நியூஸிலாந்தை பழிதீர்க்குமா இந்தியா?

2019-ம் ஆண்டில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா இன்னும் மறந்திருக்க முடியாது.

அந்த உலகக் கோப்பையின் லீக் ஆட்டங்களில் வெற்றிமேல் வெற்றியைக் குவித்த இந்தியாவை, அரை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி சந்தித்தது.

அதற்கு முன்னர் நடந்த போட்டிகளில் நியூஸிலாந்தை எளிதாக வீழ்த்திய இந்திய அணி, அரை இறுதிப் போட்டியிலும் வெல்லலாம் என கணக்குப் போட்டிருந்தது. ஆனால் நடந்தது வேறு.

நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆக, தோல்வியைச் சந்தித்தது இந்தியா.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் இதுதான் நடந்தது.

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளைக்கூட அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய இந்திய அணி, நியூஸிலாந்திடம் இறுதிப் போட்டியில் அடிபணிந்தது.

இப்படி முக்கியமான ஐசிசி தொடர்களில் எல்லாம் இந்தியாவுக்கு தோல்வியையே பரிசாகத் தந்திருக்கிறது நியூஸிலாந்து.

கடைசியாக ஐசிசி போட்டி ஒன்றில் 2003-ம் ஆண்டில்தான் நியூஸிலாந்தை வென்றிருக்கிறது இந்தியா.

எல்லாவற்றுக்கும் மேலாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவால் நியூசிலாந்தை இதுவரை வெல்ல முடிந்ததில்லை.

இந்தச் சூழலில் இன்று நியூஸிலாந்தை எதிர்த்து இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் களம் இறங்குகிறது.

முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதால், நியூஸிலாந்தை வென்றால்தான் அரை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில் இந்தியா உள்ளது. அதற்காக கடந்த ஒரு வார காலமாக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி பெற்றுள்ளனர்.

மிக முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், அதை எப்படி சமாளிப்பது என்பதுபற்றி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரை அதன் முக்கிய பலமே பேட்டிங்தான். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என்று மிக நீண்ட வரிசையைக் கொண்டது இந்திய அணி.

இதில் ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் கடந்த போட்டியில் சிறப்பாக ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்தது.

இன்றைய போட்டியில் அவர்கள் எப்படிப்பட்ட தொடக்கத்தைக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை வைத்துதான் இந்திய அணியின் வெற்றி இருக்கப் போகிறது.

பந்துவீச்சைப் பொறுத்தவரை புவனேஸ்வர் குமாரை மாற்றிவிட்டு ஷர்துல் தாக்குரை இந்திய அணி களம் இறக்க வாய்ப்புள்ளது. 6-வது பந்துவீச்சாளரான ஹர்திக் பாண்டியா, பந்துவீச முழு தகுதியுடன் உள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

அவரை மாற்ற வேண்டும் என்று குரல்கள் எழுந்த நிலையில், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு தோனி கூறியுள்ளதாகவும், அதை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழலே உள்ளது. எனவே 3 ஸ்பின்னர்களுடன் ஆடவேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். ஆனால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடுவதில் கேப்டன் கோலி உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல்லில் கலக்கிய வேகப்பந்து வீச்சாளரான பர்கசன் இல்லாத நிலையில் நியூஸிலாந்தின் வேகப்பந்து வீச்சு காயப்பட்டு நிற்கிறது.

இந்தச் சூழலில் காயம் காரணமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் கப்டில், இன்றைய போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகம் உள்ளது.

அவர் ஆடாவிட்டால் நியூஸிலந்து அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்.

இந்தச் சூழலில், அணியின் கேப்டன் வில்லியம்சனையே அது பெரிதும் சார்ந்திருக்கும்.

நியூஸிலாந்திடம் உலகக் கோப்பைகளில் இதுவரை சந்தித்த தோல்விகளுக்கு இன்று இந்தியா பழி தீர்க்குமா அல்லது மீண்டும் பலியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-பிரணதி

You might also like