முன்னேற நினையுங்கள்; பின்நோக்கி பார்க்காதீர்கள்!

வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. மேனேஜருக்கு அந்த வாடிக்கையாளரைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.

அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபரைப் பார்த்தார். தினக்கூலி அல்ல அவர். நன்கு டீசண்ட்டாக நடுத்தர வயதில் இருந்தார். அவரிடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரது வருமானம் பற்றி விசாரித்தார்.

“சார், நான் வேலையும் பாக்கலை.. தொழிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன். அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்தக் காசுதான் சார் அது!” என்றார்.

மேனேஜர் நம்பாமல் பார்க்க… “இதுக்குதான் நான் யாரிடமும் பந்தய மேட்டரை சொல்வதில்லை!” என்றார்.

அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் “சரி சார், நாம ரெண்டு பேரும் ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க!” என்றார். மேனேஜரும் “சரி” என்றார்.

“சார், சரியா நாளைக்கு காலையில் 10.15க்கு உங்க கால் தொடை பகுதி பச்சைக் கலரா மாறிடும். ரெண்டாயிரம் ரூபா பந்தயம்” என்றார் வாடிக்கையாளர்.

‘நம்ம தொடை.. நம்ம கண்ட்ரோல்ல இருக்கும்போது எப்படி பச்சையா மாறும்.? இவன் தோற்கப் போவது உறுதி!’ என்று நினைத்த மேனேஜர் சரி என்றார்.

அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடைப் பகுதியைப் பார்த்தார், அது வழக்கம் போல் தான் இருந்தது. இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அடிக்கடி பார்த்துக் கொண்டார்.

விடிந்தது… முதல் வேலையாக தொடையைப் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. குளித்து அலுவலகம் கிளம்பினார். பேண்ட்டின் சாயம் ஒட்டி விடப் போகிறதே என்ற உஷார்த்தனத்துடன், வெள்ளை பேண்ட் அணிந்து கொண்டார்.

அலுவலகத்துக்கு வந்துவிட்டாலும் மேனேஜருக்கு உள்ளூரப் பதற்றம் இருந்தது.

சொல்லி வைத்தாற்போல் சரியாக 10.15 மணிக்கு அவன் அந்த அறைக்குள் நுழையவே, பின்னாலேயே நுழைந்தான் பியூன். வேகமாய் சீட்டிலிருந்து எழுந்த மேனேஜர், தனது பேண்ட்டை கழட்டி நின்று “இந்தா பார்த்துக்கோ… நீ சொன்ன மாதிரி பச்சையாகலை… அப்படியே கருப்பாதான் இருக்கு!” என்று முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் காட்டினார்.

அவன் உடனே பியூனிடம் “நீ என்னமோ பேங்க் ஆஃபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டார்னு சொன்ன. இப்ப என்ன சொல்றே? எடு மூவாயிரத்தை!” என்றார்.

அந்த பியூன், மேனேஜரை முறைத்தபடி மூன்றாயிரம் ரூபாயை எடுத்து நீட்டினான், “நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனா.?” என்ற எரிச்சல் அந்த முறைப்பில் தெரிந்தது.

அதை வாங்கிய வாடிக்கையாளர், ரூ.2000-ஐ மேனேஜரிடம் நீட்டிவிட்டு, மீதம் ரூ.1000த்தை அன்றைய கணக்கில் கட்ட கவுன்டருக்குச் சென்றார்.

அதாவது, அந்த வாடிக்கையாளர், பியூனிடம் மேனேஜரின் பேண்ட்டைச் கழற்ற வைத்தால் மூவாயிரம் தரவேண்டும் என்று பந்தயம் கட்டியிருந்தது பிறகுதான் தெரியவந்தது.

இதனால் அறியப்படும் நீதி, ‘அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே போதும். அடுத்தவர் எப்படி சம்பாதிக்கிறார்… என்ன செய்கிறார்..’ என்று எட்டிப் பார்க்க வேண்டியதில்லை.

– இது தென்கச்சி சாமிநாதன் சொன்ன நகைச்சுவைக் கதை.

ஹைவேயில் காரில் பயணிக்கிறோம். நமது காரை போகிற வாகனங்கள் எல்லாம் கடந்து கொண்டே இருந்தால் ஒரு சலிப்பு ஏற்படாதா..?

ஒரு டி.வி.எஸ் 50 நம்மைக் கடந்து செல்வதாகக் கொள்வோம். ‘இதுக்கு நீ நடந்தே போயிருக்கலாம்!’ என்பதாக அவரது பார்வை இருக்காதா..? அதைவிட, நாம் சிலரை முந்திச் செல்ல வாய்ப்பு கிடைத்தால், அது ஒரு விளையாட்டாக, ஜாலியாக இருக்கும் அல்லவா…

‘இதோ இந்த பச்சைக் கார்… அடுத்து அந்த வெள்ளைக் கார்… மஞ்சள் கார் அடுத்த இலக்கு’ என்று தாண்டிக் கொண்டே வந்தால், ஹைவே பயணம் இனிக்குமல்லவா.? அதற்காக ஓவர் ஸ்பீடு கூடவே கூடாது.

இங்கு புரிந்து கொள்ள வேண்டியது, வெற்றியை சுவைக்க, சுவைக்க சுவாரஸ்யம் கூடும்.

வெற்றி பெற வேண்டுமென்றால், முன்னால் மட்டும் பார்த்தாலே போதும்.

நம்மை விட கீழே இருப்பவர் பல கோடியாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நம்மைவிட மேலே உள்ள சில லட்சம் பேரைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டால், வேகமாக முன்னேற முடியும்.

அப்படி முன்னேறியவர்தான், உலகின் வேகமான மனிதர் உசேன் போல்ட்.

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பம். அப்பாவுக்குப் பழக்கடை வருமானம். நம்மைப் போல வீதி கிரிக்கெட் வெறியர்.

அவரது கால்களின் அசாத்தியமான வேகம் கண்டு, பள்ளி கிரிக்கெட் கோச், அவரின் நண்பரான கிளென்மில்ஸியிடம் அழைத்துச் சென்றார்.

கிளென்மில்ஸ் ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்றவர். பயிற்சி ஒட்டப் பந்தயத்தின் பக்கம் மாறியது. ஓடத் தொடங்கினார். முதல் வெற்றியே தேசிய அளவில்.

பள்ளி மாணவர் பிரிவில் – 15 வயதில் தங்கப்பதக்கம். அப்போதே அவரது உயரம் ஆறரை அடி. 94 கிலோ எடை.

2002-ல் உலக ஜூனியர் தடகள சாம்பியன் பட்டம் கிடைத்தது. 2004-ல் ஆசியன் கேம்சில் பல நாடுகள் கலந்து கொண்ட ஓட்டப் பந்தயத்தில் 4 தங்கப் பதக்கங்கள் வென்றார்.

ஆரம்பத்தில் 2001-ல் 200 மீட்டர் தூரத்தை அவர் கடக்க எடுத்துக் கொண்ட நேரம் 22.04 விநாடிகள்தான். நம்மைவிட பலர் பின்னால் இருப்பதால், இதுவே போதும் என்று அவர் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை.

ஓடி, ஓடி தன் சாதனையைத் தானே முறியடித்தார் உசேன். ஒரே ஆண்டில் அதனை 20.60 விநாடிகளாகக் குறைத்தார்.

அப்படிப்பட்ட போல்ட்டே, உலக சாதனை படைக்க எட்டு ஆண்டுகள் கடும் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் கடந்தவர், 200 மீட்டரை 19.19 விநாடிகளில் கடந்திருக்கிறார்.

ஓடி ஓடி விநாடிகளை மைக்ரோ செகண்ட்களாகக் (விநாடிக்குள் விநாடி) குறைத்து ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைத்து, சாதனை படைத்தார்.

முதல் ஒலிம்பிக்கிலேயே தங்க மெடல்களை தட்டிச் சென்றார். 100 மீட்டரில் தங்க மெடல், 200 மீட்டரில் தங்க மெடல், 4 X 100 மீட்டர் ரேசிலும் தங்கமெடல் வென்றார்.

உலகமே திரும்பிப் பார்த்த சாதனை அது.

ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்று முறை, மொத்தம் 8 தங்க மெடல்களை பெற்றுத் தந்த வீரராக, ஜமைக்காவுக்கு பெருமை சேர்த்தார் உசேன் போல்ட். அவர் ஆச்சரியத்திற்குரிய ஒரு சாதனை மனிதர்.

அப்பா கோச் சிடையாது, அண்ணன் கோச் கிடையாது, சொந்தக்காரர்களில் யாரும் ஓட்டப் பந்தய வீரர் இல்லை. அந்த விளையாட்டே இவருக்குத் தெரியாது.

இப்படி எந்தப் பின்னணியும் இல்லாமல், முன்னுக்கு வந்தவர் உசேன் போல்ட்.

இவருடன் ஓடி 8-வது இடத்திற்கு வந்த ஒரு வீரர் சொன்னார், “மின்னல் என்னைத் தாண்டி சென்றது போன்று இருந்தது. அவ்வளவு வேகம் உசேனின் ஓட்டத்தில்.

அவர் ஓடும்போது பார்வை முன்னோக்கி மட்டுமே இருக்கிறது. பக்கவாட்டில்கூட அவர் திரும்புவது இல்லை. இலக்குக் கோட்டின் ரிப்பனை மட்டுமே அவர் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன” என்றார்.

எனவே, முன்னேற நினையுங்கள். எப்போதும் பின்னால் பார்க்காதீர்கள்.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘நீங்கள் இன்னும் ஏன் கோடீஸ்வரர் ஆகவில்லை’ நூலிலிருந்து…

http://ramkumarsingaram.com

You might also like