அது ஒரு ஓவியக் காலம்…!

“நடிகன், பேச்சாளர் என்று பல நிலைகளை இன்று நான் தொட்டிருந்தாலும் பால்யத்திலிருந்தே என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது ஓவியக்கலை தான்” – சொல்லும்போதே நெகிழ்வு இழையோடுகிறது சிவகுமாரின் பேச்சில்.

கே.ஆர்.பழனிச்சாமி என்கிற ஓவியராகத் துடிப்புடன் கழிந்த அந்த ஓவிய நாட்களை அவர் நினைவுகூரும்போது எவ்வளவு பசுமை!

“எங்க கிராமமான காசிக்கவுண்டன்புதூரில் அப்போது சரியான சாலை வசதி கூட இல்லை. மின்சார வசதியும் இல்லை. முறையான பள்ளியும் இல்லை. ஊரில் அப்போது ஜனத்தொகையே இருநூறுக்குள் தானிருக்கும்.

அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திண்ணையில் மணலை அள்ளிக் கொண்டுவந்து அங்கே தான் என் விரலை இழுத்து வைத்து அ, ஆ என்று எழுதிப் பழக்கினார்கள்.

சிலேட்டில் எழுத ஆரம்பிக்கும் முன்பே ஆடு, மாடு, நாய், ரயிலை எல்லாம் வரைந்தது ஞாபகத்தில் இருக்கிறது.

பிறகு பள்ளியில் சேர்ந்தபிறகு சயின்ஸ் வகுப்பில் மனித முதுகுத்தண்டின் படத்தை வரையச் சொல்வார்கள். அதைப் பல்பல்லாக விரைவாக வரைந்து விடுவேன். கூட இருந்த மற்ற மாணவர்களுக்கும் வரைந்து கொடுப்பேன்.

பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் கலந்து கொண்டிருந்தாலும் முதல் பரிசு கிடைக்கவில்லை. இரண்டாம் பரிசு கிடைத்திருக்கிறது. அப்போதே நிறையத் தோல்விகளைச் சந்தித்திருக்கிறேன்.

அது கூட அப்போது இயல்பாகப் பழகிப் போய்விட்டது. வகுப்பில் படிப்பில் ஐந்தாவது அல்லது ஆறாவது ரேங்க்.

அப்போதே எதையும் மனதில் அப்படியே கிரகித்துக் கொள்கிற இயல்பு இருந்ததால் படித்தவற்றை அப்படியே மனப்பாடமாய்த் தங்குதடையில்லாமல் சொல்வேன். ஆனாலும் அதை என்னுடைய சிறப்புத் தகுதியாக நினைக்கவில்லை.

குமாரசாமி என்கிற ஆசிரியர் தான் எனக்குக் கைகாட்டி மரம். நான் வரைந்து வைத்திருந்த ஓவியங்களை எல்லாம் பார்த்துவிட்டு ஓவியக் கல்லூரியில் சேரச்சொன்னவர் அவர் தான்.

கல்லூரியில் பி.எஸ்.சி. வகுப்பில் சேருவதற்கு நான் தயாராகி விட்டேன். அப்போது என்னை மனமாற்றம் செய்தவர் அவர்.

ஊரில் ஒரு இடத்தில் சினிமா போஸ்டர்கள் ஒட்டுவார்கள். ராமராஜ்யம், சந்திரலேகா படப் போஸ்டர்களை வியந்து பார்த்திருக்கிறேன்.

அதைப் பார்க்கும்போது கண நேரத்திற்கு சினிமா ஒரு கனவைப் போல மனதுக்குள் வந்துபோகும். அப்போது ஆசிரியர் குமாரசாமிக்கு பேசும்படம், குண்டூசி போன்ற பத்திரிகைகள் வரும். அதில் சிவாஜி, அஞ்சலிதேவி படங்கள் எல்லாம் முழுப்பக்கத்தில் வந்திருக்கும்.

அதை என்னிடம் படிக்கக் கொடுப்பார் அவர், அதைப் பார்த்து அப்படியே பேப்பரில் வரைவேன். அவரவர் அனாட்டமியை உற்றுக் கவனித்து வரைந்திருப்பேன். அதைப் பார்த்துவிட்டு சிலாகிப்பார் குமாரசாமி.

அப்போது எம்.ஜி.ஆரின் தோற்றம் அவ்வளவு அழகாக இருக்கும். சுருண்ட கிராப் தலை. களையான முகம். அவருடைய படம் எங்க கிராமத்தில் உள்ள சலூன் கடையில் தொங்கிக் கொண்டிருக்கும்.

அதற்காகவே அங்கு முடிவெட்டிக் கொண்டு கடைக்காரரிடம் அந்தப் படத்தைக் கெஞ்சிக்கேட்டு வீட்டுக்கு வந்து அதைப் பார்த்து வரைந்தேன். பார்த்தவர்கள் பாராட்டினார்கள்.

ஓவியர் சந்தனு என்கிற கார்ட்டூனிஸ்ட் அப்போது குமுதத்தில் படம் வரைந்து கொண்டிருந்தார்.

அதோடு தபால் மூலம் ஓவியங்களும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். தபால் மூலம் ஓவியப் பாடங்களை அனுப்புவார், அதன்படி நான் வரைந்து அனுப்புவேன்.

விரல்களைக் கூட நுணுக்கமாக நான் வரைந்ததைப் பார்த்த அவர் “அடேய்.. நீ எங்கிருக்கிறாய்?’’ என்று கேட்டிருந்தார்.

அவர் சொல்லிக் கொடுத்த பாடத்தை மீறி நான் படம் வரைந்த விதம் அவருக்குப் பிடித்திருந்தது. வெளிப்படையாகப் பாராட்டினார்.

போஸ்டர் கலருக்கான வர்ணங்களை வாங்கித் தபாலில் அனுப்புவார். கோட்டோவியங்களை இந்தியன் இங்க்கில் வரைய ஆரம்பித்து விட்டேன். டிராயிங் நோட்டில்தான் அநேகப் படங்களை வரைந்திருக்கிறேன்.

சில்பியின் ஓவியங்களும் பிடிக்கும். பல இடங்களுக்குச் சென்று கோடுகளால் தத்ரூபமாக வரைந்திருப்பார். அதே மாதிரியே காந்தி, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்களை வரைந்திருக்கிறேன்.

இப்போதும் அந்தக் காலத்தில் வரைந்த படங்களைப் பார்க்கும்போது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. விரல்களில் ஓவியத்திற்கான லாவகம் கூடியிருப்பதை உணர முடிகிறது.

(தொடரும்…)

சந்திப்பு : மணா

You might also like