அதிகாரத்தை மீறுகிறாரா ஆளுநர்?

காங்கிரஸ் கிளப்பிய புதிய சர்ச்சை!

தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை மையமாக வைத்து திடீர் சர்ச்சை உருவாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.

அப்போது முதலமைச்சரிடம் “மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்’’ என ஆளுநர் கூறியுள்ளார்.

ஸ்டாலின் அதனை ஏற்றுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு கடந்த 18 ஆம் தேதி சில முக்கிய துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதினார்.

அதில் “மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அறிய ஆளுநர் விரும்புகிறார். எனவே உங்கள் துறையில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கவும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் வெளிவந்த இந்தச் செய்தியை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டு காங்கிரஸ், ‘அரசியல்’ செய்ய ஆரம்பித்தது.

“அரசின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை. தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்ய ஆளுநர் இந்த மாதிரி நடவடிக்கையில் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது’’ என கர்ஜித்தார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், மாநிலம் முழுக்க பயணம் செய்து, அரசின் திட்டங்களை நேரடியாக ஆய்வு செய்தார்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. இதனை எதிர்த்தது. ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி எல்லாம் காட்டினார்கள்.

இப்போது, ஆளுநரின் நடவடிக்கையை ஆளும் கட்சியான தி.மு.க. விமர்சனம் செய்யவில்லை.
குறை கூறவில்லை. மாறாக வரவேற்றுள்ளது.

“ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆளுநர் தனது அதிகார எல்லைக்குள் இருந்து விவரம் கேட்கிறார்.

மாநில அரசு இதற்கு ஒத்துழைப்பதில் தவறு இல்லை’’ என காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார், கூட்டணிக் கட்சியான தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

பக்கத்தில் உள்ள புதுச்சேரியில், ஆளுநர் கிரண்பேடியை எதிர்த்து அரசியல் செய்தது போல், தமிழகத்திலும் காங்கிரஸ் அரசியல் செய்ய முயல்கிறது.

இதனை ஸ்டாலின் விரும்பவில்லை.

அதன் வெளிப்பாடு தான் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு விடுத்துள்ள அறிக்கை.

“அரசுத் துறை செயலர்களுக்கு நான் கடிதம் எழுதியது வழக்கமான ஒன்று – இதனை அரசியல் சர்ச்சையாக்குவது சரியல்ல – அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு, இது வழக்கமான நடைமுறை என தெரியும்” என இறையன்பு நெத்தியடியாகக் கூறியுள்ளார்.

இது, இறையன்பு மூலமாக காங்கிரசுக்கு, ஸ்டாலின் அனுப்பிய செய்தியாகவே பார்க்கப்படுகிறது.

“1980 ஆம் ஆண்டு ஒரே கையெழுத்தில் 10 மாநில அரசுகளை கலைத்து ஆளுநர் மூலம் அந்த மாநிலங்களை பரிபாலனம் செய்த காங்கிரசுக்கு ஆளுநர் ரவியின் நடவடிக்கை குறித்து கேள்வி கேட்க எந்த தகுதியும் இல்லை’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பி.எம்.எம்.

You might also like