இடையில் கொஞ்சம் இடைவெளி விட்ட மாதிரி இருந்தது.
இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டது கொரோனா அலை.
இப்போது ‘டெல்டா” வைரஸ் என்கிறார்கள். கொரோனா முன்பு பரவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே சீனாவில் மீண்டும் உக்கிரமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது கொரானா வைரஸ்.
இவ்வளவுக்கும் சீனா முழுக்க சுமார் 76 சதவிகித மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. தற்போது அதையும் மீறியும் இந்தப் பரவல்.
சீனாவின் வடக்குப் பகுதியில் கொரோனா பரவத்துவங்கியிருப்பதால் அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. வீடுகளை விட்டு மனிதர்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 11 மாகாணங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகச் சொல்லப்படுவதால், அந்த மாகாணங்களில் இருந்து பெய்ஜிங்கிற்கு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
சிறு குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதை சீன அரசு வற்புறுத்தினாலும், அங்குள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடத்தயங்குகிறார்கள்.
ஏற்கனவே சீனாவில் பரவ ஆரம்பித்த பிறகு தான் உலக நாடுகள் பலவற்றிற்குக் கொரோனா பரவியதை ஒட்டித் தற்போது சீனாவில் மீண்டும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
அதோடு ரஷ்ய நாட்டிலும் கொரோனா பரவிக் கொண்டிருப்பதை அடுத்துச் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அரசு.
இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக நம்பப்பட்டாலும், இன்னும் பாதிப்பு விட்ட பாடாக இல்லை.
குறிப்பாக தமிழ்நாட்டுக்கு மிக அருகில் இருக்கிற கேரளா கொரோனா விஷயத்தில் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
இங்கு தான் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம்.
தற்போது கூட அங்கு ஒரே நாளில் ஏழாயிரத்து நூறு பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரே நாளில் 482 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள்.
இதுவரை கேரளாவில் மட்டும் கொரோனாவுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
தமிழ்நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.
முதலில் மழைக்காலம் துவங்கி தட்பவெப்ப நிலை மாறியிருக்கிறது. இது தொற்று பரவக் காரணமாகி விடலாம்.
இரண்டாவதாக அடுத்தடுத்து பண்டிகைக் காலம் நெருங்குகிறது. பல லட்சக்கணக்கானவர்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், பயணிப்பதற்குமான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
இதுவும் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம்.
பள்ளிகளையும் இந்தச் சந்தர்ப்பத்தில் திறந்திருக்கிறோம்.
பயணமோ, மக்கள் ஒன்று கூடலோ, எதுவாக இருந்தாலும், கொரோனா தடுப்புக்கான முன்னேற்பாட்டை எந்த அளவுக்கு நாம் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் கேள்வி.
தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிற பலர் முதல் டோஸை மட்டும் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது டோஸை இன்னும் பல கோடிப்பேர் செலுத்தவில்லை. செலுத்த முன்வரவில்லை.
இன்னொன்று டெல்லி போன்று சில அரசுகளும் பொதுவிடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் உடனடியாக விதிக்கப்படுகிற அபராதம் அங்குள்ளவர்களைக் கண்டிப்பாக அணிய வைக்கிறது.
மற்ற மாநிலங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் தண்டனை என்பது பெயரளவுக்கு மட்டுமே இருக்கிறது. தனி மனித இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது இயல்பான ஒன்றாக இல்லை.
மழைக்காலத்தில் கொரோனா அறிகுறிகள் தெரிய வந்த எந்தவொரு நபரும் தன்னைப் பரிசோதனைக்கு ஆட்படுத்திக் கொள்ளத் தயங்க வேண்டியதில்லை.
மாநில அரசுகளும் உண்மையாகவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தத் தயங்க வேண்டியதில்லை.
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பதைப் போல, உடல் நலத்தைப் பொருத்தவரை பாதிப்பை வெளிப்படுத்தினால் தான் நிவாரணம் கிடைக்கும்.
நம்மைப் பொருத்தவரை ஒரே வார்த்தை தான்.
எச்சரிக்கையாக இருப்போம்.
– யூகி