தோட்டம் என்றாலே ராமாபுரம்தான்…!

எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர் தொடர்-40

இந்த இராமாபுரம் சுற்று வட்டாரத்தில் “தோட்டத்துப் பக்கம் போனேன் தோட்டத்தில் இருந்து வர்றேன்” என்ற சொல்லைப் பயன்படுத்தினாலே அது இந்தத் தோட்டத்தைக் குறிப்பதாகத்தான் இருக்கும்.

அந்த அளவிற்கு என் அன்பு நாயகரால் இது பெருமை பெற்றது என்பது நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்.

அவர் வாழ்ந்த இந்தத் தோட்டம் முதலில் பசுமை நிறைந்த பண்ணையாகப் பராமரிக்கவே உருவாக்கப்பட்டது. இப்போது இருக்கிற இந்த வீடு அந்தக் காலத்தில் கிடையாது. அவ்வப்போது ஏற்பட்ட தேவைக்குத் தக்கபடி உருவானதுதான் இந்த வீடு.

ஏறக்குறைய முப்பத்தைந்து ஆயிரம் ரூபாய்க்கு இந்த இடத்தை ஒருகாலத்தில் வாங்கியதாக நினைவு…

இந்த வீடு கட்டத் தொடங்கிய காலத்தில் அவர் நடிப்புலகில் சக்கரவர்த்தி. நானோ இந்த வீட்டுச் சமையலையும், வருகிற விருந்தினரையும் கவனித்துக் கொண்டிருப்பேன்.

இந்த வீட்டைத் திட்டமிட்டுக் கட்டுகிற முயற்சியும் இல்லை, அதற்கு நேரமும் அப்போது இல்லை.

இந்த வீட்டில் பெரிய டாம்பீகம். கவர்ச்சி, ஆடம்பரம் இதெல்லாம் இருக்காது.. தேவைகளுக்கேற்ப சில வசதிகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டது உண்டு. அவ்வளவே.

பழமையான பொருட்கள் எதையும் அவர் அழிக்கவோ, இழக்கவோ, அப்புறப்படுத்தவோ விரும்ப மாட்டார். அப்படி இந்த வீட்டில் மிகப் பழமையான, ரேடியோ, கார் போன்றவைகள் இப்போதும் இருக்கின்றன.

இந்தத் தோட்டத்தில் ஏறக்குறைய 150 இலைகளுக்கான சாப்பாடு எனது அன்பு நாயகர் இருந்த காலத்தில் நாள்தோறும் எப்போதும் தயாராக இருக்கும். இன்றைக்கும் அந்த நிலையில் மாற்றமில்லை.

படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த வீட்டு தோட்டத்தில் இருக்கிற நீச்சல் குளத்தில் விடியற்காலையில் எழுந்து நீந்திக் கொண்டிருப்பார்.

மூகாம்பிகை படமும் முருகன் படமும் கொண்ட இவரது இரண்டாவது மாடி படுக்கை அறையில் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு ஏறக்குறைய பத்து நிமிடங்களுக்குக் குறையாமல் இடுப்பில் ஈரத்துண்டோடு கண்களை மூடி இவர் தியானம் செய்வதை நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களானால் கண்களும் மனமும் கனக்கும்.

இதே அறையில்தான் பெரும்பாலும் எங்கள் இருவருக்கும் இரவு சாப்பாடு அதிலும் ஒரே தட்டுதான்.

இவ்வளவு பெரிய தோட்டத்தில் நான் அவரைப் பிரிந்து எப்படி இருக்க முடிகிறது? நான் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக என் மனதில் தோன்றுகிற பொழுதெல்லாம் அவரை நினைத்துப் பிரார்த்திக்கிறேன்.

அவரது நினைவுதான் என் நெஞ்சில் இருக்கிற நித்திய பலம், அவரது கடைசி சில ஆண்டுகள் நாங்கள் மிகவும் நெருக்கமாக இருந்த ஆண்டுகள்.

ஒவ்வொரு நொடியும் அவரோடேயே இருந்தேன். அந்த நெருக்கம் இப்போதும் இருப்பதாக ஒரு பிரமை, அதுவே எனது பலம்.

ஜூன் 14 எங்களது திருமண நாள். அதை ஒவ்வொரு ஆண்டும் நினைவு வைத்துக் கொண்டிருந்து கடைசி வரை கொண்டாடத் தவறியதில்லை.

கோபம் இருக்கிற இடத்தில் குணம் இருக்கும் என்பார்களே அது மாதிரி அவர் நடந்து கொள்கிறவர்தான். அது ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய பிறவிக் குணம்.

குழந்தை உள்ளம் கொண்ட இந்த நல்ல மனிதர் என்னிடம் கோபம் கொண்டதுண்டு. அடுத்த நொடியே அது போன இடம் தெரியாமல் மறைந்து போனதும் உண்டு.

எனக்கு வயது இப்போது அறுபத்தி நாலு.. என் வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது? நான் பிரார்த்திக்கிறேன். எனது அன்பு நாயகரோடு வாழ்ந்த காலங்களை திரும்பிப் பார்க்கிறேன்… சில நேரங்களில் குழந்தைகளோடு குதூகலிக்கிறேன்…

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் உச்சரிக்கிற அந்த மூன்றெழுத்து நாமாவளி என் மனசுக்குள்ளும் நுழைந்து எனது மூச்சில் இழையோடிக் கொண்டிருக்கிறது. இப்போதும் இவரை நினைக்கிறேன். இதற்கு நேரம், காலம், மணி இதெல்லாம் எதுவும் கிடையாது.

(19.02.1989)

You might also like