சிறு விவசாயிகளை மேம்படுத்த வளர்ச்சித் திட்டம்!

கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் 42-வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ரவி, “மற்ற நாடுகளின் உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். பசுமைப் புரட்சி ஏற்பட்டதற்கு தன்னலமற்ற விஞ்ஞானிகளே காரணம்.

நாட்டின் உணவு உற்பத்தி உபரியாக இருந்தும், உணவு உற்பத்தியாளர்களில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு முரண்பாடான சூழ்நிலை, பல ஆண்டுகளாக தவறான விவசாய கொள்கைகளால் உருவாகியுள்ளது.

சிறிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளார்.

வேளாண் கல்வியைப் பொருத்தவரை, தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தலைசிறந்த ஐந்து பல்கலைக் கழகங்களின் பட்டியலில், விரைவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகமும் இடம் பெற வேண்டும்.

வேளாண் பல்கலையின் பயிர் வகைகள், மேலாண்மை தொழில்நுட்பங்கள், பண்ணை எந்திரங்களை ஏற்றுக் கொள்வதால், விவசாய சமூகத்துக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது” எனக் கூறினார்.

அதன்பின் பேசிய மத்திய அரசு வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை செயலர், திருலோச்சன் மொகபத்ரா,

”உலகளவில் விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சொட்டு நீர் பாசன முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாறிவரும் காலநிலை, அதிகரிக்கும் வெப்பத்தால், வேளாண் துறை பல்வேறு சவால்களை சந்திக்க உள்ளது. அதை சமாளிக்க, நவீன தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டியது அவசியம்” என்றார்.

You might also like