2-ம் ஆண்டைத் தொடும் விவசாயிகள் போராட்டம்!

நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களும், விவசாயிகளுக்கு எதிரான கூறி நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வரை முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடங்கிய போராட்டம் வரும் 26-ம் தேதியன்று 2வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

போராட்டக் களத்தில் இதுவரை 750 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் இதுவரை அவர்களுக்காக ஒன்றிய அரசிடம் இருந்து ஒரு இரங்கல் செய்தி கூட வரவில்லை எனவும் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளை நாட்டின் ஒரு அங்கமாக கருதவில்லை என்பது தெரிவதாகவும், அவர் தங்களுக்கான பிரதமர் இல்லை என நாட்டில் உள்ள விவசாயிகள் கருதுவதாகவும் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.

வரும் 26ம் தேதி வரை புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் கெடு விதித்துள்ள நிலையில், ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இதில் அரசியல் சாசன தினத்தையொட்டி வரும் 26ம் தேதி ஹரியானா மாநில விவசாயிகள் சார்பாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறும் என ஹரியானா மாநில பாரதிய கிசான் சங்க தலைவர் குர்நாம் சிங் சதோணி தெரிவித்துள்ளார்.

You might also like