பன்முகம் கொண்ட லெட்சுமி!

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் லெட்சுமி.

ஆச்சர்யமான விஷயம் – இவரது குடும்பமே திரைத்துறை சம்பந்தப்பட்டது தான்.

இவருடைய பாட்டி நுங்கம்பாக்கம் ஜானகி, அம்மா ருக்மணி, கணவர் சிவசந்திரன், மகள் ஐஸ்வர்யா என்று நான்கு பேர் திரைத்துறையில் இருந்திருக்கிறார்கள்.

தமிழில் இவருக்கு முதல் படம் ‘ஜீவனாம்சம்’.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், கமல், ரஜினி என்று பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிற இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிப்படங்களில் நடித்திருக்கிறார்.

பீம்சிங் இயக்கத்தில் ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

மாட்டுக்கார வேலன், சங்கே முழங்கு, இதய வீணை போன்ற படங்களில் எம்.ஜி.ஆருடனும், தியாகம் போன்ற சில படங்களில் சிவாஜியுடனும், ஜெய்சங்கர், சிவகுமாருடன் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

மாறுதலான கதையம்சம் கொண்ட ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’, சிறை போன்ற படங்களில் நடித்த லெட்சுமி ஐஸ்வர்யா ராயுடன் ‘ஜீன்ஸ்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

சின்னத்திரையில் இவர் இடம் பெற்ற  ‘சொல்வது நிஜம்’ தொடரின் பாதிப்பு இன்றும் பல தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இரண்டு படங்களை இயக்கியிருக்கிற இவருடைய சொந்தப் பெயர் – வெங்கட லெட்சுமி.

You might also like