கர்நாடக அரசுப் பள்ளிகளில் இலவச பால் பவுடர்!

கர்நாடக மாநிலத்தில் கேஷீரா பாக்யா திட்டத்தின்படி அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச பால் பவுடர் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா பரவல் காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக போக்குவரத்துப் பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மீண்டும் மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பால் பவுடர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசிகலா ஜோலி, குழந்தைகள் ஊட்டச்சத்துத் திட்டத்தை ஆராய்ந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலம் முழுவதும் 4.47 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பதாகவும், அதில் 7,751 குழந்தைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

“குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை எப்படி சமநிலைக்குக் கொண்டுவருவது மற்றும் அதை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்.

ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சனைகளால் ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்னைகளை  ஒவ்வொன்றாக தீர்த்துவருகிறோம்” என்றார் சசிகலா ஜோலி.

சில மாதங்களுக்கு முன்பு மாநில அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், இலவச பால் விநியோகம் தற்காலிகமாக மீண்டும் தொடங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் ஒவ்வொரு பள்ளி மாணவருக்கும் இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 கிராம் பால் பவுடர் வழங்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட  2020 மார்ச் முதல் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. போக்குவரத்து பிரச்சனைகளால், அரசுப் பள்ளிகளுக்கு வழக்கம்போல இலவச பால் பவுடர் விநியோகம் செய்யமுடியவில்லை.

மீண்டும் நடைமுறைக்கு வரும் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 51 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படித்துவரும் 56,64,873 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.

ஏற்கெனவே மாநில அரசு ஆறு வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைகளுக்கு அங்கன்வாடிகள் மூலம் இலவச பால் பவுடர் விநியோகத்தைத் தொடங்கிவிட்டது. இங்குள்ள 64 ஆயிரம் அங்கன்வாடிகளில் 39 லட்சம் குழந்தைகள் உள்ளனர்.

குழந்தைகள் நல ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் வேண்டுகோளை ஏற்று கர்நாடக அரசு கேஷீரா பாக்யா பால் பவுடர் விநியோகத் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமய்யா முதல்வராக இருந்த காலத்தில் 2013 ஆம் ஆண்டு பள்ளிக் குழந்தைகளுக்குப் பால் பவுடர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பா. மகிழ்மதி

You might also like