பருந்துகள் வாழ்வதற்காக காடு வளர்த்த ‘மனிதர்’!

நாகலாந்து மாநிலம், லாங்லெங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் நுக்லு போம். காடுகளும் வனவுயிர்களும் நிறைந்த பகுதியில் பிறந்து வளர்ந்த நுக்லுவுக்கு இயற்கையின் முக்கியத்துவம் புரியும்.

மூதாதையர்கள் காட்டை நம்பித்தான் வாழ்ந்தார்கள். வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை மூதாதையர்கள் அறிந்திருந்தனர்.

எதிர்காலத் தலைமுறையினரைப் பற்றி கவலைப்பட்ட தாத்தாவின் சொற்கள் நுக்லுவின் காதுகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தன.

“அவருடைய இழப்புக்குப் பிறகு அதன் உண்மையை அறிந்தேன். படிப்பு முடிந்து 2010ல் கிராமத்துக்குத் திரும்பியதும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கும் ஒரு குழுவில் இணைந்தேன்.

அதில் 7 ஆண்டுகள் கற்பிக்கும் பணி செய்த அனுபவத்தில் சொந்த அமைப்பை உருவாக்கினேன்” என்கிறார் நுக்லு போம்.

மரங்கள் நடுதல், வேட்டையைத் தடுத்தல் மற்றும் சமூகக் காடு வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தல் போன்ற பணிகளைச் செய்து, பருந்துகளின் வாழ்விடங்களை அதிகரிக்கும் இலட்சியத்துடன் லெம்சக்சென்லாக் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.

குழந்தைப் பருவத்தில் தனது தாத்தாவுடன் காடுகளுக்குச் சென்று பறவைகளுக்குப் பெயரிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் நுக்லு. டீன் ஏஜ் பருவத்தில் பறவைகளின் எண்ணிக்கை குறைவதைக் கண்டார்.

இங்குள்ள பருந்துகளின் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கு ஆயிரக்கணக்கான மரங்களை நடுவதற்காகவும், வேட்டையைத் தடுப்பதற்காகவும், சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் தன் இளமை முழுவதையும் அவர் செலவழித்துள்ளார்.

யோங்கிம்சென் கிராமத்தில் வாழும் நுக்லு போமுக்கு பிரிட்டனைச் சேர்ந்த விட்லி பண்ட் பார் நேச்சர் அமைப்பில் விட்லி விருது வழங்கப்பட்டது. அது கிரீன் ஆஸ்கார் விருது என அழைக்கப்படுகிறது.

“நாகலாந்தைச் சுற்றியுள்ள 50 கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ளது பல்லுயிர் அமைதி நடைபாதைத் திட்டம் (Biodiversity Peace Corridor – BPC). மாற்று வாழ்வாதாரத்தில் மக்களை ஈடுபடுத்துவதன் மூலம் காடு சுரண்டப்படுவதைத் தடுக்கமுடியும். இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிரச்னைகளைத் தீர்க்கும்.

இதனால் நிலம் மற்றும் நீர் பயன்பாட்டிற்காக சமூகங்களுக்கு இடையே நடக்கும் சச்சரவுகளும் முடிவுக்கு வரும். மூன்று கிராமங்களில் பல்லுயிர் அமைதி நடைபாதைத் திட்டத்தின் நேர்மறை விளைவுகளைப் பார்த்துவிட்டோம்” என்கிறார் நுக்லு போம்.

நாகலாந்தில் 1000 ஹெக்டேர் நிலப்பரப்பு மரங்கள் நடுவதற்காகவும் பருந்துகளின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது.

அவரது திட்டம் தொடங்கிய 2007 ஆம் ஆண்டிலிருந்து பருந்துகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்திலிருந்து ஒரு மில்லியனாக சட்டென உயர்ந்தது.

நுக்லுவின் சுற்றுச்சூழல் சேவையையும் விருது பெற்றதையும் பாராட்டி நாகலாந்து முதல்வர் நேய்ப்யூ ரியோ, ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

முதியவர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்களுடன் சேர்ந்து இயங்கியது நுக்லுவின் லெம்சக்சென்லாக் அமைப்பு.

காடுகளில் காணப்பட்ட பல பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டனர். நாகலாந்து வனப்பகுதியில் வாழும் மக்களிடைய சுற்றுச்சூழலுக்கு எதிரான மனப்போக்கு காணப்பட்டது.

அங்குள்ள காடுகள் அல்லது ஆறுகள்கூட தனிப்பட்ட மனிதர்கள் மற்றும் இனக் குழுக்களுக்குச் சொந்தமாக இருந்தன.

நாகலாந்தின் விவசாய சமூகங்களிடம் அக்கறையுடன் பேசி பாரம்பரிய விவசாயத்தின் பக்கம் அவர்களைத் திருப்பினார் நுக்லு.

பணப்பயிர்களுக்குப் பதிலாக மா, பலா என பல்வேறு வகையான மரங்களைப் பயிரிட ஊக்குவித்தார்.

சில பகுதி மரங்களை பருந்துகள் மற்றும் இருவாட்சிப் பறவைகளுக்காக ஒதுக்கினார். நுக்லு போமின் சுற்றுச்சூழல் சேவையைப் பாராட்டி ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியன் பல்லுயிர்ச் சூழல் விருது வழங்கி கெளரவித்தது.

பா. மகிழ்மதி

You might also like