மத்திய அரசு கடந்த 2019 அக்டோபர் 2-ல் சிறார் பாலியல் கொடுமை உள்ளிட்ட பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,028 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து தமிழகம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 17 மாநிலங்கள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் விரைவு நீதிமன்றங்களை அமைத்துவிட்டன.
ஆனால், மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் ஒரு நீதிமன்றத்தைக் கூட அமைக்கவில்லை. மேற்கு வங்கத்திற்கு 123 விரைவு நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவாவிற்கு ஒதுக்கிய இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. “பாலியல் வழக்குகள் குறைவு என்பதால், அவற்றை விசாரிக்க தற்போதுள்ள நீதிமன்றங்களே போதும்” என, அருணாச்சல பிரதேசம் தெரிவித்துள்ளது.
பீஹாருக்கு ஒதுக்கிய 54 விரைவு நீதிமன்றங்களில் இதுவரை 45 தான் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல, மஹாராஷ்டிராவுக்கு ஒதுக்கிய 138 விரைவு நீதிமன்றங்களில் 33 தான் செயல்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், விரைவு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்கும்படி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.