கட்டங்களிலும், அரசு இயந்திரம் துடிப்புடன் செயல்பட வேண்டும்

காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் அரிப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்து சிகிச்சை அளித்து, நோய் பரவுவதைத் தடுக்க வேண்டும்.

நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மருந்துகள், பாம்பு கடிக்கான எதிர்ப்பு மருந்துகள், தடுப்பு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

எளிமையான தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வைத்து, கொரோனா, டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும்.

இதுதொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசியிலும் கவனம் செலுத்த வேண்டும்.

தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கும்படி, பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும்.

நோய் தொற்று ஏற்பட்டால், சுயமாக மருந்து எடுப்பதைத் தவிர்த்து, டாக்டர்களை பொதுமக்கள் அணுக வேண்டும்.

அனைத்து மருத்துவமனை வளாகங்களிலும், மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவமனைகளில், அவசர சிகிச்சைப் பிரிவு, அத்தியாவசிய சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவு, பிரசவ சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவு பாதிக்காமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் நடத்துவதை, துணை இயக்குனர்கள் நடமாடும் குழுக்கள் வாயிலாக உறுதி செய்ய வேண்டும்

இணை இயக்குனர்கள், தனியார் மருத்துவமனைகளுடன் பேசி, கூடுதலான ஆக்சிஜன் இருப்பு வைத்திருப்பதையும், ஜெனரேட்டர்கள் செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் சேவைகள் தடை இல்லாமல் செயல்படுவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மரங்கள் மற்றும் மின்சார வயர்களின் கீழே ஆம்புலன்ஸ் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

அனைத்து ஆம்புலன்ஸ்களும், காவல் நிலையம் அருகில் நிறுத்துப்படுவதுடன், தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னையில் செயல்பட்டு வரும் பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை, 044 – 2951 0400; 2951 0500; 94443 40496; 87544 48477 என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், 104 மருத்துவ ஆலோசனை மையத்தையும் அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like