எம்.ஜி.ஆருக்கான பிம்பத்தை உருவாக்கியவர்!

புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல்:

சென்னை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் மறைந்த புலவர் புலமைப்பித்தன் நினைவேந்தல் நிகழ்ச்சி கவிக்கோ இலக்கியக் கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது. மழை பெய்ய ஆயத்தமான மாலை நேரத்தில் சூடான தேநீருடன் நிகழ்ச்சி தொடங்கியது.

முதலில் பேசிய பத்திரிகையாளர் மானா பாஸ்கரன் வெகு சுவாரசியமாகப் பேசினார். புலவர் புலமைப்பித்தன் எழுதிய காதல் பாடல்களை எடுத்துக்காட்டியும், சில பாடல்களைப் பாடிக் காட்டியும் பேசியது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

“புலவர் புலமைப்பித்தன் போன்ற மிகச்சிறந்த பாடலாசிரியர்களை, கவிஞர்களை மக்கள் மரணத்திற்குப் பிறகுதான் முழுமையாக கண்டுகொள்கிறார்கள்.

இவர் எழுதிய பாடல்களா என்று பாடல்களைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார்கள்.

புலவர் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவில் பாடல் எழுதியவர் அவர் ஒருவரே” என்று புகழாரம் சூட்டினார்.

ஜாதி மல்லி பூச்சரமே… சங்கத்தமிழ் பாச்சரமே, செவ்வந்தி பூக்களில் செய்த வீடு, மழை வருது மழை வருது குடை கொண்டுவா மானே உன் மாராப்பிலே என புலமைப்பித்தன் எழுதிய காதல் ரசம் ததும்பும் பாடல்களை சுவைகூட்டிப் பொருள் விளக்கம் தந்தார் மானா பாஸ்கரன்.

அடுத்துப் பேசிய கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், புலமைப்பித்தனின் இலக்கண இலக்கிய ஆளுமையையும், மரபுக் கவிதைகளின் ஆழத்தையும் எடுத்துக்காட்டினார்.

கற்பனையில் மட்டுமல்ல தங்கள் மரணத்தையும் அறிந்தவர்களாகக் கவிஞர்கள் இருந்தார்கள் என்றார்.

“கண்ணாடி அப்படியே இருக்கிறது

நான்தான் உடைந்துவிடுகிறேன்”

என்ற புலமைப்பித்தனின் கவிதையை மேற்கோள் காட்டிய தமிழ்நாடன், “மரபில் ஆட்சி செய்து தன் வாழ்நாளின் கடைசி மூச்சுவரை இன உணர்வும் மொழி உணர்வும் கொண்டவராக வாழ்ந்து மறைந்தவர் புலமைப்பித்தன்” என்று  நினைவுகூர்ந்தார்.

புலவருடன் நெருங்கிப் பழகி அவருக்கு உதவியாளராகப் பணியாற்றிய வழக்கறிஞர் குணசேகரன், தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழைப் போலவே ஆங்கில மொழியிலும் அவருக்கு இருந்த புலமையைக் குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.

“தாத்தா என்றதும் அவருடைய தைரியம்தான் நினைவுக்கு வருகிறது. மரணப்படுக்கையில்கூட தைரியம் குறையாமல் எனக்கு தைரியம் கொடுத்தார்.

தாத்தா கடைசிவரையில் தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருந்தார்.

புலிகளின் ஆதரவுக் குரலாக வாழ்ந்தார். எந்த சமரசங்களுக்கும் இடம்கொடுக்கவில்லை” என்று உருக்கத்துடன் பேசினார் பேரன் திலீபன் புகழேந்தி.

நினைவேந்தலின் பேருரையை நாஞ்சில் சம்பத் நிகழ்த்தினார்.

“எம்ஜிஆருக்கு ஒரு பிம்பத்தை உருவாக்கி, அதை பிரபலமாக்கியவர் புலவர் புலமைப்பித்தன்.

எம்ஜிஆரின் மனமொழியை அறிந்து பாடல்களை எழுதியவர். எங்கே நான் வாழ்ந்தாலும் என் உயிரே பாடலிலே என்ற ஒற்றை வரியின் மூலம் அவர் காலமெல்லாம் வாழ்ந்துகொண்டிருப்பார்” என்றார்.

நினைவேந்தல் நிகழ்வைப் பேராசிரியை மஞ்சுளா, அழகு தமிழில் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் கவிக்கோ மன்ற அதிபர் முஸ்தபா, புலவர் புலமைப்பித்தனின் துணைவியார், பேராசிரியர் ஹாஜாகனி, பத்திரிகையாளர் சுந்தரபுத்தன், குணசேகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

பா. மகிழ்மதி

You might also like