“ஒரு பருவத்தில் லக்னோ கொய்யா மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் கிடைக்கும். அதேபோல ஒரு பருவத்திற்கு முருங்கையில் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்” என்று மகிழ்ச்சியுடன் பேசும் புதுமை விவசாயி லஷ்மிகாந்த், இயற்கை விவசாயப் பணிகளுக்காகக் கர்நாடக அரசின் விருதுகளைப் பெற்றவர்.
கர்நாடக மாநிலம் கலாபுர்கியைச் சேர்ந்தவர் லஷ்மிகாந்த் ஹிபாரே, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். தன் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தை வளமான மண்ணாக மாற்றியுள்ளார்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு தரிசாகக் கிடந்த 3 ஏக்கர் நிலத்தைப் பயிர்கள் செழிக்கும் பசுமைத் தோட்டமாக மாற்றியிருக்கிறார் 41 வயதான லஷ்மிகாந்த்.
இயற்கை வழி வேளாண் முறையைப் பயன்படுத்தி 850 சந்தன மரங்கள், 800 முருங்கை மரங்கள், 225 ஜாவா ப்ளம் மரங்கள், 49 லக்னோ கொய்யா மரங்கள், 225 தாய் மொஸாம்பி மரங்கள், 225 சிவப்பு ஆரஞ்சு மரங்கள் மற்றும் 125 மகோகனி மரங்களைப் பயிரிட்டுள்ளார்.
பள்ளியில் படிக்கும்போது அவர், குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பத்தாம் வகுப்பை முடிக்கவில்லை.
“நான் பல வேலைகளைச் செய்தேன். அது என் வாழ்க்கையில் கடுமையான நேரம். ஒரு தட்டச்சராக வேலை செய்துகொண்டே, நிலத்தைச் சீர்செய்யும் பணிகளில் ஈடுபட்டேன்” என்று நினைவுகளை தூசு தட்டுகிறார் லஷ்மிகாந்த்.
இவர்கள் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். லஷ்மிகாந்த் தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத்திற்கு வந்து குடியேறியவர்.
“என் தந்தையிடம் 7 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் 3 ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்யும் நிலையில் இருந்தது.
பிறகு குடும்பச் சொத்து இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதில் எங்களுக்குத் தரிசு நிலம் மட்டுமே கிடைத்தது” என்கிறார் லஷ்மிகாந்த்.
கடந்த 2009-ல் நிலத்தைச் சீரமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். அதற்காக அவரை ஊரில் பலரும் கிண்டல் செய்துள்ளனர். அதில் எந்தப் பயிரும் விளையாது என்று மக்கள் நம்பினார்கள்.
ஆனால் அவருடைய விடா முயற்சி, கடும் உழைப்பு காரணமாகத் தரிசு நிலம் பசுமைத் தோட்டமாக மாறியது.
முதலில் நிலத்தில் அடிப்படைப் பணிகளைச் செய்தார் லஷ்மிகாந்த். பின்னர் மண்ணை ஆய்வு செய்து, அதற்கேற்ற சத்துக்கள் மற்றும் உரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
பின்னர் அவர் இயற்கை வேளாண்மை மற்றும் இயற்கை உரங்களின் முக்கியத்துவம் பற்றி உணர்ந்தார். ஆரம்பத்தில் வேதி உரங்கள் பயனளித்தாலும், அதிகப் பணம் செலவானது.
“நிலத்தை மேம்படுத்துவதற்கு எனக்கு இயற்கை உரங்கள்தான் முக்கியம் எனத் தோன்றியது” என்கிறார் லஷ்மிகாந்த்.
பிறகு கிருஷி விக்யான் கேந்திராவின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ராஜூ டெக்காலியைச் சந்தித்துப் பேசினார்.
தரிசு நிலத்தில் விவசாயம் செய்வது தொடர்பான அறிவியல்பூர்வமான பல ஆலோசனைகளை வழங்கினார். பெருமரங்களுக்கு இடையில் பழமரங்களையும் காய்கறிகளையும் பயிரிட்டார்.
நிலம் இருக்கும் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால், சொட்டு நீர்ப் பாசனத்தைப் பின்பற்றினார். நீர்ப் பாசனத்தில் மாற்று வழிகளைக் கடைப்பிடித்ததால், அவருக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.
நிலத்திலிருந்த குளத்தைப் புதுப்பித்தார். ஒரு போர் வெல்லையும் அமைத்துக்கொண்டார் லஷ்மிகாந்த். பண்ணையில் உள்ள இலை தழைகளைச் சேகரித்து இயற்கை உரங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். அதனால் மரங்களும் பயிர்களும் செழித்து வளர்ந்தன.
“ஒரு விவசாயியாக இருக்கும்போது, வருமானத்தைப் பெருக்க வேறு வழிகளையும் தேட வேண்டும். நர்சரி தொடங்கியிருக்கிறேன்.
கோழி மற்றும் தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறேன். இதெல்லாம் என் குடும்பத்திற்குக் கூடுதல் வருமானமாக இருக்கிறது” என்று விவரிக்கும் லஷ்மிகாந்த், தன் பண்ணையில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பதற்கு வாட்ஸ் ஆப் குழுவைப் பயன்படுத்துகிறார்.
– பா. மகிழ்மதி